Published:Updated:

முதல் முறையாக மேனேஜராக ஆகியுள்ளீர்களா..?

எம்.பி.ஏ புக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.பி.ஏ புக்ஸ்

நீங்கள் சூப்பர் மேனேஜராக மாற வழிகள்...

MBA BOOKS

முதன்முதலாக மேனேஜர் பதவி ஏற்பவர்கள் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். காரணம், இருக்கும் பணியாளர்கள் மத்தியில் மேனேஜர் பதவிக்கான ஆட்களைத் தேர்வு செய்வதில் நிறுவனங்கள் முழுமை யான அலசல்களைச் செய்வதேயில்லை. பணியாளர்கள் மத்தியில் தாங்கள் செய்யும் வேலையைச் சிறப்பாகச் செய்யும் நபர்களே மேனேஜர்களாக பதவி உயர்வு தரப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றனர். கடந்த காலத்தில் சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள் எதிர்காலத்திலும் சிறப்பாகப் பணிபுரிவார்கள் என்று நம்புவதே இதற்குக் காரணம்.

ஆனால், தனிநபராக ஒருவர் சிறப்பாகப் பணிபுரிவதற்குத் தேவை யான திறமைகளும் ஒரு மேனேஜராக சிறப்பாகப் பணிபுரிய தேவையான திறமைகளும் வெவ்வேறானவை. இதனாலேயே தனிநபராக சிறப்பாகச் செயல்படும் நபர்களால் சிறந்த மேனேஜராக சோபிக்க முடியாமல் போகிறது.

மேனேஜர்களுக்கு வேலைகளின் மீதான கவனத்தைவிட மனிதர்களின் மீதான கவனம் கொள்ளும் திறனே அதிகமாகத் தேவைப்படுகிறது. மேனேஜர்கள் தன்கையே தனக்குதவி என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் அடுத்தவர்களை நம்பியே செயல்பட வேண்டியிருக்கும். நான் என்ற குறுகிய மனப்பான்மையோடு செயல்படும் தனிநபர் பணியாளர் என்ற நிலையிலிருந்து நாம் என்ற அகன்ற மனப்பான்மையோடு செயல்படும் குணத்துக்கு மேனேஜராகப் பதவி உயர்வு பெற்றவர் தன்னை உடனடியாக மாற்றிக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நிதர்சனம்.

எம்.பி.ஏ புக்ஸ்
எம்.பி.ஏ புக்ஸ்

மேனேஜருக்கான தகுதி

நிறுவனங்கள் மேனேஜர்களுக்கு மேலாண்மை குறித்த பயிற்சிகளுக் கான ஏற்பாடுகளை அடிக்கடி செய்து தருகிறது. அனுபவஸ்தர்களிடம் இருந்து பல்வேறுவிதமான மேனேஜ்மென்ட் ஸ்டைல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மேனேஜர் களுக்கு இந்தப் பயிற்சி தேவையான ஒன்றாக இருந்தாலும், மேனேஜர்களை விட மேனேஜர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கே அவசியம் தரப்பட வேண்டும். இந்த விதமான பயிற்சிகள் மேனேஜராகப் பதவி உயர்த்தப்பட வாய்ப்பிருப்பவர் களுக்கு இரண்டு விதத்தில் உதவும். முதலாவதாக, நாம் மேனேஜர் பதவிக்கு லாயக்கானவர்தானா என்ற சுய பரிசோதனையைச் செய்து கொள்ளவும். இரண்டாவதாக மேனேஜர் பதவி என்பது அவர் களுடைய இயல்பான சுபாவத்துக்கு ஒத்துவருமா என்பதை அறிந்து கொள்ளவும் உதவும்.

இதில் கொடுமை என்னவென்றால், பெரும்பாலான நிறுவனங்கள் ‘நாங்கள் உன்னை மேனேஜர் ஆக்கி விடுவோம். அதில் நீந்திக் கரை சேர்வதும் மூழ்குவதும் உன்னுடைய பாடு’ என்ற எண்ணத்திலேயே செயல் பட்டுவருகின்றன. இதனாலேயே திறமையான மேனேஜருக்கான தகுதி சற்றும் இல்லாதிருக்கும் அதே சமயம், தனிநபர் செயல்பாட்டைக் கொண்டிருக்கும் நபர்கள் சம்பள உயர்வுக்கு மேனேஜராவதைத் தவிர, வேறு வழியில்லாததால் நானும் மேனேஜர்தான் என்று பதவி உயர்வை வாங்கிக் கொண்டுவந்து உடன்பணிபுரிவர்களைப் படுத்தி எடுக்கும் நிலையை நாம் அடிக்கடி பார்க்கிறோம். மனிதர்களைத் திறம்பட நிர்வகிப்பதிலேயே ஒரு நிறுவனத்தின் வாழ்வும் தாழ்வும் இருக்கிறது என்றபோதிலும் நிறுவனங்களால் இந்த விஷயத்தில் போதுமான கவனம் செலுத்தப்படு வதேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

காத்திருக்கும் சவால்கள்

தனிநபர் செயல்திறன் கொண்ட அதே சமயம், மனிதர்களை நிர்வகிக்கும் இயல்பு சற்றும் இல்லாத நபர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மனிதர்களை நிர்வகிக்க வேண்டியில்லாத பதவி ரீதியான அங்கீகாரங்களை வழங்க நிறுவனங்கள் முன்வருவதே இதற்கு சரியான தீர்வாகும். இந்த மாதிரியான ஒரு தீர்வு இல்லாவிடில், திறமையான பணியாளர்கள் அனைவருமே சம்பள உயர்வுக்கு வேறுவழியில்லை என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்பிருப்பதால், மேலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள். இப்படிப் பட்டதொரு காரணத்தால் ஒருவர் மேலாளர் பதவியை ஏற்றால் குழுவில் இருப்பவர்கள் வேலையை விட்டுவிட்டு போகத்தான் செய்வார்கள்.

இந்த மாதிரியான மேலாளர்கள் நிறுவனத்துக்கு மட்டும் சிக்கல்களை உருவாக்குவதில்லை. தங்களுக்கு தாங்களே சிக்கலாக உருவெடுத்து விடுவார்கள். ரிட்டையராகும்போது அவர்கள் படும்பாடு இருக்கிறதே, அதை சொல்லி மாளாது. நான் இல்லாவிட்டால் இந்த நிறுவனத்தை யார் காப்பாற்றுவார்? என்னைத் தவிர பொறுப்பும் அக்கறையும் கொண்ட ஆள் இந்த நிறுவனத்திலேயே இல்லையே, நான் பிறந்ததே இந்த நிறுவனத்துக்காகதானே என்ற ரேஞ்சுக்கு கவலைப்பட்டு, சந்தோஷமாக இருக்க வேண்டிய பணிமூப்பு ஓய்வுக்காலத்தை நரக வேதனையில் கழிப்பார்கள்.

சிறப்பாகச் செயல்படும் நிறுவனங் களில் மேனேஜர்களாகத் தேர்வு செய்யப் படுபவர்கள் வெறும் டெக்னிக்கல் அறிவைக் கொண்டிருப்பதால் மட்டுமே அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப் படுவதில்லை. அவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் தலைமைப்பண்பைக் (லீடர்ஷிப்) கருத்தில்கொண்டே அந்தப் பதவி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பண்பைக் கொண்டிருக்கும் நபர்கள் மேனேஜர் பதவிக்குத் தேர்வு செய்யப்படும்போது அவர்களுடைய குழு சுலபமாக அவர்களை மேனேஜராக ஏற்றுக்கொள்கிறது. இந்த நிலையில், உங்களுடைய ஆரம்பகால பர்ஃபாமன்ஸ் என்பது உங்களுக்கு முன்னால் அந்தப் பதவியில் இருந்தவருடைய பர்ஃபாமன்ஸுடன் மட்டுமே ஒப்பிடப்படும். உங்களுக்கு முன்னே இருந்தவர் சுமாரான பேர்வழி என்றால், நீங்கள் நம்பிக்கை நட்சத்திரமாகவும், சூப்பர் பேர்வழி என்றால், நீங்கள் ஒரு வேஸ்ட் என்பது போலவுமே கருதப்படுவீர்கள். இரண்டாவது சூழலில் உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கும்.

பதவி ஏற்றவுடன்...

புதியதாக மேனேஜராகப் பதவி உயர்த்தப்பட்டவுடனேயே ஆர்டர்கள் போடவே கூடாது. இது சிக்கலுக்கே வழிவகுக்கும். நேற்றுவரை சகாவாக இருந்த இந்த ஆள் இன்றைக்கு ஆர்டர் போடுவதா என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தால், வேலை நன்றாக நடக்க வாய்ப்பே இல்லை. கொஞ்சம் பதமான முறையிலேயே ஆரம்பகட்டத்தில் நீங்கள் செயல்ட வேண்டியிருக்கும். பணிவாக வேலையைச் சொல்லி, அது செய்யப்படாவிட்டால் பதவியைக் காட்டி நடத்திக் கொள்வதே சிறந்த தந்திரமாக இருக்கும்.

உடன் பணிபுரிபவர்களைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். இதற்கு 60 நாள்கள்வரை ஆகும். இயன்றவரை அதுவரை அவர் களுடன் அலுவல் ரீதியான பேச்சு வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது. இ-மெயில் அல்லது போன் மூலம் காரியங்களை நடத்துவதைவிட ஆரம்பத்தில் நேரில் பேசி காரியங்களை நடத்த முயல்வதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும். ஒரு சிலர் பணிபுரிந்த பிரிவிலேயே பதவி உயர்வு பெறுவார்கள். அவர்களுக்கு அங்கே இருப்பவர்களுடன் இருக்கும் நட்பு என்பது பதவி உயர்வுக்கு முன்னால் எப்படி கையாளப்பட வேண்டும் என்பது புரியாமல் போகும். பதவி உயர்வு வந்தவுடன் நட்பை கைவிட வேண்டியது இல்லை. அதே சமயம், பணி நடக்க அந்த நட்பு இடைஞ்சலாக இருந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

மனநிலை என்பதை வெகு கவனமாகக் கையாள வேண்டும். நீங்கள் எந்த மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய சகாக்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், மனநிலையை சீராக (வெளியே தெரியாமல்) வைத்திருக்கும் கலையை நீங்கள் சீக்கிரமாகப் பழகிக்கொள்ள வேண்டும். அதே போல், சக பணியாளர்கள் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும். இது ஒரே நாளில் நடந்து விடாது. நாளடை வில் படிப்படியாக உங்களுடைய செயல்பாட்டின் மூலமே இதை வளர்த்தெடுக்க வேண்டியிருக்கும். பெர்ஃபெக்ட்டாக எதையும் செய்ய முடியாது என்று தெரிந்துமே ஒரு மேனேஜராக அதை எதிர்பார்த்து செயல் படக் கூடாது. மனிதர்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. அதைச் சரியாகக் கையாண் டால் தவற்றை உணர்ந்து அதைச் சரிசெய்ய முயற்சி செய்வார்கள். அதை விட்டுவிட்டு அவர்களைக் குரூரமாகத் தண்டித்தால், என் மேனேஜர் ஒரு பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் என்று முத்திரை குத்தி உங்கள் மீது ஆத்திரம் கொள்வார்களே ஒழிய, தவற்றைச் சரி செய்துகொள்ளும் வாய்ப்பேயில்லை.

புக்ஸ்
புக்ஸ்

புத்தகத்தின் பெயர்: The Firs t-Time Manager
ஆசிரியர் : Jim McCormick
பதிப்பாளர்: Amacomr

இன்னும் பல அம்சங்கள்...

பாராட்டுதலின் அவசியம், பிறர் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேட்டல், ஒரு குழுவை வளர்த்தெடுப்பது எப்படி, பணியாளர்களுடன் வரும் பிரச்னைகளை எப்படிக் கையாள்வது, அவர்களை எப்படிப் பயிற்றுவிப்பது, மாற்றத்தை எப்படிக் கொண்டுவருவது, எப்படி பணியாளர்களை ஒழுங்குபடுத்துவது, எதற்கும் சரிவராதவர்களை எப்படி வேலையை விட்டுத் தூக்குவது, எப்படி ரிஸ்க்குகளைக் கையாள்வது, புதிய முயற்சிகள் மற்றும் புத்தாக்கங்களை எப்படி ஊக்குவிப்பது, அப்ரைசல்கள் மற்றும் சம்பள உயர்வை எப்படிப் பரிந்துரைப்பது போன்ற புதிய மேனேஜர்கள் எதிர் கொள்ளும் அத்தனை விஷயங்களுக்கும் தேவை யான நுணுக்கமான விடை களை எளிதான நடையில் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

புதிதாகப் பதவி உயர்வு பெற்ற மேனேஜர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தப் புத்த கத்தை எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல, அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.

பிட்ஸ்

ரசு நிறுவனங் களில் இருக்கும் முதலீட்டைத் திரும்பப் பெறுவது கடந்த ஆண்டில் மிகவும் குறைந்துள்ளது. ரூ.2.10 லட்சம் கோடி இலக்கு நிர்ணயம் செய்த மத்திய அரசு, வெறும் ரூ.13,844 கோடி மட்டுமே திரும்பப் பெற்றுள்ளது.