Published:Updated:

`அன்று கொத்தடிமை தொழிலாளி, இன்று முதுகலை பட்டதாரி' - தர்மபுரி சிவகுமாரின் எழுச்சிமிகு பயணம்!

சிவகுமார் (அன்றும் இன்றும்)

கொத்தடிமை வாழ்விலிருந்து வெளியேறிய பொழுதில் கண்ணில் பட்டதெல்லாம் வெளிச்சமாய் அமைய ஒரு பள்ளிக்குச் சென்று மற்ற பிள்ளைகளைப் போலப் படிக்க வேண்டும் என்பதே அந்நாளில் அவரின் அதிகபட்ச ஆசையாக இருந்தது. ஆனால்...

`அன்று கொத்தடிமை தொழிலாளி, இன்று முதுகலை பட்டதாரி' - தர்மபுரி சிவகுமாரின் எழுச்சிமிகு பயணம்!

கொத்தடிமை வாழ்விலிருந்து வெளியேறிய பொழுதில் கண்ணில் பட்டதெல்லாம் வெளிச்சமாய் அமைய ஒரு பள்ளிக்குச் சென்று மற்ற பிள்ளைகளைப் போலப் படிக்க வேண்டும் என்பதே அந்நாளில் அவரின் அதிகபட்ச ஆசையாக இருந்தது. ஆனால்...

Published:Updated:
சிவகுமார் (அன்றும் இன்றும்)
ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் அடுத்த தலைமுறை பெறும் கல்வியைப் பொறுத்தே இருக்கும். பொருளாதார முன்னேற்றம் என்பது கல்வியறிவு பெறுவதால் மட்டுமே பெருமளவு சாத்தியம் என்பதை மறுப்பதற்கில்லை. அரசியல் புரிதல், சமூக முன்னேற்றம் போன்றவற்றுக்கான ஒரே காரணி கல்வியாக மட்டுமே இருக்க முடியும். சாதி, மத ஒடுக்குதல் போன்றவற்றில் இருந்தெல்லாம் வெளிவந்து சாதிக்கக் கல்வி என்பது ஒரு பேராயுதமே! ஒரு வீடு முன்னேறினால், அது ஒரு சமூகமே முன்னேறுவதற்கான முதற்படி. இப்படி தன் குடும்பம் மட்டுமல்லாது தன் சமூகத்தையே அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முனைப்புடன் செயல்படுபவர்கள் இங்கே பலர் உள்ளனர். அப்படியான ஒருவர்தான் சிவகுமார்.

குழந்தையாக இருந்தபோது கொத்தடிமை தொழிலாளியாக வாழ்ந்த இவர், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அதிலிருந்து வெளிவந்து, 'மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் சங்கத்தில்' தற்போது தன் அறப்பணியை மேற்கொண்டு வருகிறார். தர்மபுரி மாவட்டம் கரகூர் கிராமத்தில் தோடப்பன் - எல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் துயர்மிகு குழந்தைப் பருவத்தை அனுபவித்திருக்கிறார். சக குழந்தைகளுடன் ஓடி ஆடி விளையாடி, தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் வயதான ஐந்து வயதிலேயே சிவகுமார் தனது தந்தையை இழந்தார்.

தான் பெற்ற பட்டத்துடன் சிவகுமார்
தான் பெற்ற பட்டத்துடன் சிவகுமார்

"அப்பா இல்லைன்னு ஆனவுடனே அத்தை, மாமா வீட்டிலேயே வளரும்படி ஆனது. கர்நாடக எல்லையில இருக்கற ஒரு செங்கல் சூலைலதான் அவங்க வேலை செஞ்சுகிட்டு வந்தாங்க. குடும்ப வருமானம் போதாத காரணத்தினால் அவங்களோட சேர்ந்து அஞ்சு வயசிலேயே நானும் சூலையில் வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படி வேலை செஞ்சுகிட்டு இருக்கும்போதுதான் எதிர்பாராத விதமாக 2003-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுச்சு. 'கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டெடுக்கணும்' அப்படின்ற எண்ணத்துடன் அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியோட அந்தச் சூலையிலிருந்து நாங்க எல்லாரும் மீட்டெடுக்கப்பட்டோம்..." என்று கூறும்போதே அவரின் குரல் உடைகிறது.

வெளியேறிய பொழுதில் கண்ணில் பட்டதெல்லாம் வெளிச்சமாய் அமைய ஒரு பள்ளிக்குச் சென்று மற்ற பிள்ளைகளைப் போலப் படிக்க வேண்டும் என்பதே அந்நாளில் அவரின் அதிகபட்ச ஆசையாக இருந்தது. என்.சி.எல்.பி எனப்படும் அரசினர் குழந்தைத் தொழிலாளர் சிறார் சிறப்புப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு சேரும் வாய்ப்பு சிவகுமாருக்குக் கிடைத்தது.

