வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயில கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவருக்கு நான்கு மணி நேரத்தில் பரிசீலித்து எந்தவொரு பிணை இல்லாமல் ரூ.40 லட்சம் கடன் வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது யூனியன் வங்கி.

மதுரை வில்லாபுரத்தை சேரந்த மதியழகன் என்பவரது மகன் யோகேஷ்வர். ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் முதுகலைப் பட்டம் பயில்வதற்குத் தேர்வாகி இருந்தார்.
இதற்காக கல்விக்கடனுக்கு விண்ணப்பித்த மாணவருக்கு மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள யூனியன் வங்கிக்கிளை அந்த மாணவருக்கு ரூ.40 லட்சம் பிணையில்லா கல்விக்கடன் வழங்கியது. இதை மதுரை எம்.பி.சு.வெங்கடேசனை முன்னிலையில் வைத்து வழங்கினார்கள்.

இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் கேட்டதற்கு, "மாணவர் யோகேஷ்வர் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் கல்விக்கடன் வழங்கும் பணியை வங்கி அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.
இன்று யூனியன் வங்கியின் சார்பில் தெற்கு மாசி வீதி கிளையில் மாணவர் யோகேஷ்வருக்கு கல்விக்கடனுக்கான ஆணையை வழங்கி வங்கி மாணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். துரிதமாக செயல்பட்டு கல்விக்கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்குவதில் மதுரை மாவட்டம் முன்னுதராணமாக திகழ்கிறது. இந்த ஆண்டு ரூ.200 கோடி கல்விக்கடன் வழங்குவது என்று திட்டமிட்டு தொடர் கவனம் செலுத்தி வருகிறோம்.

யூனியன் வங்கியின் தெற்குமாசி வீதி கிளை மட்டும் இதுவரை ரூ.1.5 கோடி கல்விக்கடன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டினைப் போல, இந்த ஆண்டும் மதுரை மாவட்டம் கல்விக்கடன் வழங்குவதில் சாதனை புரியும், இதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியை பெறுகின்றனர்” என்றார்.
இந்நிகழ்வில் வங்கியின் முதன்மை மேலாளர் வரதராஜன், கிளை மேலாளர் சார்லஸ், துணை மேலாளர் ரதீஷ் ஆகியோர் பங்கெடுத்தனர்.