டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக காவேரி விடுதியில், சென்ற வார இறுதியில் மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது.
டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக காவேரி விடுதியில், ராம நவமி அன்று அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினருக்கும் ஜே.என்.யு மாணவர் சங்கத்தினருக்கும் இடையே நள்ளிரவில் கடும் மோதல் ஏற்பட்டு கலவரமாக உருவெடுத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருதரப்பிலிருந்தும் மாணவர்கள் காயமடைந்தனர். கல்லூரி நிர்வாக அமைப்பினரும் வளாகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்தனர். கல்லூரி, மற்றும் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்படும் மாணவர்களின் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
அதனை தொடர்ந்து, இந்தப் பிரச்னையில் மத்திய கல்வித்துறை தலையிட்டு, ஜே.என்.யு விடுதியில் மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது. பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மோதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.