ஹைதராபாத் தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகாடமியான நல்சார் (NALSAR) பல்கலைக்கழகம், LGBTQ+ மாணவர்களுக்கான பாலினம் கடந்த வெளியை வடிவமைத் துள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நல்சார் பல்கலைக்கழகம் மாணவர்களை பாலின நடுநிலையோடு நடத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் LGBTQ+ சமூகமாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கென பிரத்யேகமாக, ஒரு கட்டடத்தின் தரைத்தளத்தில் அறைகள் மற்றும் கழிவறைகள் வடிவமைக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், பாலினம் கடந்த விடுதியை அமைக்கவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய கல்வியில் நம்பிக்கை கொண்ட இப்பல்கலைக்கழகம், 2015-ல் இருந்து, தான் எந்தப் பாலினம் என்று குறிப்பிட விரும்பாத மாணவர்களுக்கென பட்டப்படிப்பு சான்றிதழை `Mr' அல்லது `Ms' என வழங்காமல் `Mx' என வழங்கி வருகிறது. மேலும், பாலினத்தை அடையாளப்படுத்தும் ஆடைக் கட்டுப்பாடு எதுவும் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், `மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்த, சுயசான்றளிக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்தப்படுவர். எந்தவொரு சூழ்நிலையிலும் மாணவர்களின் இந்த சுய அறிவிப்பு படிவங்கள் மாணவர்களின் அனுமதியின்றி பெற்றோர்கள் உட்பட எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் பகிரப்படாது. LGBTQ+ மாணவர்களுக்கு, மற்ற மாணவர்களைபோல சம உரிமைகளும் சலுகைகளும் இருக்கும்' என்று நல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் பைசான் முஸ்தபா கூறியுள்ளார்.