Published:Updated:

`அறிவைத் தேடி ஒரு பயணம்!'- அரசுப் பள்ளி மாணவர்களின் மகிழ்ச்சியான ஒருநாள் #MyVikatan

மாணவர்கள்
மாணவர்கள்

பயணங்கள் என்றுமே இனிமையானவை. அதிலும் நண்பர்களுடன் இணைந்து பயணம் எனும்போது குதூகலம் கும்மாளமிடுவது இயல்பே.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``புத்தகங்கள் உங்களின் சக்திவாய்ந்த ஆயுதங்கள். அவற்றை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உலகை வெல்ல முடியும்!" என்பர். அந்த வகையில், உலகை வெற்றி கொள்ளத் தயாராக வேண்டி, திருப்பூர் மேட்டுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள் 40 பேர் திருப்பூர் புத்தகத் திருவிழாவுக்குச் செல்ல ஆயத்தமாயினர்.

பயணங்கள் என்றுமே இனிமையானவை. அதிலும் நண்பர்களுடன் இணைந்து பயணம் எனும்போது குதூகலம் கும்மாளமிடுவது இயல்பே. அதற்கு நம் மாணவர்களும் விதிவிலக்கு அன்று. மனதுக்குள் மத்தாப்புடன் பள்ளியினுள் நடைபோட்டனர்.

வாகனத்தின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்து, பெரும் மகிழ்வுடனும் எதிர்பார்ப்புடனும் புறப்பட்டனர்.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

மாணவர்கள் வகுப்பில் பேசிக்கொண்டே இருப்பது ஆசிரியர்களுக்கு உண்மையில் சிக்கல்தான்! ஆனால், தனியான பயணங்களில் அது வேறுவிதமாக, ரசிக்கக் கூடியதாகவே அமையும் என்பதை மறுப்பதற்கில்லை. இப்பயணமும் அதற்கு விதிவிலக்கில்லை! பேருந்தின் இருக்கையில் அமர்ந்ததும் உலகக் கோப்பை முதல் உள்ளூர் செய்திகள் வரை அனைத்தையும் மாணவர்கள் தங்களுக்குள் விவாதித்தனர். கலந்துரையாடலை நடத்தி விமர்சனங்களையும் முன்வைத்தனர். இடையிடையே ஜன்னல் வழியே நகரத்தையும் அவ்வப்போது பார்த்தவண்ணமே பயணம் தொடர்ந்தது.

நொய்யல் ஆற்றுப் பாலத்தின் மேல் கடக்கையில் வகுப்பறை விளக்கங்கள் மாணவர் நினைவில் இடறின. நொய்யலின் பொருள் `நெய் போன்ற தூய நீர்', ஆனால், தற்போது நொய்யல் நீர் பெருமளவு மாசடைந்துவிட்டது என்பது மாணவருக்கு நாம் முன்பு அளித்த விளக்கம். ஆனால், தற்போதோ ஆற்றில் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்களின் பார்வைகள் அமைதியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன, வருத்தத்துடன்!

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

புத்தகத்திருவிழா வாயிலில் நுழைந்தவுடன் மாணவர்கள் தாமாகவே அமைதியாகிவிட்டனர். ஆக்கபூர்வமாய் பேசுவதில் மட்டுமல்ல, அமைதியாய் அறிவைச் சேகரிப்பதிலும் தாங்கள் வல்லவர்கள் என்பது மாணவர்களால் மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டது. ஆம். தொடர்ந்து அரட்டைகளில் இறங்காமல் ஒவ்வொரு கடையாகச் சென்று புத்தகங்களை அமைதியாய் பார்க்கவும் வாசிக்கவும் முற்பட்டனர். தங்களுக்கு விருப்பமான நூல்களை ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கினர்.

ஒரு சில மாணவர்கள் தங்களுக்கு உகந்த நூல்களின் பட்டியலைத் தம் கைகளில் வைத்த வண்ணம் சுற்றி வந்தது சிறப்பான ஒன்று!

ஒருவர் வாங்கிய புத்தகத்தை மற்றவர் வாங்காது, ஒவ்வொருவரும் வெவ்வேறு நூல்களாக வாங்கினர்.

