Published:Updated:

`வயலில் இறங்கி நெல் நாற்றுகளை விதைத்த குழந்தைகள்!’ - அசத்திய தமிழக அமைச்சரின் பள்ளி

வயலில் நாற்று நடும் குழந்தைகள்
வயலில் நாற்று நடும் குழந்தைகள்

உணவு எப்படி உருவாகிறது. அதைத் தயாரிப்பது எவ்வளவு சிரமம். என்பதைக் குழந்தைகளுக்குக் காட்டினால் அவர்கள் உணவை வீணாக்க மாட்டார்கள் என நினைத்தோம்.

அந்தக் குழந்தைகளுக்கு சுமார் நான்கு, ஐந்து வயதுதான் இருக்கும். இந்த உலகைப் பற்றிய எந்தவித புரிதலும் இல்லாத மழலைப் பிஞ்சுகள் அவர்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் சுமார் 50 பேர், விவசாய நிலத்தில் சேற்றினுள் இறங்கி நெல் நாற்றுகளை நடுவது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவியது.

Vikatan

யார் அந்தக் குழந்தைகள் என விசாரித்தபோது, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள `ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் மாண்டிசோரி பிளே வே ஸ்கூல்’ என்பது தெரியவந்தது.

இதையடுத்துப் பள்ளியின் தாளாளர் அம்பிகாவிடம் பேசினோம். ``கல்வியை வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாது. கல்வி மீதான ஆர்வத்தைத் தூண்டினால், தானாகவே குழந்தைகள் படிப்பார்கள் என நினைக்கிறோம். குழந்தைகளுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் வகையில் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குழந்தைகளையே காம்பியரிங் செய்ய வைப்பது போன்றவற்றைச் செய்கிறோம். அதோடு எங்கள் பள்ளியில் படிக்கும் சுமார் 90 குழந்தைகளையும் மாதத்துக்கு ஒருமுறை வெளியில் அழைத்துச் சென்று செயல்முறைக் கல்வியைக் கற்றுக் கொடுக்கிறோம்.

ஆன்லைனில் வைரலான செய்தி
ஆன்லைனில் வைரலான செய்தி

அந்தவகையில், கோபிசெட்டிபாளையத்துக்கு அருகில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடவுளான வைஷ்ணவி தேவி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு குழந்தைகளை சூரிய நமஸ்காரம் உட்பட 12 ஆசனங்களை செய்யச் சொல்லிக் கொடுத்தோம். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, ரயில்வே நிலையம் மற்றும் அதன் சுகாதாரம் குறித்து நேரடியாக குழந்தைகளுக்கு விளக்கினோம். அதன்வரிசையில் தான், குழந்தைகளுக்கு உணவு மற்றும் விவசாயத்தின் மீதான விழிப்புணர்வைக் கொடுக்க நினைத்தது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று நாற்று நட வைத்திருக்கிறோம்” என்றார்.

மேலும் தொடர்ந்தவர், ``சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பலர் இருக்கும் இதே நாட்டில்தான், உணவை வீணாகக் குப்பையில் கொட்டும் நபர்களும் இருக்கின்றனர். பள்ளிகளில் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு உணவு எப்படி உருவாகிறது. அதைத் தயாரிப்பது எவ்வளவு சிரமம் என்பதை நேரடியாகக் காட்டினால் அவர்கள் உணவை வீணாக்க மாட்டார்கள் என நினைத்தோம். கையில் நெல் நாற்றுக்களைக் கொடுத்ததும் என்ன செய்வதென தெரியாமல் முழித்தவர்கள், எப்படி நாற்று நடுவது என விவசாயிகள் சொல்லிக் கொடுத்ததும் கடகடவென அருமையாக நட்டனர்.

வயலில் நாற்று நடும் குழந்தைகள்
வயலில் நாற்று நடும் குழந்தைகள்

`இன்னும் கொடுங்க மிஸ் நான் நடுறேன்னு’ குழந்தைங்க உற்சாகமானது மட்டுமல்லாமல், ‘நான் நட்டதுல அரிசி வருமா மிஸ்... பச்சையா இருக்கிற இதை நட்டா, எப்படி சாப்பாடு வெள்ளையா வருது..' என நிறைய கேள்விகளைக் கேட்டு மலைக்க வைத்தனர். `வீட்டுக்குப் போகலாம் வாங்க'ன்னு கூப்பிட்டும் வயலைவிட்டு வரமாட்டேன்னு குழந்தைகள் அடம் புடிச்சாங்க. கடைசியில பம்பு செட் தண்ணியில குளிக்கலாம்னு சொன்னதும்தான் வயலை விட்டு மேல ஏறுனாங்க. உணவை வீணாக்காமல் சாப்பிடணும்னு குழந்தைங்க மனசுல பதிய வைக்கணும்னுதான் நினைச்சோம்.

ஆனா, அந்த நிகழ்வுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், `என் குழந்தை இப்ப சாப்பாடு வேணாம்னு அடம் பிடிக்கிறதே இல்லை. சாப்பாட்டை வீணாக்காம சாப்பிடுறதோட, எங்ககிட்டயும் சாப்பாட்டை வீணாக்காதீங்கன்னு அறிவுரை சொல்றாங்க’ எனச் சொல்ல எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். குழந்தைங்க புரிஞ்சிக்கிட்டா போதும்தான் நினைச்சோம். ஆனா, அவங்க மற்றவர்களுக்கே அறிவுரை சொல்ற அளவுக்கு மனசுல ஏத்திப்பாங்கன்னு நாங்க நினைக்கலை” என்றார்.

குழந்தைகளின் இந்தச் செயலைக் கேள்விப்பட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பாராட்டியதோடு, குழந்தைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் கொடுக்கவும் சொல்லியிருக்கிறாராம். இந்தப் பள்ளி தமிழகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நடத்தி வரும் பள்ளி.

வயலில் நாற்று நடும் குழந்தைகள்
வயலில் நாற்று நடும் குழந்தைகள்

இந்த நிகழ்வு வெளியே வைரலாகப் பரவிய பிறகுதான், நம் பள்ளியில்தான் இது நடந்ததென அமைச்சருக்கே தெரிந்ததாம். வளரும் தலைமுறைகளுக்கு வெறும் பாடத்தை மட்டும் கற்றுக் கொடுக்காமல், விவசாயம் மற்றும் சூழல் சார்ந்தவற்றையும் பள்ளிகளில் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு