Published:Updated:

மகாராஷ்டிரா தமிழ்ப் பாடப்புத்தகத்தில்... புதுக்கோட்டை ஜெயலெட்சுமி

ஜெயலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலெட்சுமி

`கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் பக்கம் 4-ல் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடம், மாணவர் களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருக் கிறது

மகாராஷ்டிரா தமிழ்ப் பாடப்புத்தகத்தில்... புதுக்கோட்டை ஜெயலெட்சுமி

`கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் பக்கம் 4-ல் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடம், மாணவர் களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருக் கிறது

Published:Updated:
ஜெயலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலெட்சுமி

``பாடப்புத்தகத்துல என்னைப் பற்றி பாடம் வரப்போகுது, அதுவும் மகாராஷ்டிரா தமிழ் புக்லனு சொன்னப்போ, ரொம்ப பரவசமா இருந்தது. அந்த புக்ல என்னை நான் பார்த்தப்போ, இன்னும் நிறைய பண்ணணும் தோணுச்சு அண்ணே...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ஜெயலெட்சுமி.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெயலெட்சுமி. தற்போது புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வருகிறார். முன்னர் இவர், புதுக்கோட்டை, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்தபோது, தனியார் நிறுவனம் நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றிபெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றார். நாடு முழுவதும் இருந்து தேர்வாகியிருந்த 4000 மாணவர் களில், அரசுப் பள்ளி மாணவி ஜெய லெட்சுமியும் ஒருவர். ஆனால், பயணச் செலவை மாணவர்களே ஏற்க வேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவிக்க, செய்வதறியாது நிலைகுலைந்து இருந்தார் ஜெயலெட்சுமி.

ஜெயலெட்சுமி
ஜெயலெட்சுமி

அந்த நேரத்தில், பல்வேறு இடங் களிலிருந்தும் ஜெயலெட்சுமிக்கு உதவிக் கரங்கள் நீண்டன. ஜெயலெட்சுமிக்குத் தேவையான உதவித்தொகையும் கிடைத்து விட்டது. அந்நிலையில், ‘கிராமாலயா’ என்னும் தொண்டு நிறுவனமும் ஜெயலெட்சுமிக்கு உதவ வர, தனக்குத் தேவையான உதவிகள் கிடைத்துவிட்டதை தெரிவித்தார் ஜெய லெட்சுமி. ‘வேறு ஏதேனும் உதவி வேண்டுமா?’ என்று அவர்கள் கேட்க, ‘எங்கள் ஊர்ப் பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்குக் கழிப் பறைகள் கட்டிக்கொடுக்க இயலுமா?’ என்று கோரினார் ஜெயலெட்சுமி. அவர்களும் ஆர்வத்துடன் முன்வர, அந்தக் கிராமத்தில் குளியலறையுடன் கூடிய 125 கழிப்பறைகளை அமைத்துக் கொடுத்தனர்.

தனக்கு வந்த உதவியை, தன் ஊருக்காக மடைமாற்றிய ஜெயலெட்சுமியை ஊர் மக்கள் கொண்டாடினர். இதுகுறித்து 2020 அக்டோபர் 27 தேதியிட்ட அவள் விகடன் இதழில் ‘ஒரு கனவு... 125 கழிப்பறைகள்... பள்ளி மாணவியால் கிராமத்துக் குக் கிடைத்த பரிசு!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். 2020-ம் ஆண்டு, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதும் பெற்றார் ஜெயலெட்சுமி.

இதற்கிடையே, நாசா செல்ல தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த ஜெய லெட்சுமிக்கு, கொரோனா சூழலால் அந்தப் பயணம் தள்ளிவைக்கப்பட்டிருக் கிறது. தொடர்ந்து, கடந்த ஆண்டு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், பல்வேறு அமைப்புகளின் சார்பில், ஆயிரம் மாணவர் களைக் கொண்டு, 100 சிறிய ரக செயற்கைக்கோள்கள் (Femto satellite) தயார் செய்யப்பட்டு, வானில் செலுத்தப்பட்டன. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்களின் அளவை அறிவதே இவற்றின் நோக்கம். இந்தக் குழுவில் ஜெய லெட்சுமியும் இடம்பெற்றிருந்தார்.

மகாராஷ்டிரா தமிழ்ப் பாடப்புத்தகத்தில்... புதுக்கோட்டை  ஜெயலெட்சுமி

இப்படி, ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவியான ஜெய லெட்சுமியின் செயல்பாடுகள், சமூக சேவை களை எல்லாம், மகாராஷ்டிரா மாநிலத்தின் 7-ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் ஒரு பாடமாக இடம்பெற வைத்திருக்கிறது மகாராஷ்டிரா அரசு.

`கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் பக்கம் 4-ல் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடம், மாணவர் களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருக் கிறது. பல திசைகளில் இருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொண்டிருக்கும் ஜெயலெட்சுமியிடம் பேசினோம்.

“நான் நாலாம் வகுப்புப் படிச்சப்போ, சமூக அறிவியல் பாடப்புத்தகத் துல கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் பற்றிய பாடங்கள் இருக்கும். அந்தப் பாடத்தை நடத்தின துர்கா டீச்சர்கிட்ட, `இவங்க மாதிரி நானும் வரணும்னா என்ன செய்யணும் டீச்சர்?’னு கேட்டேன். ஏதோ சின்னப்புள்ள ஆர் வத்துல கேக்குதுனு என்னை கடக்காம, `நல்லா படிக்கணும், உன்னால முடியாத எந்த விஷயமும் இல்லை, செய்யுறதை திருந்தச் செய், உன் கனவுகளை பெருசாக்கு, வானமே எல்லை, தேடலை அதிகப்படுத்து, உன்னையும் ஒரு நாள் எல்லாரும் இப்படி படிப்பாங்க’னு என் மேல எனக்கே நம்பிக்கை வர்ற அளவுக்கு ஊக்கம் கொடுத்தாங்க டீச்சர்.

இன்னிக்கு என்னைப் பத்தி பாடப் புத்தகத் துல வந்திருக்கிறதை பார்க்குறப்போ, டீச்சர் சொன்ன மாதிரி, கிராமமா இருந்தாலும், அரசுப் பள்ளியில் படிச்சாலும், முயற்சி செஞ்சா எதுவும் சாத்தியம்ங்கிறதை உணர்றேன்’’ என்கிறார் தன்னம்பிக்கை மிளிர.

 மகாராஷ்டிரா தமிழ்ப் பாடப்புத்தகத்தில்...
மகாராஷ்டிரா தமிழ்ப் பாடப்புத்தகத்தில்...
 மகாராஷ்டிரா தமிழ்ப் பாடப்புத்தகத்தில்...
மகாராஷ்டிரா தமிழ்ப் பாடப்புத்தகத்தில்...

மும்பையில் வசிக்கும் தமிழ்க் குழந்தை களுக்காக மாநகராட்சி நிர்வாகம் 32 தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளில் மொத்தம் 4,020 மாணவர்கள் படித்து வருகின்றனர். இம்மாணவர்களுக்குத் தேவையான தமிழ்ப் புத்தகங்களை ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்துதான் வரவழைத்துக் கொண்டிருந்தனர். மும்பை சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ்ப் புத்தகம் இருக்க வேண்டும் என்பதால், இப்போது மகாராஷ்டிராவிலேயே தயாரிக்க ஆரம் பித்துள்ளனர். இதற்காக தமிழ் ஆசிரியர்கள் அடங்கிய கமிட்டி உரு வாக்கப்பட்டது.

தமிழ்ப் பாடப்புத்த கங்களுக்கான பாடத் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பை மகாராஷ் டிரா பாடநூல் கழகம், பாடப்புத்தகங்கள் தயாரிப்பு சிறப்பு அதிகாரி துளசி பாரத் பூசனிடம் ஒப்படைத்தது. சென்னையில் படிப்பை முடித்த துளசி பூஷன் தான், 7-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் மாணவி ஜெயலெட்சுமி குறித்த பாடத்தை சேர்க்க முக்கியக் காரணம். துளசியிடம் பேசினோம்...

``மும்பை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். எனவே, பாடங்களில் வழக்கமான இலக்கியங்கள் மட்டுமல்லாது, மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டும்விதமாக அது இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இப்போதுள்ள இளம் தலைமுறையினர் திரைப்படத்தைப் பார்த்தால் அதில் வரும் கதாபாத்திரமாக வர வேண்டும் என்று நினைக்கின்றனர். யூடியூபர்கள் வயப்படு கிறார்கள். எனவே, மாணவர்களுக்கு முன் உதாரணமாக உள்ள ஒருவரை பற்றிய பாடத்தை உருவாக்கும்படி, எங்களுக்கு பாடப்புத்தகங்கள் எழுதிக்கொடுக்கும், மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் ரெ.சிவாவிடம் கேட்டுக் கொண்டோம். அவர் தேர்ந்தெடுத் தவர்தான், மாணவி ஜெயலெட்சுமி’’ என்றார்.

துளசி - ரெ.சிவா
துளசி - ரெ.சிவா

ஆசிரியர் ரெ.சிவாவிடம் பேசினோம்... ``மாணவி ஜெயலெட்சுமியிடம், இந்தப் பாடத் துக்காக நான் பலமுறை பேசினேன். அவரே நேரடியாக சொல்வது போன்று பாடத்தை உருவாக்கினால், மாணவர்களுக்கு, நம்மைப் போன்ற ஒருவர்தான் இதை எழுதியிருக்கிறார் என்ற உணர்வு வரும் என்பதால் அதேபோல் செய்தோம். நிச்சயம் நாங்கள் எதிர்பார்த்தபடி, மாணவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரண மாக ஆவார்’’ என்றவர்...

``தான் வறுமையில் இருந்தபோதும் தனக்காக எதையும் கேட்காமல் தன் கிராமத் துக்காக உதவி கேட்டவர் ஜெயலெட்சுமி. இன்றைக்கும், மும்பையில் வசிக்கும் ஆயிரக் கணக்கான தமிழர்களின் வீடுகளில் கழிப்பறை இல்லை. அந்த மாணவர்கள் எல்லோரும், தாங்களும் எதிர்காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்க ஜெய லெட்சுமி தூண்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார் உறுதியாக.

திரி... சுடராகட்டும்!