Published:Updated:

சாத்தூர் உறுப்புக் கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை! - 240 மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு?

``மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளிலும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இந்தக் கல்லூரியில்கூட முதல்வரை தவிரமற்ற அனைவரும் ஒப்பந்த பேராசிரியர்கள்தான்.''

உறுப்புக் கல்லூரி
உறுப்புக் கல்லூரி ( ஆர்.எம்.முத்துராஜ் )

சாத்தூரில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஒரு நிரந்தர பேராசிரியர்கூட இல்லாத நிலையில், இறுதி ஆண்டு மாணவா்கள் காலவரையற்ற கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உறுப்புக்  கல்லூரி
உறுப்புக் கல்லூரி
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் 2011-ம் ஆண்டு முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழ், கணிதம், ஆங்கிலம், வணிகவியல் ஆகிய இளநிலை படிப்புகள் நடந்தப்பட்டு வருகின்றன. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 800 மாணவா்கள் படித்துவருகின்றனா். பல்கலைக் கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கல்லூரியில் 25 நிரந்தர பேராசிரியர்கள் தேவை. ஆனால், கல்லூரி முதல்வரைத் தவிர மற்ற பேராசிரியர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையிலேயே குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டுவந்தனர்.

இந்த நிலையில், பேராசிரியர் பணிக்கு ஏராளமான தகுதிகளை நிர்ணயம் செய்திருப்பதால் இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான பேராசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதற்கேற்ப போதிய பேராசிரியர்களை புதிதாக நியமனம் செய்யாமல் பல்கலைக்கழக நிர்வாகம் காலதாமதம் செய்துவந்தது. இதனால் பேராசிரியா்களின் எண்ணிக்கை குறைந்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
ஆர்.எம்.முத்துராஜ்

மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பற்றாக்குறை காரணமாகவே இறுதியாண்டு மாணவா்கள் சுமார் 240 பேர் காலவரையற்ற கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி விரிவுரையாளர்களிடம் கேட்டபோது, ``தற்காலிக பேராசிரியர் பணியில் சேருவதற்கே யுஜிசி பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது அறிவிப்புகள் வேறு வருகின்றன. ஆனால், அத்தனை தகுதிகளையும் பெற்றவர்களுக்கு போதிய சம்பளம் தருவதில்லை. இவ்வளவு தகுதிகளைக் கொண்டவர்கள் குறைவான சம்பளத்தில் பணியாற்றத் தயாராக இல்லை. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இந்தக் கல்லூரியில்கூட முதல்வரைத் தவிர மற்ற அனைவரும் ஒப்பந்த பேராசிரியர்கள்தான்” எனத் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
ஆர்.எம்.முத்துராஜ்

இதுகுறித்து கல்லூரி முதல்வர் முத்துக்குமாரிடம் கேட்டபோது, ``காலவரையற்ற விடுமுறை எல்லாம் கிடையாது. மாணவர்களுக்கு தேர்வு நேரங்களில் இதுபோன்ற விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்றுதான். முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாமதமாக கல்லூரிக்கு வந்ததால் அவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளோம். வரும் 20-ம் தேதி வழக்கம்போல மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.