Published:Updated:

`உரிமை பறிபோகும்; கல்வி சிதைந்துபோகும்!'- புதிய கல்விக் கொள்கை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

கலைநிகழ்ச்சிகள்
கலைநிகழ்ச்சிகள்

``புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டால், இந்தியாவில் உள்ள தற்போதைய கல்வி முறை சிதைந்துபோகும்" என்று எச்சரித்துள்ளார், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி.

பறையிசை, கலைநிகழ்ச்சிகள் முழங்க திருச்சியில் கல்வி உரிமை மாநாடு தொடங்கியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கல்வி உரிமை மாநாடு, தாரை தப்பட்டை, கலைநிகழ்ச்சிகள், திரைக்கலைஞர்கள், நீதிபதிகள் உரை நிகழ்த்த கோலாகலமாக நடந்துவருகிறது.

இந்த மாநாட்டுக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என சமூக ஆர்வலர்கள் திரண்டுவருகிறார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர்கள் பறையிசை முழங்க, கல்விஉரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், நீட் தேர்வில் பாதிக்கப்பட்டு உயிரைமாய்த்துக் கொண்ட மாணவிகள் புகைப்படங்களைச் சுமந்தும், திருச்சி, பெரம்பலூர் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடர்ஏந்தி பேரணியாக வந்தவர்களுக்கான சுடரேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகள்
கலைநிகழ்ச்சிகள்

அடுத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கெளரவ தலைவர் தமிழ்ச்செல்வன், செயல்தலைவர் நந்தலாலா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன்ரெட்டி ஆகியோர் சகிதமாக நிகழ்ச்சி தொடங்கியது.

மேடையில் பேசிய கவிஞர் நந்தலாலா, “கல்வியால் சிக்கல் வந்த போதும், கல்வியில் சிக்கல் வந்தபோதும், கல்விக்கே சிக்கல் வந்தபோதும் அதைத் தீர்க்க முதல் குரல் தமிழகத்திலிருந்தே எழும். அதற்குக் காரணம், கையில் தடி இருக்கும் முகத்தில் தாடி இருக்கும். அவர்தான் பெரியார். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. இந்தியாவிற்கு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை எனும் ஆபத்தை தமிழகம் ஒருமித்த கருத்தோடு எதிர்க்கிறது” என்றார்.

அடுத்து பேசிய தமிழ்ச்செல்வன், “தேசிய கல்விக்கொள்கை - 2019-ல் சில திருத்தங்கள் செய்து, அதைக் கொண்டுவர அனுமதிக்கலாமே என சில அப்பாவிகள் கூறுகிறார்கள். பா.ஜ.க கொண்டு வந்ததாலேயே இதை எதிர்க்கிறீர்களா ? எனச் சிலர் கேட்கிறார்கள். இதன் அடிப்படையில் நாம் இதை எதிர்க்கவில்லை. பா.ஜ.க கொண்டுவருவதையெல்லாம் எதிர்ப்பது நல்லதுதான். ஏனெனில், இதுவரை அவர்கள் நிறைவேற்றிய மசோதாக்கள் எல்லாம் அப்பாவி மக்களுக்கு எதிராக உள்ளன.

அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்

அதன் தொடர்ச்சியாகவே நாம் இந்த கல்விக்கொள்கை வரைவையும் அணுகுகிறோம். தற்போதிருக்கும் கல்வி முறையின் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவை சிறப்பாக உள்ளன. ஆனால், அதை மாற்ற முன்வைக்கப்படும் அனைத்துமே கல்வி கற்கும் குழந்தைகளின் படைப்பாற்றலைச் சிதைக்கும் விதமாக உள்ளது. இந்திய ஆட்சியாளர்கள் போற்றும் அமெரிக்காவிலே, தேசிய அளவிலான கல்விக்கொள்கை இல்லை. அங்கே, மாநிலங்கள்தான் கல்விக்கொள்கையை முடிவுசெய்கின்றன.

இங்கிலாந்தில் தேசிய கல்விக்கொள்கை இருந்தாலும், அதை மாநிலங்கள் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற திணிப்பு இல்லை. இதற்கு முன் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கைகளும்கூட, மாநிலங்களின்மீது திணிக்கப்படவில்லை. ஆனால் இந்த வரைவு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மீதும் திணிக்கப்பட்டிருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் நாடான பின்லாந்தில், கே.ஜி வகுப்புகள் என்பது குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இயங்குகின்றன.

சுடரேந்தல் நிகழ்வு
சுடரேந்தல் நிகழ்வு

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கே.ஜி வகுப்புகள் பள்ளிக் கல்விக்காக குழந்தைகளைத் தயார்செய்யும் இடங்களாகவே இருக்கின்றன. ஆகவே, இந்த வரைவை 100 சதவிகிதம் எதிர்க்கிறோம். இது, நம் குழந்தைகளின் குரல்வளையை நெறிக்கின்ற வரைவு. இந்தியக் குழந்தைகளின் கல்வியை அழிக்கும் மரண சாசனமே இந்த தேசிய கல்வி வரைவு” என முடித்தார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தொலைநோக்கு சிந்தனையுடன் அணுகும் இயக்கம் தி.மு.க. அந்த வகையில்தான் சமச்சீர்க் கல்வியை கருணாநிதி கொண்டுவந்தார். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் புதிய கல்விக்கொள்கை வெளியானதும், பத்துக்கும் மேற்பட்ட அறிஞர்களின் கருத்துகளையும் ஆய்வறிக்கைகளையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பிய இயக்கம், தி.மு.க மட்டும்தான்” என்றார்.

K. N. Nehru
K. N. Nehru

இறுதியாகப் பேசிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, "1960-ல் இந்தியாவில் கோத்தாரி கல்வி ஆணையம் அறிவிக்கப்பட்டது. அந்த கமிட்டியின் பரிந்துரைகளை இதுவரை அரசு செயல்முறைப்படுத்தவில்லை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில், இந்தியாவில் கல்வியை வரையறுக்கும் குழுவின் தலைவராக பிரதமர் இருப்பார். அடுத்து, அந்தக் குழுவில் நாட்டில் சில முதல்வர்கள் இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதல்வர்களும் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் மக்களின் பிரதிநிதிகள், அப்படிப்பட்ட முதல்வர்கள்கூட அந்தக் குழுவில் இணைய முடியாது என்றால், இது எப்படி ஜனநாயக முறையாக இருக்கும்? நான் வழக்கறிஞராகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன். இந்த புதிய கல்விக்கொள்கை, முழுக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மக்களுக்கும் விரோதமானது.

இந்தக் கொள்கை, முழுக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது. கல்வி எப்போதும் மக்களின் மேம்பாட்டை கருத்தில்கொண்டு வரையறுக்கப்பட வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட எந்த சிந்தனையும் இந்த கல்விக்கொள்கையில் இல்லை. இந்த கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், இந்தியாவில் உள்ள தற்போதைய கல்வி முறை சிதைந்துபோகும்” என்று எச்சரித்து முடித்தார்.

Supreme Court  former justice Sudarshan Reddy
Supreme Court former justice Sudarshan Reddy

தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் பா.இரஞ்சித், நடிகை ரோகிணி, கல்வியாளர்கள் கஜேந்திர பாபு, எம்.பி-க்கள் வெங்கடேசன், கனிமொழி உள்ளிட்டோர் எனப் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கல்விக்கொள்கை குறித்துப் பேச உள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்த கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவதால், அப்பகுதியில் உளவுத்துறை கடுமையாகக் கண்காணித்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு