`தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு தமிழக மருத்துவமனையில் பணி செய்ய மறுத்த கேரளாவை சேர்ந்த மருத்துவர், 50 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பீடாக செலுத்த வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

அகில இந்திய இட ஒதுக்கீடு மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் அரசுக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் என்ற விதி தமிழகத்தில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஸ்ரீஜித் ரவி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் முதுகலை நரம்பியல் பட்ட மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்து கடந்த 2020-ம் ஆண்டு படித்து முடித்தேன்.

`படிப்பு முடிந்தவுடன் தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் 2 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றிருந்தனர். இந்நிலையில், 2 கோடி செலுத்த அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ``பணி வழங்கும் வகையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள மனுதாரருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்களுக்கான ஒப்பந்தமான 10 ஆண்டு பணியை 2 ஆண்டாகவும், இழப்பீட்டு தொகை 2 கோடியை 50 லட்சமாகவும் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மனுதாரரின் வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய பணி ஒப்பந்தங்கள், இழப்பீட்டு தொகையை ஒரே மாதிரியாக நிர்ணயிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் ஆஜராக உத்தரவிட்டும் மனுதாரர் ஆஜராகவில்லை.
நாகப்பட்டினத்தில் துணை அறுவைசிகிச்சை மருத்துவர் பணி வழங்கியும் நல்ல சம்பளம் நிர்ணயிக்கப்பட்டும் மனுதாரர் பணியாற்ற தயாராக இல்லை. அவர் தமிழகத்தில் பணியாற்ற விரும்பவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரையில் மனுதாரர் 2 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும். அல்லது அரசு நிர்ணயித்த 50 லட்சம் ரூபாவை செலுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது ``அகில இந்திய இடஒதுக்கீடு மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் வெளி மாநிலத்தவர் 10 வருட காலம் தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் 2 கோடி ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும் என விதி ஏற்படுத்தப்பட்டது. அது தற்போது, 2 வருடம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் 50 லட்சம் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது'' என்றனர்.