முதுநிலை சட்டப்படிப்புத் தேர்வில் 59.91 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ள தாம்பரம் உதவி ஆணையர் மூர்த்திக்கு, 0.09 சதவிகித மதிப்பெண் சேர்த்து, 60 சதவிகித மதிப்பெண் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியாட்சிப்பணித் தேர்வில் வென்று ஐபிஎஸ் ஆன போதிலும் சட்டம் படிக்க வேண்டும் என்கிற தனது கனவையும் விட்டுக் கொடுக்காமல் படித்துத் தேர்வெழுதி, 0.09 சதவிகிதத்தில் முதல் நிலையைத் தவற விட்டார். தற்போது நீதிமன்றத்தின் மூலம் அதனைப் பெறுவதற்கான உத்தரவைப் பெற்றிருக்கிறார். அவரிடம் பேசினோம்...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"எனக்கு பேராசிரியர் ஆகணும்ங்கிறதுதான் விருப்பம். இளநிலை அறிவியல், முதுநிலை புள்ளியியல் படித்து இள முனைவர் பட்டமும் பெற்றிருந்தேன். குடியாட்சிப் பணியில் நான் ஈடுபட வேண்டும் என்கிற என் தந்தையின் விருப்பத்துக்காக சிவில் சர்வீஸ் படித்தேன். அதனூடாகவே சென்னை சட்டக்கல்லூரியில் மாலை நேர வகுப்பில் இணைந்து சட்டத்தில் இளங்கலை படித்தேன்.
ஆனால், தேர்வுகள் எழுதவில்லை. குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று 1998-ம் ஆண்டு காவல்துறையில் இணைந்தேன். பயிற்சிக் காலத்தின்போதே சட்டப்படிப்புக்கான தேர்வை எழுதி இளங்கலை சட்டப்படிப்பை முடித்தேன். காவல் துறையில் உதவி கண்காணிப்பாளராக இணைந்த பிறகு, சட்டத்தில் மேற்படிப்பு படிக்கும் சூழல் அமையவில்லை.
2009-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, Interdisciplinary Phd-க்கு விண்ணப்பித்தேன். 2014-15-ம் ஆண்டுகளில்தான் அதனை முடிக்க முடிந்தது. சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டேன்" என்றவர் முதுநிலை சட்டப்படிப்புக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறார்.
"சட்டப்படிப்பில் இளநிலை மட்டுமே முடித்த நான், முதுநிலை படிக்காதது பெருங்குறையாக இருந்தது. 2018-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் பிரைவேட் ஸ்டடி மூலம் முதுநிலை சட்டம் படித்தேன். இந்த முறைப்படி ஆண்டுக்கு 10 நாள்கள் நடத்தும் வகுப்புகளில் கலந்து கொண்டால் போதும். அதன் பிறகு நாமே அனைத்தையும் படிக்க வேண்டும். எனது துறை சார்ந்து அனுமதி பெற்றுதான் சட்டம் படிக்க வந்தேன். 10 நாள்கள் அனுமதி பெற்று வகுப்புகளில் கலந்து கொண்டேன். இந்த 10 நாள் வகுப்புகளில் கலந்து கொண்ட வருகைப் பதிவை வைத்துதான் தேர்வே எழுத முடியும். முதலாம் ஆண்டுத் தேர்வில் 6 பாடங்களை ஒரேமுறை எழுதித் தேர்ச்சி பெற்றேன்.
2019-ம் ஆண்டு நடக்கவிருந்த இரண்டாம் ஆண்டுத் தேர்வு, கொரோனா காரணமாக 2020-ம் அண்டு நடைபெற்றது. 4 பாடங்களுக்கான தேர்வெழுதி ஆய்வறிக்கை சமர்ப்பித்தேன். மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 720 மதிப்பெண்கள், அதாவது 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தால் முதல்நிலை பெற முடியும்.

நான் 719 மதிப்பெண்கள் எடுத்து 59.91 சதவிகித மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். முதல் நிலையைப் பெற 0.09 சதவிகிதம்தான் தேவை. அதனை வழங்கும்படி சென்னை பல்கலைக்கழகத்திடம் கேட்டேன். அவர்கள அதனை வழங்க மறுத்து விட்டனர்.
0.5 சதவிகிதத்துக்கு அதிகமாக எடுத்திருந்தால் அதனை முழுமைப்படுத்தி வழங்கலாம் என ஏற்கெனவே ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாக வைத்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தவர்கள், எனக்கு 0.09 சதவிகித மதிப்பெண் வழங்க உத்தரவிட்டிருக்கின்றனர்" என்கிறார். காவல் துறையில் உயர்பொறுப்பில் இருந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற இவரது உந்துதல், பாராட்டுக்குரியது.