குழந்தை திருமணம், ஏழ்மை, குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பல காரணங்களால் கரூர் மாவட்டத்தில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் இடைநிற்றல் செய்த தரவை, கரூர் மாவட்ட நிர்வாகம் தயார் செய்தது. 2000-க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் பிரபுசங்கரை அதிர வைத்தது. இதனால், குழந்தை திருமணங்களை தடுக்கவும், பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் செய்த மாணவர்களை மறுபடியும் பள்ளிக்கு வரவைக்கவும் கரூர் மாவட்ட ஆட்சியர், 'பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்களை கல்வி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து, அவர்கள் பள்ளிக்கு வராமல் போனதன் காரணத்தை கண்டறிந்து, மறுபடியும் அவர்களை பள்ளிக்கு வரவைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அப்படி, பள்ளிக்கு வராமல் இடைநின்ற 25 மாணவர்களை முதல் கட்டமாக பள்ளிக்குப் பேருந்தில் அழைத்துப்போய் சேர்த்திருக்கிறார் ஆட்சியர்.
கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வாளியாம்பட்டி கிராமத்தில், ’பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’ நிகழ்ச்சியின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்குச் செல்லாமல் இடைநிற்றல் செய்த 25 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக அவர்களது அத்தியாவசிய தேவைகளான புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

அதோடு, நீட்டிக்கப்பட்ட புதிய பேருந்து வழித்தடத்தின் மூலம் குழந்தைகளை பேருந்தில் ஏற்றி அதே பேருந்தில் தானும் பயணித்து பள்ளி வரை சென்று சந்தனம், குங்குமம், மலர், இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்று வகுப்பறையில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் எடுப்பது வரை ஆர்வத்துடன் பார்வையிட்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர்.
பின்னர் இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுரையின்படி, கரூர் மாவட்டத்தில், 'பள்ளிக்கூட மணியடிச்சாச்சு' என்ற மாபெரும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வளியாம்பட்டி என்ற கிராமத்தில் 25 குழந்தைகள், இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் ஊரில் வீடு வீடாகச் சென்று மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்று கண்டறிந்து, ஏன் பள்ளிக்கு குழந்தைகள் செல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக, அந்த ஊருக்குப் பேருந்து வசதி புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டு, 25 குழந்தைகளுடன் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் பேருந்தில் ஏறி குழந்தைகளை பள்ளியில் வகுப்பறையில் சேர்த்திருக்கிறோம். தொடர்ந்து, இந்த குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

எந்தச் சூழ்நிலையில் இருந்து அவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கண்டறிந்ததோடு, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் முதல் முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் 2000-க்கும் அதிகமான குழந்தைகள் இடைநிற்றல் காரணமாக பள்ளிப் படிப்பை தொடராமல் இருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற காரணமும் கண்டறியப்பட்டு, அந்த காரணம் சரிசெய்யப்பட்டு மீண்டும் கல்வியைத் தொடர்ந்திட, அனைத்து விதமான முயற்சிகளும் 'பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு' நிகழ்ச்சியின் மூலம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.