Published:Updated:

`மது அருந்தி களங்கம் ஏற்படுத்திவிட்டீர்கள்!' -மாணவர்களை நீக்கிய கல்லூரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

மாணவர்கள்
மாணவர்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வீட்டில் மது அருந்திய வீடியோ ஒன்று வெளியானது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சீருடை அணிந்தபடி வீட்டில் மது அருந்தியதற்காகக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் தற்போது தேசிய மகளிர் ஆணையம் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

`சென்னையில் ஃபாத்திமா; திருச்சியில் ஜெப்ரா பர்வீன்!’- அதிர்ச்சி தரும் கல்லூரி மாணவிகள் தற்கொலை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வீட்டில் மது அருந்திய வீடியோ ஒன்று கடந்த டிசம்பரில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கடந்த 26-12-2019-ல் கூடிய அந்தக் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம், விதிமுறைகளுக்கு மாறாகவும் கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அந்தச் செயல் அமைந்துவிட்டதாகக் கூறி 2 ஜனவரி 2020 முதல் மாணவர்கள் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கல்லூரியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களில் மூன்று பெண்களும் அடக்கம்.

மாணவர்களில் மூன்று பெண்களும் அடக்கம் என்னும் நிலையில் பெண் கல்வியைப் பாதிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் இந்தச் செயலை செய்திருக்கக் கூடாது.
தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு

இதையடுத்து, இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த அனைத்திந்தியத் தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு கல்லூரி இணைக்கப்பட்டிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கும் மாநில அரசுக்கும் தனித்தனியே புகார் மனு ஒன்றை அளித்திருந்தது.

அதில், `மது அருந்துவது சட்டப்படி குற்றமல்ல. இருப்பினும் மதுவுக்கு அடிமையாதல் சமூகப் பிரச்னை என்கிற நோக்கத்தில் மாணவர்களைத் தற்காலிக நீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது, பெற்றோர்களை அழைத்துப் பேசுவது, உளவியல் ஆலோசனை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டிருக்க வேண்டும்.

மகளிர் ஆணையம்
மகளிர் ஆணையம்

ஆனால், நேரடியாக அவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்குவது அவர்களுடைய கல்வியைப் பாதிக்கும். குறிப்பாக மாணவர்களில் மூன்று பெண்களும் அடக்கம் என்னும் நிலையில் பெண் கல்வியைப் பாதிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் இந்தச் செயலை செய்திருக்கக் கூடாது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூட்டமைப்புத் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தை இந்தக் கூட்டமைப்பு அணுகியது. ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் தற்போது கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த விவகாரத்தில் சட்டப்படி சரியான நடவடிக்கை எதுவோ அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து கல்லூரி நிர்வாகம் 30 நாள்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு