சென்னையில் மாணவர்கள் தொடர்பில் நிகழும் சம்பவங்கள், அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ரயிலில் தொங்கிக்கொண்டே பட்டாக்கத்தியைத் தரையில் கீறி மக்களை மிரட்டுவது, ‘பஸ் டே’ என்கிற பெயரில் அரசுப் பேருந்துகளை நாசம் செய்வது... எனத் தொடரும் அடாவடிகள், இப்போது நடுரோட்டில் பட்டாக்கத்தியை வைத்து ரத்தம் தெறிக்க மோதிக்கொள்வது வரை சென்றுள்ளது. மதுரையிலோ, டிக்கெட் கேட்ட நடத்துநரைப் பட்டாக்கத்தியால் தலையில் வெட்டியிருக்கிறார்கள் மாணவர்கள். தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள், கொலை வரையில் போய் முடியும் அபாயமும் இருக்கிறது. நம் நாட்டின் எதிர்காலம் மாணவர்களே என்று ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கொண்டிருக்க... மக்கள் கண் முன்னாலேயே அந்த நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்துள்ளனர், வன்முறைகளில் ஈடுபட்ட மாணவர்கள்.

என்ன நடக்கிறது இங்கே, ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள், அரசியல்வாதி களுக்கும் ‘ரூட்டு தல’ மாணவர்களுக்கும் இருக்கும் தொடர்புகள் என்ன, இப்படியான வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்களின் உண்மையான உளவியல்தான் என்ன? அனைத்தையும் அலசுகிறது இந்தச் சிறப்புக் கட்டுரை!

கடந்த காலங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில்தான் இதுபோன்ற வன்முறைப் போக்கு இருந்தது. ஆனால், இப்போது அது லயோலா கல்லூரி போன்ற தனியார் அறக்கட்டளை கல்வி நிலையங்களிலும் தலைதூக்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, லயோலா கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, பெரும்பதற்றம் உருவானது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்துதான், மிகப்பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக இது விவாதிக்கப்படுகிறது.

கல்லூரியில் மது அருந்தும் மாணவர்கள்!

“மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அடைபட்டிருக்கும் சூழல்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணம்” என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து, பின்னர் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் அவர்.

“நாங்கள் படித்தபோது எங்கள் கல்லூரிக்கு வாரம் இரண்டு மூன்று தலைவர்களாவது வந்துவிடுவார்கள். மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவார்கள். நாவலர் நெடுஞ்செழியன் வந்து பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போது அந்தக் கலாசாரமே போய்விட்டது. கல்லூரிகளில் விளையாட்டு மற்றும் கருத்தரங்குகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்துவிட்டது. கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது, மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் களங்களைச் சிதைத்துவிட்டது. கூடிக்கற்றல் என்பதே காணாமல்போய்விட்டது.

நான் படித்தபோது இருந்த மாநிலக் கல்லூரியின் சூழல், 2000-ம் ஆண்டு நான் அங்கு வேலைக்கு வந்தபோது மாறியிருந்தது. கல்லூரியிலேயே மாணவர்கள் மது அருந்தினார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் பேருந்துகளில் மாணவர்கள் சண்டை போட்டுக்கொள்ளும் கலாசாரமும் தொடங்கியது; ‘ரூட்டு தல’, ‘பஸ் டே’ எல்லாம் உருவானது. அதுதான் இன்று பட்டாக்கத்தி மோதலில் வந்து நிறுத்தியிருக்கிறது” என்றார் கவலையுடன்.

‘‘ரூட்டு தல... இப்போது ரேட்டு தல!”

‘ரூட்டு தல’ கலாசாரம் சென்னையில்

1990-களில் ஆரம்பித்தது. பேருந்து வழித்தடங்களை வைத்து ‘ரூட்டு தல’யை உருவாக்குகிறார்கள். பெரம்பூரிலிருந்து அண்ணாசதுக்கம் வரை இயக்கப்படும் 29A பேருந்தில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் செல்வார்கள். இந்த ரூட்டுக்கு ஒரு ‘தல’ இருப்பார். பெரம்பூரிலிருந்து திருவேற்காடு வரை இயக்கப்படும் 29E பேருந்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் செல்வார்கள். இந்த ரூட்டுக்கும் ஒரு ‘தல’ இருப்பார். இப்படி, ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒரு ‘தல’. பாடல்களை இட்டுக்கட்டிப் பாடுவது, எதிர்ப்பாட்டு பாடுவது என்று ஜாலியாகப்போகும் இவர்களின் போக்கு, ஒருகட்டத்தில் மோதலில் முடிகிறது.

‘ரூட்டு தல’ மாணவர்கள் சிலரிடம் பேசினோம். “ரூட்டு தல ஆகுறது சாதாரண விஷயமில்லை. எங்களுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு. சண்டையில ரத்தம் பார்த்திருக்கணும், லவ் ஜோடிங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிருக்கணும், குடிச்சிட்டு பஸ்ஸுல ஏறக் கூடாது. பஸ்ஸுல எவ்வளவு ஸ்டூடன்ஸ் கூட்டம் இருந்தாலும், ஒரு பார்வை பார்த்தாலே பஸ்ஸே அமைதியாகிடணும். புக்ஸ்ல கத்தி எப்பவும் வெச்சிருக்கணும். நம்ம செட்டு பசங்க, பொண்ணுங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா, கத்தி எடுக்கவும் தயங்கக் கூடாது.

ஆனா, இப்பெல்லாம் இந்த ரூல்ஸை சரியா ஃபாலோ பண்றதில்லை. எங்களை மாதிரி ஏழைப் பசங்க ரூட்டு தலயா வரக் கூடாதுன்னு பணக்காரப் பசங்க மத்த பசங்களுக்குக் காசு கொடுத்து, சரக்கு வாங்கிக் கொடுத்து ரூட்டு தல ஆகிடுறாங்க. அவங்களாலதான் இவ்வளவு பிரச்னையும்’’ என்றனர்.

இனி தவறு செய்தால் சிறை!

இந்தப் பிரச்னைகள் குறித்து சென்னை மாநகரக் காவல்துறையின் இணை ஆணையர் சுதாகரிடம் பேசினோம். அவர், “ரூட் தல கலாசாரம் நீண்டகாலமாகவே இருக்கிறது. விளையாட்டுப்போக்கில் ஆரம்பித்து, இன்று மோசமான நிலைக்கு வந்திருக்கிறது. இதன் பின்விளைவுகள் பற்றி அந்த மாணவர்களுக்குத் தெரியவில்லை. ‘ரூட்டு தல’ கலாசாரத்தை, ஒரு பாரம்பர்யம்போல கொண்டுவர நினைக்கிறார்கள். இதில் முன்னாள் மாணவர்களுக்கும் பங்கு இருக்கிறது. தங்கள் மகன் வெளியே என்ன செய்கிறான் என்பது பெற்றோருக்குத் தெரிவதில்லை. அவர்களை அழைத்துப் பேசி, ‘இனிமேல் தவறு செய்தால் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள்’ என்று பாண்டு பேப்பரில் பெற்றோரிடமும் மாணவர்களிடமும் கையெழுத்துப் பெற்றுள்ளோம். அந்த மாணவர்களை, தொடர் கண்காணிப்பிலேயே வைத்துள்ளோம். இதனால், அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.

வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின் கைகளை உடைத்து, கட்டுப்போட்டு காட்சிப்படுத்துகிறது காவல்துறை. கேட்டால், ‘வழுக்கி விழுந்துவிட்டார்கள்’ என்று நொண்டி சாக்கு வேறு. இதுகுறித்தும் காவல் அதிகாரிகளிடம் “காவல் துறையினர் இப்படிச் செய்வது வன்முறை, மனித உரிமை மீறல் இல்லையா?” என்று கேட்டோம்.

“மாணவர்கள் வழுக்கி விழுந்ததைப் பற்றி பத்திரிகையாளர்கள் ஏன் இவ்வளவு ஆராய்ச்சி நடத்துகிறீர்கள்? ஸ்டேஷன்களில் பாத்ரூம் பாராமரிப்பு குறைவு. அதனால், வழுக்கி விழுந்து அடிபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்றார்கள்.

சட்டம் ஒழுங்குப் பிரச்னை அல்ல!

“ஆனால், இது சட்டம் ஒழுங்குப் பிரச்னை அல்ல... சமூகப் பிரச்னை. இதில் கல்வித் துறைதான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, காவல் துறை அல்ல” என்கிறார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன். “மாணவர்களின் இந்தப் பிரச்னைகள் குறித்து பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறோம். ஆனால், நாங்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இந்தப் பிரச்னை, கல்வித் துறையால் தீர்க்கப்பட வேண்டியது. ஆனால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக இதைப் பார்க்கிறார்கள்.

மாணவனின் குடும்பச்சூழல், சமூகச்சூழல் ஆகியவற்றின் பின்னணியில் இந்தப் பிரச்னையைப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் பத்துக்குப் பத்து அளவிலான மிகச்சிறிய வீடுகளில் வசிக்கும் குடும்பங்களிலிருந்தே இந்த மாணவர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் வீட்டுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். இளம் வயதினருக்குரிய மனநிலைக்கு ஏற்ப சரியான வடிகால் இங்கு இல்லை. எனவேதான், ‘பஸ் டே’ போன்ற கொண்டாட்டங்கள் உருவாகின்றன. மேலும், படித்து முடித்து வெளியே வரும்போது, அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உறுதியும் கிடையாது. உளவியல்ரீதியாக, சமூகரீதியாக அந்த மாணவர் களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் ஆராயப்பட்டு, அதற்கான தீர்வுகளைக் காண வேண்டும். மாறாக, காவல் துறையை வைத்தே இந்தப் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம் என்று நினைப்பது தவறு” என்றார் கவலையுடன்.

சாதாரண பிரச்னையல்ல இது. நம் நாட்டின் எதிர்காலம், மாணவர்களே. எனவே, சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள், கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை வைத்து தொடர் கலந்துரையாடல் நடத்த அரசு முன்வர வேண்டும். இப்படித்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியுமே தவிர, ‘பாத்ரூமில் வழுக்கி விழும்’ உத்தியால் அல்ல.

மாணவர் பேரவைத் தேர்தல் எப்போது?

மாணவர் பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ தலைமையில் 1995-ம் ஆண்டு ஒரு குழு உருவாக்கப் பட்டது. அந்தக் குழு, ‘இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறது. தேர்தலுக்கான வழிமுறைகளையும் அந்தக் குழு வகுத்துக்கொடுத்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைத் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, பிரசாரத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு முறைப்படி நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெறுவதில்லை. தன்னாட்சி கல்லூரிகளில், ‘இவர்தான் தலைவர்’, ‘இவர்தான் செயலாளர்’ என்று கல்லூரி நிர்வாகமே சொல்லிவிடுகிறது.

ஆசிரியர் காலிப் பணியிடங்கள்!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 92. அங்கு, சுமார் 6,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. இதனாலேயே வகுப்புகள் முழுமையாக நடப்பதில்லை. வாசிப்புப் பழக்கமும் அருகிவிட்டது. இதுபோன்ற காரணங்களாலேயே மாணவர்கள் வகுப்பறைகளைவிட்டு வெளியேறி, சுற்றுகிறார்கள்.

குவாட்டர்… கோழி பிரியாணி!

‘ரூட் தல’ மாணவர்களை அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக்கொள்கின்றன. சிறு கட்சியிலிருந்து பெரிய கட்சிகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. கட்சிகளில் இருக்கும் மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். குறிப்பாக, பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்களுக்கு ‘ரூட்டு தல’ மூலம் கூட்டம் சேர்க்கப்படுகிறது. இதற்காக ‘ரூட்டு தல’ மாணவரை வெயிட்டாக கவனிக்கிறார்கள். கூட்டங்களில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குக் குறைந்தபட்ச கேரன்டியாக குவாட்டரும், பிரியாணியும் உண்டு. வட்டம், மாவட்டம் என அரசியல் தலைகளைப் பார்த்து, ‘ரூட் தல’ மாணவர்கள் கிறங்கிவிடுகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘ரூட் தல’ மாணவர்களின் கூட்டத்தைப் பெரிய அளவில் ஓர் அரசியல் கட்சி வடசென்னையில் நடத்தியிருக்கிறது. சென்னையின் வி.வி.ஐ.பி ஒருவர்தான் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடும் செய்திருக்கிறார்.