Published:Updated:

`ஜே.என்.யூ விடுதிக் கட்டண உயர்வை அரசு குறைக்க வேண்டும்!' - மூன்று நபர் குழு பரிந்துரை

ஜவஹர்லால் பல்கலைகழகம்
ஜவஹர்லால் பல்கலைகழகம்

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுத்த அழுத்தத்தால் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய மூன்று நபர் கமிஷன் ஒன்றை அமைத்தது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக்கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வரைவுக் கையேடு கடந்த அக்டோபரில் பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவியது. ரூ 5,500 என்றிருந்த விடுதி உணவகத்துக்கான டெபாஸிட் தொகை ரூ.12,000 - ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

மேலும், ஒரு நபர் அறைகளுக்கான கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இதுதவிர, புதிதாக ரூ.1,700 பராமரிப்புக் கட்டணமும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. இக்கட்டண உயர்வைக் கண்டித்து பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் நடந்தது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுத்த அழுத்தத்தால் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய மூன்று நபர் கமிஷன் ஒன்றை அமைத்தது.

கடந்த நவம்பர் 17-ம் தேதி உருவாக்கப்பட்ட இந்தக் கமிட்டியில் பல்கலைக்கழக மானியக் கமிஷனின் முன்னாள் தலைவர் வி.எஸ்.சௌஹான், பல்கலைக்கழக மானியக் கமிஷனின் செயலாளர் ரஜ்னீஷ் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்
ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்

பல்கலைக்கழக நிர்வாகத்துடனான பரந்துபட்ட விவாதத்தை நடத்தவும் இந்த மூன்று நபர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 26-ம் தேதி இந்தக்குழு தனது ஆய்வு அறிக்கையை அமைச்சகத்துக்குச் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் `கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மட்டும் கட்டண உயர்வு வேண்டாம்' எனப் பரிந்துரைத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இந்தப் பரிந்துரைகளை அமைச்சகம் இன்னும் இறுதிசெய்யவில்லை என்றாலும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தனியே அமைக்கப்பட்ட குழு ஒன்று உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் குறைக்க இருப்பதாகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 75 சதவிகிதம் குறைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்காக மீதம் தேவைப்படும் பணத்தை மத்திய அமைச்சகமும் பல்கலைக்கழக மானியக் குழுவுமே தரவேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு