Published:Updated:

`கஷ்டத்தைச் சொன்னோம்... கரம் கொடுத்தார்கள்!' - மீண்டெழும் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்

`தமிழ்வழிக் கல்வியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தாய்தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்ற உதவிகள் செய்யப்பட வேண்டும்’ - கல்வியாளர் பிரபா கல்விமணி.

குழந்தைகளுக்குத் தாய்மொழிக் கல்வி அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. பேராசிரியர் பிரபா கல்விமணியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழகத்தில் தாய்தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தாய்த் தமிழ் உயர்நிலைப் பள்ளிகள் 2, தாய்த் தமிழ் நடுநிலைப் பள்ளி 1, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 18 என தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மொத்தம் 21 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 2,022 மாணவ, மாணவிகள் பயின்று வரும்நிலையில், 139 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்தப் பள்ளிகளில் பயின்றுவரும் பெரும்பாலான மாணாக்கர்களின் பெற்றோர்கள் ஏழ்மைநிலையில் இருப்பவர்கள். அதைக் கருத்தில்கொண்டு மிகவும் குறைவான தொகையே அவர்களிடமிருந்து கட்டணமாகப் பெறப்படுகிறது. கொரோனா சூழலால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருக்கும் இந்தப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு ஊதியம்கூட அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

தாய்த் தமிழ்ப் பள்ளி
தாய்த் தமிழ்ப் பள்ளி
Facebook

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் பேசினோம். இவர் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ``1990-களில் பலர் கல்வி நிறுவனங்கள் தொடங்க விருப்பம் தெரிவித்த காலகட்டத்தில், தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதாவது, பள்ளிகளைத் தொடங்க விருப்பமுள்ளவர்கள், தங்களது நிதி ஆதாரங்களில் பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ளலாம். ஆனால், அரசிடமிருந்து எத்தகைய நிதியும் கிடைக்காது என்பதுதான் அந்த உத்தரவு. எதனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றால், 1950-களில் காமராஜர் காலம் தொடங்கி தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்காலங்களில் எங்கெல்லாம் அரசுப் பள்ளிகள் இல்லாமல் இருந்தனவோ, அங்கெல்லாம் தனியார் பள்ளிகள் தொடங்கினால் அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசே வழங்கும். இவை அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் என்றழைக்கப்பட்டன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களின் அடர்த்தி அதிகமாக இருந்தநிலையில் இங்கு பள்ளிகள் தொடங்க வேண்டிய உடனடித் தேவை இல்லை என்பதால் 1990-களில் அரசு இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்தது.

Vikatan

அதன்பிறகு பலர் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பள்ளிகளைத் தொடங்கினர். தமிழ் மேல் ஆர்வம் கொண்ட சிலர், தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பள்ளிகளை ஆரம்பித்தனர். இதில், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பள்ளிகள் மிக மிக வேகமாக வளர்ந்தன. ஆங்கில மோகம், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்தால், கல்லூரிகளில் படிப்பு எளிது என பெற்றோர்கள் நம்பியது போன்றவை இதற்குக் காரணம். அதேநேரம், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தன.

இளமைக் காலத்தில் தாய்மொழி வழியில் கல்வி பயின்றால் மட்டுமே கல்வி எளிதாக மனதில் பதியும் என்பது உலகின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது. இருந்தும், தமிழகத்தில் ஆங்கில மொழி வழி கற்பிக்கும் பள்ளிகள் வளர்ச்சி அளவுக்கு தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இல்லை. குழந்தைகளுக்குத் தாய்மொழிக் கல்வி அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

பேராசிரியர் பிரபா கல்விமணியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழகத்தில் 21 பள்ளிகள் செயல்படுகின்றன. கொரோனா சூழல் இந்தப் பள்ளிகளைக் கடுமையாக நிதிச் சுமையில் தள்ளியிருக்கின்றன. இதனால், தொடர்ந்து இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. மிகக்குறைவான கட்டணத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் ஒரு வருடத்துக்கு ஆசிரியர்களுக்கான ஊதியம் மட்டும் 1.80 கோடி ரூபாய் செலவாகிறது.

பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.
பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

தமிழ்வழிப் பள்ளிகளுக்கு உதவும் வகையில், முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தோம். அதன்பின்னர், வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை (FeTNA) உறுப்பினர்கள் முயற்சி எடுத்தனர். இதற்காக தனிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, நிதி திரட்டி இந்தப் பள்ளிகளுக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், தமிழக அரசு 1990-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் இருந்து தமிழ்வழிப் பள்ளிகளுக்கு விலக்கு அளித்து, அந்தப் பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ஆதாரங்கள், உதவி போல் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு இயங்கும் பள்ளிகளுக்கும் செய்யும் வகையில் அரசு விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இது நமது தாய்மொழி தமிழுக்குச் செய்யும் தொண்டு’’ என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து கல்வியாளரும் பேராசிரியருமான பிரபா கல்விமணியிடம் பேசினோம். ``தமிழ்வழிக் கல்வியை முன்னிறுத்தி பெருஞ்சித்திரனார், தியாகு போன்றோர் 1995-96 ஆண்டு காலகட்டத்தில் தாய்தமிழ்ப் பள்ளிகள் பல இடங்களில் தொடங்கினர். தமிழ்வழிக் கல்விக்காக சென்னையில் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் உள்பட தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் உணர்வாளர்களால் லாபநோக்கமில்லாமல் முன்னெடுக்கப்பட்டவைதான் தாய்தமிழ்ப் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் பயின்றுவருவது ஏழை, எளிய பிள்ளைகள்தான். வாய்ப்பு, வசதிகள் இருப்பவர்கள் இல்லை. பள்ளிகளை நடத்த வேண்டும் என்பதற்காக மாணவர்களிடம் மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். கொடுக்காவிட்டாலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தமாட்டார்கள்.

பேராசிரியர். பிரபா கல்விமணி
பேராசிரியர். பிரபா கல்விமணி

2004 கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு பள்ளிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அப்போது 70, 80 பள்ளிகள் வரை செயல்பட்டு வந்தன. இடம் உள்ளிட்ட பிரச்னைகளால் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து, 21 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆங்கில மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததைப் போல், தாய்த்தமிழ்ப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை குறைந்தது. விதிவிலக்காக திருப்பூர், சென்னை தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆரோக்கியமாக இருக்கிறது. பள்ளிகளை இயங்கவே மிகவும் சிரமப்பட்ட நிலையில், வட அமெரிக்க தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உதவ முன்வந்தன. அமைச்சர், தலைமைச் செயலாளர் போன்றோர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். இவற்றை அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இந்தப் பள்ளிகளைத் தற்போது நடத்தி வருபவர்கள், தங்கள் சொத்துகளை விற்று, கடன் வாங்கி பள்ளிகளை நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அந்தப் பள்ளிகளும் ஏழை, எளியோர்களின் பிள்ளைகள்தான் படிக்கிறார்கள். தமிழகத்தில் 40 சதவிகிதம் அரசுப் பள்ளி மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், 25 சதவிகிதம் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். தமிழ்வழிக் கல்வியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தாய்தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்ற உதவிகள் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தாய்மொழிக் கல்வி முக்கியத்துவம் பெறும். அரசு இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்’’ என்றார்.

தாய்த் தமிழ்ப் பள்ளி
தாய்த் தமிழ்ப் பள்ளி
Facebook

தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவுவதற்காக ஃபெட்னா அமைப்பு ஏற்படுத்தியுள்ள குழுவுக்கு பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவின் முதல் கூட்டத்தில் அவர் சார்பில் 5,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஃபெட்னாவின் மற்ற உறுப்பினர்கள் நிதியுதவியோடு தாய்த்தமிழ்ப் பள்ளிகள் மீண்டெழும் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு