Published:Updated:

`விருதுகளைக் குவிக்கும் அரசுப் பள்ளி;ரூ.25 லட்சத்தை வாரி வழங்கிய கிராமம்!'- இது கரூர் மக்களின் பாசம்

பாராட்டு விழாவுக்கு நடுவே மேஜிக் ஷோ, கலர்ஃபுல் நடனம் என்று தூள் கிளப்பிட்டாங்க. கிராம மக்கள் எங்க மீது வச்சுருக்கிற பேரன்பைப் பார்க்கும்போது, எங்க பொறுப்பு இன்னும் அதிகமாகி இருக்குனு தோணுது.

ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா ( நா.ராஜமுருகன் )

கரூரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அந்தப் பள்ளிக்குப் பல விருதுகளை வாங்கித் தர, அதற்கு நன்றிக்கடனாக கிராம மக்கள், பள்ளி வளர்ச்சிக்காக இருபத்தைந்து லட்சத்தை வழங்கி, ஆசிரியர்களை, மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார்கள்.

கல்விச் சீர் வழங்கும் மக்கள்
கல்விச் சீர் வழங்கும் மக்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், க.பரமத்தியில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியில் 200 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன், கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இந்தப் பள்ளியில் இவர் பணியாற்றி வருகிறார். சொற்ப எண்ணிக்கையில் இருந்த இந்தப் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையை மெல்ல மெல்ல உயர்த்தினார்.

கல்விச் சீர் வழங்கும் மக்கள்
கல்விச் சீர் வழங்கும் மக்கள்
நா.ராஜமுருகன்
Vikatan

அதற்காக, தனியார் பள்ளிக்கு மேலாக பல வசதிகளை ஏற்படுத்தினார். ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்கள், வைஃபை வசதி, பள்ளி முழுக்க மரக்கன்றுகளை நட்டு பசுமையாக்குதல், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை இந்தப் பள்ளியில் சேர வைக்க வாகனங்களை ஏற்பாடு செய்தல் என்று கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பள்ளியை மாற்றினார் செல்வக்கண்ணன்.

அதோடு, கரூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக ஊர் மக்களிடம் பேசி, பள்ளியின் வளர்ச்சிக்காக கல்விச்சீர் வழங்க வைத்தார். செல்வக்கண்ணனோடு மற்ற ஆசிரியர்களும் கைகோக்க, தமிழக அரசின் சிறந்த தொடக்கப்பள்ளி என்ற விருதை தொடர்ந்து வாங்க ஆரம்பித்தது. அதோடு, ஐ.எஸ்.ஓ தரச்சான்றையும் பெற்றது. உச்சக்கட்டமாக, தமிழகத்தில் எந்தப் பள்ளியும் வாங்காத 5 எஸ் என்ற விருதை வாங்கியது, இந்தப் பள்ளி.

ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
நா.ராஜமுருகன்

அதோடு, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இந்திய ஜனாதிபதி கையால், செல்வக்கண்ணன் தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்றார். அதற்காக, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, செல்வக்கண்ணனுக்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தியதோடு, மற்ற ஆசிரியர்களுக்கும் விருதுகளைக் கொடுத்து அசத்தினர். பள்ளியில் சமையல் வேலை செய்யும் பெண்ணுக்கும் விருது கொடுத்து, அவரைக் கண்கலங்க வைத்தனர். அதோடு, பள்ளியின் வளர்ச்சிக்காக ஏழரை லட்சத்தையும் கொடுத்து, ஆசிரியர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள் ஊர் மக்கள்.

உற்சாகத்தில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசினோம். "எவ்வளவோ பணிகள் இருக்க, சமூகத்தில் மனிதர்களை அறிவானவர்களாக உருவாக்கக்கூடிய ஆசிரியர் பணி எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாகச் செய்ய நினைத்தேன். ஆனால், மக்களிடம் அரசுப் பள்ளி என்றாலே, 'கல்வி நல்லா இருக்காது; தனியார் பள்ளிகளில்தான் நல்லா இருக்கும்'னு தவறான கருத்து இருந்துச்சு. அதை முதலில் உடைக்க நினைச்சேன். அதனால், மக்களின் பங்களிப்போடு, எங்க பள்ளியில் பல வசதிகளை கொண்டு வந்தேன்.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் செல்வக்கண்ணன்
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் செல்வக்கண்ணன்
நா.ராஜமுருகன்

மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதிக்காமல், கராத்தே, யோகா, நடனம், விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளை வளர்க்கும் முயற்சிகளையும் மேற்கொண்டோம். கரூர் மாவட்டத்தில் முதன்முதலில் எங்கள் ஊரைச் சேர்ந்த மக்கள்தான் பள்ளிக்கு கல்விச்சீர் கொடுத்தனர்.

இந்தமுறை ஏழரை லட்சம் கல்விச்சீர் கொடுத்திருக்காங்க. இதுவரை அதையும் சேர்த்து மொத்தமாக இருபத்தைந்து லட்சம் வரை கல்விச்சீர் கொடுத்து, எங்க ஊர் மக்கள் எங்கள் பள்ளி வளர்ச்சிக்குப் பேருதவி பண்ணி இருக்காங்க. நான் தேசிய நல்லாசிரியர் விருது வாங்கினதுக்கு, சினிமா விருது வழங்கும் விழாபோல் ரொம்ப கிராண்டா விழா நடத்தி, பாராட்டினாங்க. பள்ளி வளர்ச்சிக்குக் காரணமான எல்லா ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கௌரவிச்சாங்க.

கிராம மக்கள்
கிராம மக்கள்
நா.ராஜமுருகன்

பாராட்டு விழாவுக்கு நடுவே மேஜிக் ஷோ, கலர்ஃபுல் நடனம் என்று தூள் கிளப்பிட்டாங்க. கிராம மக்கள் எங்க மீது வெச்சுருக்கிற பேரன்பைப் பார்க்கும்போது, எங்க பொறுப்பு இன்னும் அதிகமாகி இருக்குனு தோணுது. இந்தப் பள்ளியை இந்திய அளவில் சிறந்த அரசுப் பள்ளி என்று உருவாக்குவதுதான் உச்சக்கட்ட லட்சியம். அந்த லட்சிய வேட்கையோடுதான் தினம் தினமும் புதுப்புது முயற்சிகளைப் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். அந்த லட்சியத்தைக் கண்டிப்பாக எட்டிப்பிடிப்போம்" என்றார், உறுதியான வார்த்தைகளில்!. லட்சியம் நிறைவேற வாழ்த்துகள் ஆசிரியரே!.