Published:Updated:

`உங்கள் லட்சிய ஆசைகள் நிறைவேறும்!'- இஸ்ரோ தலைவர் சிவனின் கடிதத்தால் நெகிழ்ந்த பழங்குடியின மாணவர்கள்

இஸ்ரோ தலைவர் சிவன் பந்தலூர் முக்கட்டி பள்ளி மாணவர்களுக்கு பதில் கடிதம் எழுதியுள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரோ தலைவர் சிவன் கடிதம்
இஸ்ரோ தலைவர் சிவன் கடிதம்

இஸ்ரோ விண்வெளி மையம் கடந்த செப்டம்பர் மாதம் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவப் பகுதிக்கு அனுப்பியது. தரையிறங்க ஒரு சில கிலோ மீட்டர் தூரமே இருந்த நிலையில், லேண்டருடனான தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டது. உலகமே ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விக்ரம் லேண்டருடனான தொடர்பை மேற்கொள்ள நாசா உதவியுடன் இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், 14 நாள்கள் முயற்சி வீணாகிப் போனது. அதன்பின், சூரிய ஒளி கிடைக்காத நிலையில், இனி லேண்டருடனான தொடர்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

Mukkatty govt school
Mukkatty govt school

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம், பந்தலூர் முக்கட்டி பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 50 பேர் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு செப்டம்பர் 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளனர். அதில், ``அறிவியல் ஆய்வுகளுக்கு தோல்வி என்பதே இல்லை. மீண்டும் சாதிப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அந்தக் கடிதம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது. அதில், ``இது போன்ற அன்பும், ஆதரவும் இருப்பதால் நம் இந்திய விண்வெளித்துறை மென்மேலும் சாதனைகள் படைக்கும். சந்திரயான் 2 லேண்டர் தரை இறங்காமல் போனாலும், ஆர்பிட்டர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் கருவிகள் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும். மாணவர்களின் லட்சிய ஆசைகள் நிறைவேற வாழ்த்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

letter to ISRO
letter to ISRO

தமிழில் எழுதி கையொப்பமிட்டுள்ள அவரின் கடிதத்தின் பிரதிகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர். ஆசிரியர்கள், அந்தக் கடிதத்தை அனைவரையும் படிக்கச் செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து முக்கட்டி பள்ளி ஆசிரியர் சமுத்திரபாண்டியன் கூறுகையில், "சந்திரயான் 2 குறித்து பழங்குடி பள்ளி மாணவர்கள் 50 பேர் கடிதம் எழுதினர். இதற்கு பதில் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழில் எழுதி தமிழில் கையெழுத்தும் போட்டிருந்தார். இந்தக் கடிதத்தை நகல் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்துப் படிக்கச் செய்தோம். இஸ்ரோ தலைவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

Mukkatty school
Mukkatty school

இது குறித்து மாணவர்கள் கூறும்போத, "எங்கள் ஆறுதலையும், ஆசையையும் தெரிவித்தோம். இஸ்ரோ தலைவர் எங்களுக்கு பதில் கடிதம் எழுதியது எங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அளித்துள்ளது" என்றனர்.

இஸ்ரோ போன்ற ஆய்வு மையங்களில் பணியாற்றும் தலைவர்கள் மலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பழங்குடி பள்ளி மாணவர்களின் கடிதத்திற்குப் பதில் கடிதம் எழுதி அசத்தியுள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.