Published:Updated:

+2-க்குப் பிறகு... சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கல்வி

கல்வி

+2-க்குப் பிறகு... சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

கல்வி

Published:Updated:
கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கல்வி

நயீம் கான், மேலாளர், மனித வளத்துறை, TCS சென்னை.

ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு, கல்லூரி களைத் தேர்வு செய்வதில் தடுமாறிக் கொண்டிருப்பது நன்கு புலப்படுகிறது. சிறந்த கல்லூரியை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், தங்கள் குழந்தைகளுக்கான சிறந்த கல்லூரி எது என்பதை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ளலாம் என சற்று விரிவாகப் பார்ப்போம்.

நயீம் கான், 
மேலாளர், மனித வளத்துறை, 
TCS சென்னை.
நயீம் கான், மேலாளர், மனித வளத்துறை, TCS சென்னை.

தெளிவான இலக்கு இல்லாத மாணவர்கள்...

இன்றைக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் 30%-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் ஊரில் உள்ள மருந்தகங்கள், நூலகங்கள், அடுமனைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங் களில் வேலை பார்ப்பதை நான் பார்க்கிறேன். இந்த இ்டங்களில் வேலை செய்வதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால், இது மாதிரியான வேலைக்குத்தான் போகப் போகிறேன் என்று ஒரு மாணவன் முடிவு செய்திருக்கும்பட்சத்தில், எதற்காக அவருடைய நேரம், பணம், உழைப்பை (Time, Money & Effort) மூன்று வருடத்துக்கு விரயம் செய்ய வேண்டும்? நான் கல்லூரியில் சந்தித்த சில மாணவர்களுக்கு, தான் ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தோம், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பின் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்ட மிடுதல் இல்லை என்பதைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன்.

வருத்தப்பட வைக்கும் கல்லூரிகள் தரம்...

கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நிலை இப்படி எனில், பட்டப்படிப்பை கற்றுத் தரும் கல்லூரியின் தரம் எப்படி இருக்கிறது என்று அதைவிட கவலை ஏற்படுகிறது. கல்லூரிகள் தர நிர்ணயம் செய்ய NAAC, AICTE போன்ற அமைப்புகள் பல இருப்பினும், இவையாவும் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உறுதி செய்ய போதிய அளவில் கட்டளைகளைப் பிறப் பிப்பதில்லை. 10 ரூபாய் கொடுத்து தரமான ஒரு பொருளை வாங்க நிறையவே மெனக்கெடும் நம் பெற்றோர்கள், கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் விஷயத்தில் காட்டுவதே இல்லை.

பெற்றோர்களின் இந்த மனநிலைதான் கல்லூரி நிர்வாகிகளின் மெத்தனப் போக்குக்குக் காரணம். நம் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளிடம் நாம் கேரன்டியும் வாரன்டியும் கேட்பதில்லை. மூன்று வருடங்கள் ஒரு கல்லூரியில் படித்து முடித்த பிறகும் தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளகூடத் தெரியாத மாணவர்களையும், மேடை ஏறி ஒரு நிமிடம்கூட பேச பயப்படும் மாணவர்களையும்தான் நான் கேம்பஸ் இன்டர்வியூவில் நிறைய பார்த்து வேதனை அடைந்திருக்கிறேன்.

+2-க்குப்  பிறகு... சிறந்த  கல்லூரியைத் தேர்வு  செய்வது  எப்படி?

தரகர்களைப்போல நடத்தப்படும் பேராசிரியர்கள்...

மூன்று வருடங்கள் இப்படி தன்னம்பிக்கை இல்லாத ஒரு மாணவ சமுதாயத்தை பட்டதாரிகள் என்ற பெயரில் உருவாக்கி விட்டு, அவர்களை மேலும் அதே கல்லூரியில் பட்டமேற்படிப்பு படிக்க நிர்ப்பந்திக்கும் அவலம் கொடுமையிலும் கொடுமை. ‘PG Admission’ என்ற பெயரில் பேராசிரியர்களைத் தரகர்கள் போல நடத்தும் செயல்கள் கல்லூரிகளில் பெற்றோர்கள் பார்த்திராத கசப்பான மறுபக்கம். பேராசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து, தன்னிடம் இளங்கலை இறுதியாண்டு படிக்கும், எத்தனை மாணவர்களை மூளைச்சலவை செய்து பட்ட மேற்படிப்புக்குத் தூண்டுகிறார்கள் என்பது குறித்து பல பேராசிரியர்கள் என்னிடம் கூறி புலம்பியதைப் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ நடத்த சென்றிருந்தேன். அப்போது அந்தக் கல்லூரியின் தலைவர் என்னை அழைத்து, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களை நிறைய வேலைக்கு எடுக்காதீர்கள். இதனால் எங்களுக்கு ‘PG Admission’ குறைகிறது. இத்தனைக்கும் இந்தக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தரம் எந்த வகை யிலும் திருப்தி தரும் நிலையில் இல்லை. ஆங்கிலத்தில் சரியாக பேசத் தெரியாத பேராசிரியர்கள்; மேடை ஏறிப் பேச பயப்படுபவர்கள்; கையில் குறிப்பு இல்லாவிட்டால், தட்டுத் தடுமாறி பேசுபவர்கள் என்கிற மாதிரி இருப்பவர்களை நிறையவே பார்த்திருக்கிறேன். ஏற்கெனவே படித்த மாணவர் களில் ஓரளவுக்கு நன்றாகப் படித்த மாணவர்களை விரிவுரை யாளர்களாகச் சேர்த்து கல்லூரியை நடத்தும் கொடுமையும் நிறையவே நடக்கிறது.

பேராசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய காலத்தில், கல்லூரி பேராசிரியர்கள் தங்களைத் தினம்தோறும் புதுப்பித்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமான விஷயமாக இருக்கிறது. ஒரு பேராசிரியர் சிறந்த போதகர் (Facilitator), ஆலோசகர் (Counsellor), வழிகாட்டி (Mentor) ஆகவும் ஆக வேண்டிய தேவை உள்ளதை அறிந்து கல்லூரிகள் ஆசிரியர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது.

எத்தனை கல்லூரிகள் பேராசிரியர்களுக்கென பிரத்யேகமான FDP, FEP, FRP போன்ற ஆசிரியர் பயிற்சிப் பட்டறை களை நடத்துகின்றன? மாணவர்கள் வகுப்பறையில் நுழைந்ததும் ‘பேசாதே’ என்று சொல்லாமல், அர்த்தத்துடன் பேச ஊக்கப்படுத்துகிறார்கள், எத்தனை பேராசிரியர்கள் குழு விவாதத்துக்கு (GD), நேரத்தை ஒதுக்குகிறார்கள், கரும் பலகையில் எழுத வைக் கிறார்கள், தங்கள் பாடம் (Subject) தாண்டிய விஷயங் களை எத்தனை பேர் பகிர் கின்றனர், மாணவர்களை நண்பர்களாக, சகதோழர் களாக, வழிகாட்டியாக ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந் தால், மிகச் சில கல்லூரி களையே மாணவர்கள் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

+2-க்குப்  பிறகு... சிறந்த  கல்லூரியைத் தேர்வு  செய்வது  எப்படி?

10%கூட வேலைவாய்ப்பு பெறாத மாணவர்கள்...

சுமார் ஆயிரம் மாணவர் கள் இறுதியாண்டு பயிலும் கல்லூரிகளில், எத்தனை பேர் வேலை வாய்ப்புகளுடன் வெளியே வருகிறார்கள் என்பதையும் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். ஒரு கல்லூரியில் சுமார் 5,000 மாணவர்கள் என்று எடுத்துக் கொண்டால், அதில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் களின் எண்ணிக்கை (UG and PG) சேர்த்து சுமார் 1,000 இருக்கும். இதில் 10%கூட வேலைவாய்ப்பு பெறவில்லை எனில் அந்தக் கல்லூரி நமக்கு எதற்கு?

மூன்று அல்லது ஐந்து வருடங்கள் நம் பிள்ளைகள் ஒரு கல்லூரியில் படித்துவிட்டு வந்த பிறகும் தம் குடும்ப வாழ்வாதாரத்திலும், பொரு ளாதாரத்திலும் முன்னேற்றம் இல்லையெனில், அப்படிப் பட்ட பட்டமோ, பட்டமேற் படிப்போ நமக்கு எதற்கு?

வேலைவாய்ப்புக்காக செலவழிக்காத கல்லூரிகள்...

இந்தக் கருத்துகள் யாவும், அனைத்துக் கல்லூரிகளையும் பொதுவாக குற்றம் கூற வில்லை. மாறாக, மாணவர்கள் நிறைய கட்டணம் வசூலித்த பின், அவர்களின் வேலை வாய்ப்பு தொடர்பான பயிற்சிகளுக்கு (Training and Placement) கிஞ்சித்தும் செலவு செய்யாத தனியார் கல்லூரி களை மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர், அந்தக் கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது அவன் கையில் எடுத்து செல்வது அந்தப் பட்டம் மட்டுமல்ல, மாறாக அவன் ஒரு சிறந்த மனிதவளமாக (Best Human Resource) வெளியில் வர வேண்டும் என்பதுதான், எங்களைப் போன்ற மனிதவள மேலாளர் களின் எதிர்பார்ப்பு.

வகைப்படுத்தல் அவசியம்...

‘Communicative Skills’ என்று சொல்லப்படும் தொடர்புத் திறன் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கல்லூரிகள் நினைக்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின்போதே அவர்களை வகைப்படுத்துதல் (categorization) மிகவும் அவசியம். யாருக்கு எந்தத் துறையில் விருப்பம், எப்படிப்பட்ட வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள் என்று பல்சார் உள்துறைகளாக (TNPSC, UPSC, Banking, Railways, Police, Defense Corporates, IT Companies, MNCs, Private Companies, Local Companies, Self Employment, Entrepreneurship, Family Business, Agricultural, Post Graduate, Research) பிரித்துக்கொள்ளுதல் அடிப்படையான ஒன்று. Training Placement Cell என்று தனித்துறையை உருவாக்கி அதற்கென உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து, தொழில்துறை நிபுணர்களை (Industrial Experts) ஆலோசகர்களாக (Consultants) நியமிப்பது இப்போது மிக மிக அவசியம்.

திறன் மேம்பாட்டுக் கல்விக்கென்று, வாரத்துக்கு குறைந்தது மூன்று மணி பீரியடுகளை அட்டவணையில் (Time Table) ஒதுக்க வேண்டும். தகுதி வாய்ந்த வல்லுநர் களைக் கொண்டு மாணவர்களைப் போட்டித் தேர்வுக்கு (Competitive Exam) தயார் செய்தல் இன்றியமையாதது. அதிலும் மிக முக்கிமாக ‘Aptitude’ என்று சொல்லப்படும் எண்ணியல் தகுதி மற்றும் ‘Mental Ability’ எனப்படும் மனத் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். பாடம் சார்ந்த அறிவைத் தாண்டி அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் களஅறிவு (Domain Knowledge) தொழில்நுட்பத்திறன் (Technical) கற்றுத் தருதல் மிகவும் அவசியம்.

மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்யும் முன் இந்த விஷயங்களை எல்லாம் அவசியம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்கள் மட்டு மல்ல, பெற்றோர்களும் நான் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் அவசியம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்தக் கல்லூரி இதற்கான விடைகளை உங்களிடம் நேர்மையாக பகிர்ந்துக்கொள்ள தயாராக இருக்கிறதோ, அந்தக் கல்லூரியை நீங்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.