Published:Updated:

``ஐஐடி வளாகத்தில் ரகசியமா நடந்த புதிய கல்விக் கொள்கைக் கூட்டம்” - த.பெ.தி.க புகாரால் ரத்து

ஆ வல்லபி

“பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்று சொல்லிவிட்டு பெற்றோர்களே இல்லாமல் எப்படிக் கூட்டம் நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது

கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் த.பெ.தி.கவினர்
கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் த.பெ.தி.கவினர் ( வல்லபி )

புதிய கல்விக் கொள்கை தொடர்பான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஒருங்கிணைப்பில் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் (ஐ.ஐ.டி) இன்று நடந்தது.

கலந்தாலோசனை அறையில் த.பெ.தி.கவினர்
கலந்தாலோசனை அறையில் த.பெ.தி.கவினர்
வல்லபி

நிகழ்வின் இடையே வந்த தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள், “பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்று சொல்லிவிட்டு பெற்றோர்களே இல்லாமல் எப்படிக் கூட்டம் நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஐ.ஐ.டியின் ஒரே ஒரு பேராசிரியர் மட்டுமே கலந்துகொண்டார். அவரைத் தவிர்த்து கேந்திரிய வித்யாலயாவின் ஆசிரியர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர். பி.ஐ.பிக்கு இதுகுறித்து அளிக்கப்பட்ட அழைப்பிலும் இது யாருக்கு மட்டுமான அழைப்பு, எந்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம் என்கிற எவ்வித தகவல்களும் இடம்பெறவில்லை.

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
வல்லபி

இதையறிந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த த.பெ.தி.க உறுப்பினர்கள் பலரும், ‘’இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ரகசியமாகக் கூட்டம் நடத்த ஒப்புக்கொள்ள முடியாது” என்று வாதம் செய்தனர். அதிகாரிகளுக்கும் அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. முறையான அறிவிப்பு, விளம்பரம் செய்த பின்பே கூட்டம் நடத்தவேண்டுமென்று அவர்கள் வாதாடியதோடு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தினர். இதன் காரணமாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்வதாகக் கூறிவிட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலைந்து சென்றனர். கோவையிலும் இது போன்றதொரு நிகழ்வு அண்மையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.