Published:Updated:

``இது மாணவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடம்!'' - புத்துயிர்பெற்ற 57 வயது அரசுப் பள்ளி!

அபிநய சௌந்தர்யா

1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 57 வருடங்களாக, பல தலைமுறைகளாக, பாகனேரி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு எழுத்தறிவித்து வருகிறது.

Paganeri High School
Paganeri High School

கிராமப்புற குழந்தைகளின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும்பங்கு வகிப்பவை, அரசுப் பள்ளிகள்தான். ஒவ்வோர் அரசுப் பள்ளியும், தங்கள் குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையாகப் படிக்கவரும் பல்லாயிரம் மாணவர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் சுமக்கிறது. அவர்களுக்குத் தேவையான அறிவு வெளிச்சம் கொடுக்க, அரசுப் பள்ளிகள் பல தங்களின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது வரவேற்க வேண்டிய விஷயம். அப்படி ஒரு பள்ளிதான், சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் உள்ள ஓ.இ.ஆர்.எம் அரசுப் பள்ளி. ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு நவீன முகத்துக்கு மாறிவரும் இந்தப் பள்ளிக்குச் சென்றோம்.

Trees planted by the old students
Trees planted by the old students

பள்ளி வளாகத்தில் நுழைந்ததுமே, நிழல் குடைபிடித்து வரவேற்கின்றன, ஓங்கி வளர்ந்த மரங்கள். ஒவ்வொரு மரமும் உரிய கவனம் கொடுத்து பராமரிக்கப்படுவதுடன், தங்களுடைய தாவரவியல் பெயர் எழுதப்பட்ட பலகைகளை 'ஐடி கார்டுகளா'க மாட்டியபடி சிரிக்கின்றன. "இந்த மரங்கள் எல்லாம் எங்க பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வைத்தது. அடுத்தடுத்து வரும் மாணவர்கள் இதையெல்லாம் பராமரிப்பதுடன், புது மரக்கன்றுகளும் வெச்சுட்டு வருவாங்க'' என்றனர் பள்ளித் தரப்பில்.

1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 57 வருடங்களாக, பல தலைமுறைகளாக, பாகனேரி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு எழுத்தறிவித்து வருகிறது. ஆனால், இப்பள்ளியில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்நிலையில், கடந்த வருடம் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிரிட்டோ, இப்பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, பள்ளியில் இரவு நேரங்களில் நடக்கும் சமூகவிரோதச் செயல்களைத் தடுக்க எட்டு சி.சி.டி.வி கேமராக்கள் என இந்தப் பள்ளி மாறியிருப்பதில் உற்சாகத்தில் இருக்கிறார்கள், மாணவர்களும் பெற்றோர்களும்.

CCTV Cameras
CCTV Cameras

பள்ளியின் வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் பிரிட்டோ, "எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ளது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மேல்நிலைக் கல்வி கற்க, ஏணியாக இருந்த இந்தப் பள்ளியின் மாணவர் சேர்க்கை, சில வருடங்களாகக் குறைய ஆரம்பித்தது. இது, உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, பள்ளியின் தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்தோம். அதற்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் உதவியை நாடினோம்.

இந்தப் பள்ளி அல்லது அந்தப் பள்ளி என்ற சாய்ஸ் இருக்கும் நகரத்து மாணவர்களைவிட, `எங்க ஊரு பள்ளிக்கூடம் இல்லையின்னா நானெல்லாம் படிச்சிருக்கவே முடியாது' என்ற சூழலில் வளர்ந்த கிராமத்து மாணவர்களுக்கு, அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். அப்படி எங்கள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்களின் ஜூனியர்களின் எதிர்காலத்துக்குக் கைகொடுக்க முன்வந்தனர். ஆட்டோமேட்டிக் பெல், ஸ்பீக்கர்ஸ், சி.சி.டி.வி கேமரா, ஏசியுடன் ஸ்மார்ட் வகுப்பறை எனப் பள்ளியில் பல நவீனங்களைக் கொண்டுவந்தோம்.

1990 - 1993 பேட்ச் மாணவர்கள், பள்ளிக்காக ஸ்பீக்கர், மைக் மற்றும் ஆட்டோமேட்டிக் பெல் வாங்கிக்கொடுத்தனர். கோயம்புத்தூரில் உள்ள சோலையப்பர், குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறும் மோட்டாரும் அமைத்துக்கொடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியர் பிரிட்டோ
வகுப்பறை
வகுப்பறை

சென்னையில் ஆடிட்டராக உள்ள எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் வேலாயுதம், ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் அதற்குத் தேவையான வயரிங் வேலைகளைச் செய்து கொடுத்தார். மற்றுமொரு முன்னாள் மாணவர் கலைச்செல்வன், சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் நாற்காலிகள் அமைப்பதற்கு உதவினார். 1990 - 1993 பேட்ச் மாணவர்கள், பள்ளிக்காக ஸ்பீக்கர், மைக் மற்றும் ஆட்டோமேட்டிக் பெல் வாங்கிக்கொடுத்தனர். கோயம்புத்தூரில் உள்ள சோலையப்பர், குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறும் மோட்டாரும் அமைத்துக்கொடுத்துள்ளார். இன்னும், பெயின்ட் அடித்தது, கேட் போட்டது எனப் பள்ளியின் பொலிவு கூட்டப்பட்டது. இப்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி முதல் ஸ்மார்ட் வகுப்பறையை மாணவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்'' என்றார் பெருமையுடன்.

எங்க ஊருக்கு எல்லாம் பஸ்ஸே எப்பயாச்சும்தான் வரும். எங்க வீட்டுலயெல்லாம் கரன்ட் போகாம இருக்குறதே பெரிய விஷயம். ஆனா, இப்போ எங்க ஸ்கூலைப் பார்த்தா அம்மாடியோவ்னு இருக்கு.
பள்ளி மாணவர்கள்

மாணவர்களிடம் பேசினோம். பலரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ''எங்க ஊருக்கு எல்லாம் பஸ்ஸே எப்பயாச்சும்தான் வரும். எங்க வீட்டுலயெல்லாம் கரன்ட் போகாம இருக்குறதே பெரிய விஷயம். ஆனா, இப்போ எங்க ஸ்கூலைப் பார்த்தா அம்மாடியோவ்னு இருக்கு. இதெல்லாம் பிரைவேட் ஸ்கூல்லதான் இருக்கும்னு நெனச்சோம். ஆனா, எங்களுக்காக எங்க ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் இதையெல்லாம் செஞ்சு கொடுத்திருக்காங்க. ஏசி போட்ட க்ளாஸுக்குள்ள போனப்போ, குளுகுளுனு இருந்துச்சு. நாங்க இப்போதான் மொத தடவையா ஏசியெல்லாம் பாக்குறோம்.

Students in AC Classroom
Students in AC Classroom

புத்தகத்துலேயே படிச்ச எங்களுக்கு, படங்கள் மூலமா பாடம் எடுத்தப்போ சுவாரஸ்யமா இருந்துச்சு. படிப்பே ஜாலியா மாறிப்போயிருச்சு. எங்க அம்மா, அப்பா எல்லாம் விவசாயம், கூலி வேலைனு பார்க்குறவங்க. 'எங்க பள்ளிக்கூடத்துல இதெல்லாம் கொண்டுவந்திருக்காங்க தெரியுமா?'னு எங்க வீட்டுல சொன்னா, 'நெசமாவா?!'னு அவங்களும் ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. இதையெல்லாம் பாக்குறதுக்காகவே பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டுப் போனாங்க. எங்க ஆசிரியர்கள் எல்லாம், 'பசங்களா, இதெல்லாம் நீங்க நல்லா படிக்கணும்னுதான் பண்ணிக்கொடுத்திருக்காங்க. நல்ல மார்க் வாங்கணும்'னு சொல்லியிருக்காங்க. நிச்சயமா நாங்க நல்ல ரிசல்ட் வாங்குவோம். எங்களுக்காக இவ்வளவு செஞ்ச எங்க பள்ளிக்கூடத்துக்கு பெருமை தேடிக் கொடுப்போம்'' - உற்சாகமும் சந்தோஷமுமாகப் பேசினார்கள் மாணவர்கள்.

பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களைக் கொண்டாடும் விதமாகப் பேசினார்கள். "பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றனர் எங்கள் மாணவர்கள். எங்கள் மாணவி கனகப்பிரியா சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 520/600 மதிப்பெண் பெற்று, இப்போது வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இலவசக் கட்டணத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார். இதுபோல் இன்னும் பலரை உருவாக்குவதே எங்கள் பள்ளியின் நோக்கம்.

தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய விளையாட்டு மைதானம் எங்கள் பள்ளியில்தான் உள்ளது. எங்கள் பள்ளி மாணவர்கள் பீச் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவுக்கு முன்னேறினர்.
School Ground
School Ground

படிப்பு மட்டுமல்லாது, விளையாட்டிலும் மாணவர்களை ஊக்குவிக்கிறோம். ஒரு மாணவரின் திறமை, ஆர்வத்தின் அடிப்படையில் அதற்கான விளையாட்டில் அவரை ஊக்குவிப்பது, பயிற்சி அளித்து போட்டிகளில் பங்குபெற அழைத்துச் செல்வது என, தனியார் பள்ளிக்கு நிகராகப் பல முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எங்கள் பள்ளியில் 15 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய விளையாட்டு மைதானம் எங்கள் பள்ளியில்தான் உள்ளது. எங்கள் பள்ளி மாணவர்கள் பீச் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவுக்கு முன்னேறினர்'' என்றவர்கள், பள்ளிக்குத் தேவைப்படும் உதவிகள் சிலவற்றைக் குறிப்பிட்டனர்.

''எங்கள் பள்ளிக்கு போதிய அளவில் வகுப்பறைகள் இல்லை. ஒரு பகுதி முழுவதும் ஓட்டுக் கட்டடங்கள்தான் உள்ளன. அவற்றை கான்கிரீட் கட்டடங்களாகக் கட்டிக்கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்'' என்று தலைமை ஆசிரியர் கூற, "எங்கள் மாணவர்கள் அருகிலிருக்கும் காடனேரி, அம்மன்பட்டி, நடராஜபுரம், கொட்டாப்பட்டி போன்ற கிராமங்களிலிருந்து வருகின்றனர். ஆனால் இக்கிராமங்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. அதற்கு வழி கிடைத்தால் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்" என்றனர் மற்ற ஆசிரியர்கள்.

பள்ளி மாணவர்களிடம் கடுமை காட்டாததால்தான் கல்லூரியில் வன்முறை அதிகமாகிறதா? #SurveyResult

அரசுப் பள்ளிகள் பல, மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவதால் ஒருபுறம் மூடப்பட்டுக்கொண்டிருக்க, அதை ஆரம்பத்திலேயே கவனித்து சரிசெய்து தரம் உயர்த்தும் இதுபோன்ற பள்ளிகளின் முயற்சிகளுக்குக் கைகொடுப்பது நம் கடமை!