Published:Updated:

திருமங்கலம் டு ஸ்ரீ ஹரிகோட்டா - நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த மதுரை அரசுப் பள்ளி மாணவிகள்!

சாதித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள்

விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளான இவர்கள், மிகவும் நுட்பமான இந்த வடிவமைப்பு பணியில் உற்சாகமாக ஈடுபட்டு தங்களின் அறிவியல் திறமையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார்கள்.

திருமங்கலம் டு ஸ்ரீ ஹரிகோட்டா - நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த மதுரை அரசுப் பள்ளி மாணவிகள்!

விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளான இவர்கள், மிகவும் நுட்பமான இந்த வடிவமைப்பு பணியில் உற்சாகமாக ஈடுபட்டு தங்களின் அறிவியல் திறமையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார்கள்.

Published:Updated:
சாதித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள்

"இவ்வளவு பெரிய பெருமை கிடைக்கும்ன்னு நெனைக்கல. சாதாரண எங்களை கலெக்டர், அமைச்சர்லாம் வந்து பாராட்டுறாங்க. ஊருல உள்ள பெரியவங்கள்லாம் வாழ்த்துறாங்க. ஸ்ரீ ஹரிகோட்டாவுக்குப் போய் சேட்டிலைட்டை அனுப்பப்போறோம், பிரதமரைச் சந்திக்க போறோம்கிறது நெனைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று 10 மாணவிகளும் சொல்லும்போதே அவர்களின் கண்கள் கலங்குகின்றன.

பெண் குழந்தைகள் பிறந்தால் சுமை, வளர்த்து ஆளாக்குவது கஷ்டம் என்ற கொடூரமான கருத்தியலால் கருவிலோ அல்லது பிறந்த பின்போ கள்ளிப்பால் கொடுத்துக் கொல்கின்ற வழக்கம் ஒரு காலத்தில் பரவலாக இருந்த அதே திருமங்கலம் வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள்தான் இன்று ஊரார்கள் மட்டுமல்ல, நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் பெரும் சாதனை படைத்துள்ளார்கள்.
சாதித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள் தங்களின் ஆசிரியர்களுடன்
சாதித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள் தங்களின் ஆசிரியர்களுடன்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்வெளி அறிவியலில் அரசுப்பள்ளி மாணவிகளைப் பங்கேற்க வைக்கும் நோக்குடன் இஸ்ரோவின் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' சார்பில் 'ஆசாதி சாட்' (AzaadiSAT) திட்டத்துக்கான சேட்டிலைட் வடிவமைக்கும் பணியில் கலந்துகொள்ள நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் கலந்துகொண்ட இந்தத் தேர்வில் ஒரு பள்ளிக்கு 10 மாணவிகள் வீதம் 75 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் தேர்வான 3 பள்ளிகளில் கொடுக்கப்பட்ட புராஜக்டை வெற்றிகரமாக முடித்துள்ளது மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் பள்ளி!

விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளான அத்சாராணி, எஞ்சல், பவதாரணி, பிருந்தா, கெளரி, ஹரி வைஷ்ணவி, ஜெப்ரின் இருதயா, பத்மினி, யசோதாதேவி, சுவேதா ஆகியோர் மிகவும் நுட்பமான இந்த வடிவமைப்பு பணியில் உற்சாகமாக ஈடுபட்டு தங்கள் அறிவியல் திறமையை உலகுக்கு நிரூபித்துள்ளார்கள். இவர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர், அறிவியல் ஆசிரியர் உள்ளிட்ட அனைவரும் அர்ப்பணிப்புடன் உதவியிருக்கிறார்கள்.

சேட்டிலைட் வடிவமைப்பு பயிற்சியில் இவர்கள் வெற்றி பெற்றதை அறிந்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சர்பரைஸாக பள்ளிக்கு வருகை தந்து மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவிகளைச் சந்திக்கத் திருமங்கலம் பள்ளிக்கு நாம் சென்றபோது ஸ்ரீ ஹரிகோட்டாவுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த அவர்களைப் பாராட்ட வந்த பல்வேறு கட்சியினர், அமைப்பினர் துண்டு அணிவித்தும், பரிசளித்தும் சென்று கொண்டிருந்தார்கள். ஆகஸ்ட் 7-ம் தேதி சேட்டிலைட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வுக்கு முன்னர் எடுக்கப்பட்ட பேட்டி இது...