புத்தகத் திருவிழாவில் மாணவர்களால் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாங்கப்பட்டன. சுமார் ரூ.10,000 மதிப்புள்ள புத்தகங்கள் எம் மாணவர்களால் வாங்கப்பட்டதைப் பின்பு அறிய முடிந்தது! இது அவர்களுக்குச் செலவு அல்ல. குழந்தைகளின் எதிர்காலத்துக்கான பெற்றோரின் முதலீடு.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

``கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு என மாணவர்கள் பணம் சேமித்து வந்தனர் என்பது கூடுதல் சிறப்பு!"

புத்தகங்களிலிருந்து அறிவைத் தேடுவதன் மூலம் மாணவர்கள் பெறும் மகிழ்ச்சியைவிட பெரிய மகிழ்ச்சி எதுவுமில்லை!மாணவர்களின் அறிவுத்தேடல் ஆசிரியர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும். இதை நாங்கள் மீண்டும் நேரடியாக உணர்ந்தோம்.

புத்தகத் திருவிழாவில் கிட்டத்தட்ட 100 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய மட்டுமல்லாது நேரத்தைப் பயனுடன் செலவிட வேண்டிய, தவறவிடக் கூடாத இடங்கள் புத்தகத் திருவிழாக்கள். அரைநாள் பொழுது அற்புதமாய்க் கழிந்தது.

விழா ஏற்பாடுகள் திருப்திகரமான முறையில் செய்யப்பட்டு இருந்தன. குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பு.

மாணவர்கள் இந்த விழாவைப் பெரிதும் ரசித்தனர். ஆசிரியர்களுக்கு பெரும்திருப்தி ஏற்பட்டது. மிகுந்த ஆரவாரத்துடனும் குதூகலத்துடனும் சிற்றுண்டியை முடித்துவிட்டு, புதிய உற்சாகத்துடன் பள்ளிக்குத் திரும்பினர்.

``ஆயிரம் வகுப்பறைகளில் ஆசிரியர்களால் கற்பிக்க முடியாத பாடத்தை இந்தப் புத்தகத் திருவிழா மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை."

புத்தக வாசிப்புதான் புதிய சிந்தனையைத் தரும். சுய சிந்தனையின் கிரியா ஊக்கியும் நல்ல புத்தகங்களே.

அறிவு வளர்ந்து முதிர முதிர, வாய் தன் வேலையைக் குறைத்துக் கொள்ளுமாம். அந்த வகையில் அறிவை முதிரச் செய்வன புத்தகங்களே!

`அறிவைத் தேடி ஒரு பயணம்!'- அரசுப் பள்ளி மாணவர்களின் மகிழ்ச்சியான ஒருநாள் #MyVikatan

சிலநாள்களுக்கு முன் இணையம் மூலம் தேடிப் பெற்ற தகவல் தற்போது நமக்கு நினைவில் இருக்காது. ஆனால், எப்போதோ சிறு வயதில் படித்தவை நம் நினைவில் இருக்கும். ஏனெனில் இணையம் என்பது தகவல். புத்தகம் என்பது அறிவு. இணைய அறிவே வேண்டாமா என்றால் அவசியம் வேண்டும்! உணவாக அல்ல! ஊறுகாயாக!

அன்பு நண்பர்களே, நேரமில்லை என்று சாக்கு கூறுவதை உதறிவிட்டு புத்தகவாசிப்பின் பக்கம் உங்களின் கவனத்தைத் திருப்புங்கள். குழந்தைகளையும் வாசிக்க ஊக்குவியுங்கள். புத்தகங்களைக் குழந்தைகளுக்குப் பரிசாகக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உங்களின் மிகச்சிறந்த வழிகாட்டலாக இது அமையும்.

அடுத்தவர் அறிவைக் கடன் வாங்கிக்கொண்டு இருக்காமல் சுயமாகச் சிந்திப்போம். புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது குழந்தைகள் உருவாக்கத் தூண்டுவோம்!

வாசிப்போம்! உலகை நேசிப்போம்!

-அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல