Published:Updated:

`முட்டையை குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டும்’ - கர்நாடக பாடத்திட்ட குழு அறிக்கை; மருத்துவர் விளக்கம்!

`தினமும் குழந்தைகளுக்கு முட்டை, சுவையூட்டப்பட்ட பால் மற்றும் பிஸ்கட் ஆகியவை கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். இவை ஒபிசிட்டி, ஹார்மோன் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

`முட்டையை குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டும்’ - கர்நாடக பாடத்திட்ட குழு அறிக்கை; மருத்துவர் விளக்கம்!

`தினமும் குழந்தைகளுக்கு முட்டை, சுவையூட்டப்பட்ட பால் மற்றும் பிஸ்கட் ஆகியவை கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். இவை ஒபிசிட்டி, ஹார்மோன் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Published:Updated:

கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கையின்படி புத்தகம் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள பாடத்திட்ட குழு, `தினமும் முட்டை சாப்பிடுவது ஒபிசிட்டி மற்றும் ஹார்மோன் பிரச்னைகளை ஏற்படுத்தும்’ என்று பாடத்தில் இடம்பெற வலியுறுத்தி, மாநில அரசு மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவிடம் (NCERT) அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பள்ளிக் குழந்தைகள் (மாதிரி படம்)
பள்ளிக் குழந்தைகள் (மாதிரி படம்)

கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்தில் புதிய பாடத்திட்டத்துக்கான பாட நூல்கள் தயாரிக்கும் பணிகளில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குழுக்களில், `உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' குறித்த அறிக்கையை (Position Paper) நிம்ஹான்ஸில் உள்ள குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநலத் துறையின் தலைவர் டாக்டர் கே. ஜான் விஜய் சாகர் தலைமையில் மூத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர், மயோகா சிகிச்சையாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தயாரித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் குழுவினர் தாக்கல் செய்ய உள்ள 26 பக்க அறிக்கையில், `தினமும் குழந்தைகளுக்கு முட்டை, சுவையூட்டப்பட்ட பால் மற்றும் பிஸ்கட் ஆகியவை கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். இவை ஒபிசிட்டி, ஹார்மோன் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். முட்டை - பயறு, முட்டை - வாழைப்பழம் போன்ற ஒரே ஊட்டச்சத்துள்ள உணவுகளை குழந்தைகள் சாப்பிடும்போது ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும். மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும். இந்தியர்களின் சிறிய உடலமைப்பு, கொழுப்பு உள்ள உணவுகளான முட்டை, இறைச்சி போன்றவற்றை தினமும் உட்கொள்வதன் மூலம் வாழ்க்கை முறை பிரச்னைகளை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

முட்டை
முட்டை

மேலும், `சாத்வீக’ உணவான நிலக்கடலை, எள்ளு லட்டு, கடலைமிட்டாய் போன்றவை இயற்கை உணவு என்றும், ரத்தசோகையை எதிர்கொள்ள கைக்கொடுக்கும்’, `பீமன், அனுமனின் உணவுப் பழக்கங்கள் குறித்த கதைகள், தைரியம், வெற்றிக்கான உணவை தொடர்புபடுத்தி உண்ண குழந்தைகளுக்கு உதவும். ஆரோக்கியம் தொடர்பான பஞ்சதந்திரக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் குழந்தைகளுக்கு சொல்லப்பட வேண்டும்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முட்டை குறித்து குழுவினர் கூறியுள்ள இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பது பற்றி, பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

``ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பது மிகவும் நல்லது. முட்டையில் இருக்கும் புரதம் உடல் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஒன்று. மேலும் இதில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்சிடன்ட்கள் என சத்துப் பெட்டகம் முட்டை. இதுவரை, முட்டை சாப்பிடுவதால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் என்று எந்த அறிவியல் ஆராய்ச்சியும் கூறவில்லை. எனவே, குழந்தைகள் மட்டுமல்ல, எல்லா வயதினருக்குமே முட்டை நல்ல உணவு. சில உடல்நிலைக் காரணங்கள் உள்ள பெரியவர்கள், வாரத்துக்கு மூன்று முட்டைகள் வரை எடுத்துக்கொள்ளலாம்'' என்றார்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

முட்டையைத் தவிர்க்கச் சொல்லி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கல்விக் குழுவினர் முன்னதாக, பிதாகரஸ் தேற்றம் மற்றும் ஐன்ஸ்டினின் ஆப்பிள் விழுந்த கதை எல்லாம் போலியானவை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும், 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் மொழிப் பாடமாக சம்ஸ்கிருதத்தை இந்தக் குழு முன்மொழிந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

- வெ.கௌசல்யா