மாணவிகளுக்கு உந்து சக்தியாக இருந்த தலைமையாசிரியர் கர்ணனிடம் பேசினோம், "இந்த வட்டாரத்தில் 1700 மாணவிகள் பயிலும் பள்ளியாக எங்கள் பள்ளியை மாற்றியிருக்கிறேன். கிராமப்புற பின்னணியிலிருந்து வந்ததனால் அவர்களின் வாழ்க்கைச் சூழல் எனக்கு நன்கு தெரியும். எங்கள் மாணவிகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எல்லா விஷயத்திலும் அப்டேட்டானவர்கள். அறிவியல் கண்காட்சி முதல் பல்வேறு போட்டிகளில் சாதித்து வருகிறார்கள். தனியார்ப் பள்ளிகளில் கிடைக்கிற வாய்ப்புகள் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிப் பல விஷயங்களைச் செய்து வருகிறோம்.

தலைமையாசிரியர் கர்ணன்
தலைமையாசிரியர் கர்ணன்

இந்நிலையில்தான் இஸ்ரோ அறிவித்துள்ள சேட்டிலைட் வடிவமைக்கும் போட்டி குறித்து எங்கள் பள்ளி வளர்ச்சியில் அக்கறையுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் மாணவிகள் மட்டும்தான் பங்கேற்க முடியும். நாங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தோம். பல ஆரம்பக் கட்ட சோதனைகளைக் கடந்து எங்கள் மாணவிகள் குழு தேர்வானது. அதன் பின்பு ஆர்டினோ ஐ.இ.டி பாகம் கொண்ட சிப் வழங்கப்பட்டது, அதன் மூலம் வான்வெளி உயரம், தட்பவெப்பத்தில் இயங்குவது குறித்த புரோக்ராமை உருவாக்கும் புராஜக்ட் கொடுக்கப்பட்டது. தினமும் வீடியோ கான்பரன்ஸ், கூகுள் மீட் மூலம் மாணவிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பயிற்சி அளிப்பார்கள். அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள். இஸ்ரோவை சேர்ந்த ஸ்ரீமதி மேடம் எங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்தார்.

கடந்த பிப்ரவரி முதல் தீவிரமாக ஈடுபட்டு கடைசி ஒருவார ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் வெற்றி பெற்றார்கள். இதன் மூலம் இந்தியா முழுவதும் எங்கள் பள்ளி பிரபலமாகியுள்ளது. இப்பகுதி பெண் பிள்ளைகளுக்குப் புகழ் வெளிச்சம் கிடைத்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். கல்வி அமைச்சர் திடீரென்று வந்து மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கினார். இவர்கள் எதிர்காலத்தில் பெரியளவில் சாதிக்க அனைத்து உதவிகளும் செய்வதாக கலெக்டர் கூறியுள்ளார். ராக்கெட் ஏவும் நிகழ்வில் கலந்துகொள்ள ஸ்ரீஹரிகோட்டவிலிருந்து அழைப்பு வந்துள்ளது. திறமைகள் அனைவரிடமும் உண்டு. அதைக் கண்டுபிடித்து ஊக்குவித்தால் போதும். பள்ளிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே பெருமை சேர்ப்பார்கள்'' என்றார்.

வகுப்பு ஆசிரியர் சிந்தியா பேசுகையில், ''பெண் பிள்ளைகளுக்குப் படிப்பு எதற்கு என்று நினைக்கும் மக்கள் அதிகமுள்ள வட்டாரம் இது. அரசு கொண்டு வந்த விழிப்புணர்வு, திட்டங்கள் மூலம் அந்தச் சூழல் மாறி சமகாலத்தில் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். கிராமப்புற மாணவிகள் என்றால் திறமை குறைவானவர்கள் என்ற கற்பிதம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. அதை உடைக்கும் வகையில் எங்கள் மாணவிகள் சாதித்துள்ளார்கள். எங்கள் பள்ளி மாணவிகள் எல்லோரும் சாமர்த்தியசாலிகள். அதில் ரொம்பவும் பிரைட்டானவர்கள்தான் இந்தப் பத்து மாணவிகளும்! பயோ மேத்ஸ் படிக்கிறார்கள், அவர்களின் பெற்றோர்களும் இந்த புராஜக்ட்டில் தங்கள் பிள்ளைகள் ஈடுபட நன்கு ஒத்துழைத்தார்கள்.

வகுப்பு மற்றும் அறிவியல் ஆசிரியர் சிந்தியா
வகுப்பு மற்றும் அறிவியல் ஆசிரியர் சிந்தியா

ஆரம்பத்தில் இஸ்ரோ வழங்கிய சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகாமல் எரர் ஏற்பட்டது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்து அதை இன்ஸ்டால் செய்து புராஜக்டை சிறப்பாகச் செய்து முடித்துள்ளார்கள். எங்கள் தலைமையாசிரியர் முயற்சி எடுத்து ஹைடெக் லேப் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். மார்ச் 8 பெண்கள் தினத்தைப் பள்ளியில் கொண்டாடிய அன்றுதான் இந்த புராஜக்ட்டில் சேர அனுமதி கிடைத்தது. அது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது புராஜக்டில் வெற்றியும் பெற்று பலரும் பாராட்டுவதும், பிரதமரைச் சந்திக்க உள்ளதும், இவர்கள் உருவாக்கிய புரோக்ராம் சேட்டிலைட்டில் வைத்து அனுப்பப்பட உள்ளதும் அவர்களின் ஆசிரியர் என்ற முறையில் எனக்குப் பெருமையாக உள்ளது'' என்று நெகிழ்வுடன் பேசினார்.

மாணவிகளிடம் பேசினோம். அத்சா ராணி, ''நாங்க செலக்டான தகவல் கேட்டதும் எங்க வீட்டில் எல்லோரும் அழுதுட்டாங்க. கண்டுக்காத சொந்தக்காரங்க எல்லாம் எங்களைப் பத்தி செய்தில வந்ததும் வீட்டுக்கு வந்து விசாரிக்கிறது பெருமையா இருக்கு" என்றார்.

ஸ்வேதா ''எங்களுக்குச் சொந்த ஊரு விழுப்புரம். அங்க எங்கப்பா ரொம்ப படிச்சதில்லை. அங்க வேலை ஏதும் கிடைக்கததால் திருமங்கலத்துக்கு வந்தோம். நல்லா படிச்சு சாதிச்சு அப்பாவுக்குப் பெருமை தேடித்தரணும்னு சொல்வாரு. இப்ப அவரு ரொம்ப மகிழ்ச்சி ஆயிட்டாரு. எங்களை ரொம்ப குறைச்சு மதிப்பிட்ட சொந்தக்காரங்க இப்ப போன் போட்டு விசாரிக்கிறாங்க'' என்றார் பெருமையுடன்!

ஏஞ்சல், ''எங்கப்பா சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தவரு. அவர் கதையை அம்மா சொல்லும்போது நாம ஏதாவது சாதிச்சு அப்பாவுக்குப் பெருமை தேடித்தரணும்னு நெனப்பேன். அந்த வகையில இப்ப பெருமையா இருக்கு" என்றார்.

சாதித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள்
சாதித்த திருமங்கலம் பள்ளி மாணவிகள்

பவதாரிணி, ''எங்க அப்பா அம்மாவுக்கு என்னோட சேர்த்து மூணு பொண்ணுங்க. இத்தனை பொம்பளை புள்ளைகளை வச்சு என்ன செய்யப்போறன்னு சொந்தக்காரங்க எல்லாம் குத்திக்காட்டி பேசுவாங்க. அதை கேட்டு எங்கம்மா அழுவாங்க. அப்படிக் கேலி பேசினவங்களுக்கு முன்னால இந்த புராஜக்டல வெற்றி பெற்றது ரொம்ப பெருமையா இருக்கு'' என்றார்.

இதுபோல் ஒவ்வொரு மாணவியும் தங்கள் குடும்ப சூழ்நிலையையும், உறவுகளின் புறக்கணிப்பையும் பற்றிக் குறிப்பிட்டு, அந்த நிலையை தற்போதைய இந்த அங்கீகாரம் எப்படி மாற்றியுள்ளது என்பது குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆசிரியர்களின் ஆதரவும், தேடலும் இருந்தால் கிராமப்புற மாணவிகளும் அறிவியலில் உச்சம் தொடலாம் என்பதைத் திருமங்கலம் அரசுப்பள்ளி மாணவிகள் நிரூபித்துத்துள்ளார்கள்.

வாழ்த்துகள் கண்மணிகளே!