"என்னதான் ஆசைப்பட்ட படி படிக்கத் தொடங்கினாலும் அந்த ஆசைக்கு இடையூறா ஒன்பதாம் வகுப்பு வரைதான் பள்ளிப் படிப்பைத் தொடர முடிஞ்சது, குடும்பச் சூழல் காரணமா பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம். அதுக்கப்புறம் 21 வயசுலதான் மறுபடியும் படிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ஆனா, இடையில எப்படியோ பத்தாம் வகுப்பு மட்டும் படிச்சு பாஸ் பண்ணிட்டேன். அதுக்கப்புறம்தான் 2012-ம் ஆண்டு 11-ம் வகுப்பு சேர்ந்து மேல்நிலை கல்வியை முடிச்ச கையோட தூத்துக்குடியில் ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பையும் முடிச்சேன். அப்புறம் முதுகலையும் படிக்கணும்னு ஆசையும் இருந்தது. என் சமூகத்திலிருந்து நான் மட்டும் உயராமல் என் சமூகத்தினரையும் உயர்த்தும் படி ஏதாச்சும் படிப்பு இருக்கா அப்படின்னு பார்த்தபோதுதான் சமூகப் பணிகளுக்காக ஒரு படிப்பு இருக்குன்னு தெரிய வந்துச்சு. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் சமூகப் பணிக்கான துறையில் சேர்ந்து நான் ஆசைப்பட்டபடி அதுலயும் இன்னைக்கு பட்டம் வாங்கிட்டேன். பட்டம் வாங்கிட்டு அடுத்த கட்டமா RBLA (Rescued Bonded Labourers Association) எனப்படும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் சங்கத்தில் என்னோட பணியைச் செஞ்சுகிட்டு வரேன்" என்று பெருமையுடன் சொல்கிறார் சிவகுமார்.

தன் மனைவியுடன் சிவகுமார்
தன் மனைவியுடன் சிவகுமார்

கொத்தடிமை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு பின் அத்தொழிலாளர்களின் வாழ்வும் தன் வாழ்வை போலவே அடுத்த நிலையைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் சிவகுமார் தன் பணிகள் குறித்துப் பேசிய போது, "சமூக சேவை செய்யறேன்ங்கறத தாண்டி என் மக்களுக்காகச் சேவை செய்றேன் அப்படிங்கறதுதான் என் மனசுக்கு ஒருவித நிறைவைத் தருது. இப்படி மீட்கப்பட்ட மக்களிடமும் குழந்தைகளிடமும் என் வாழ்க்கையைப் பத்தி நான் பகிர்ந்துக்கறேன். எப்படியான பிரச்னைகள் வந்தாலும் அதை மாத்தி முன்னேறுவதற்கான பாதை நம்மகிட்டதான் இருக்குன்னு நான் நம்பறேன். ஒரு விஷயத்தை நம்ம மனசுல நிறுத்தி, அதையே இலக்கா வெச்சு செயல்பட்டா, அதுக்கான பலன் நிச்சயம் நமக்குக் கிடைக்கும்.

ஒரு சில மக்கள், 'உங்களை மாதிரியே என் பிள்ளைகளும் படித்து வாழ்வில் உயர வேண்டும் சார்'ன்னு சொல்றப்போதான் என் வாழ்க்கையோட பயனை ஓரளவு உணர்ந்ததா நான் நினைச்சுக்குவேன். இதோடு நின்னுடாம என்னைப் போல இருக்கற பல மக்களுக்கு உதவி செஞ்சு அவங்களையும் வாழ்கையில அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டு போறதுதான் என்னோட வாழ்க்கையை முழுமையாக்கும்" என்கிறார் உணர்ச்சி பொங்க!

தான் பட்டம் பெற்ற நொடியை விவரிக்கும் போது, "என்னோட அம்மா, அப்பா என்கூட இருந்து, நான் என் படிப்பை முடிச்சிருந்தாலும் இப்படி ஒரு நிறைவு எனக்குக் கிடைச்சிருக்குமா தெரியல. இவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி, குறிப்பா அந்தக் கஷ்டங்கள் அடுத்தவரிடம் சேரக்கூடாது அப்படிங்கறதுக்காக உழைக்கும் போது, மனசுல தன்னால ஒரு வேகம் பிறக்குது. அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் இயங்க வைக்குது" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் சிவகுமார்.

பட்டம் பெறும் சிவகுமார்
பட்டம் பெறும் சிவகுமார்
குழந்தை கொத்தடிமை தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கிய சிவகுமார் இன்று தன் சமூகத்தில் முதல் பட்டதாரி, அதுவும் சமூகப் பணிக்கான முதுகலை பட்டதாரியாகத் திகழ்ந்து மக்களுக்காகவே பணியும் புரிந்து வருவது அவரைப் போலவே போராடிக் கொண்டிருக்கும் பலருக்கும் ஓர் ஊக்கச் சக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வாழ்த்துகள் சிவகுமார்! உங்கள் அறப்பணி தொடரட்டும்!