Published:Updated:

நீட் மோசடி - அலறவைக்கும் ஆல்இண்டியா நெட்வொர்க்... அமுக்கப்பார்க்கிறதா அரசு?

நீட் தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
நீட் தேர்வு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்துக்காக, இதுவரை ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீட் மோசடி - அலறவைக்கும் ஆல்இண்டியா நெட்வொர்க்... அமுக்கப்பார்க்கிறதா அரசு?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்துக்காக, இதுவரை ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:
நீட் தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
நீட் தேர்வு

வர்களில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில், நீட் தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்து தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் படித்துவருவதும், அவர்கள் அனைவருக்கும் ஒரே ஏஜென்ட் உதவியதும் தெரியவந்துள்ளது. யார் அந்த ஏஜென்ட் என்ற தேடுதல் வேட்டையில் சி.பி.சி.ஐ.டி தீவிரமானபோது, நீட் விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 27-ம் தேதியன்று மூன்று மாணவர்கள் போலீஸாரிடம் தஞ்சமடைந்தனர். இப்படி, கிணறு தோண்ட பூதமாக நீண்டுகொண்டே போகிறது நீட் மோசடி நெட்வொர்க். அடுத்து சிக்கப்போவது யார் என்பதுதான் மருத்துவ உலகையே தலைச்சுற்றவைக்கும் கேள்வி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்!

இந்த மோசடியை அறிந்த ஒரு கும்பல், பணம் கேட்டு மிரட்டியதும் ஒரு மாதத்துக்கு முன்பே நடந்துள்ளது. சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன், அவரின் தந்தை சரவணன், சத்யசாய் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அபிராமி, அவரின் தந்தை மாதவன், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவரான திருச்சூரைச் சேர்ந்த ராகுல், அவரின் தந்தை டேவிஸ் ஆகியோரை தொலைபேசியில் அழைத்த ஒரு மர்மநபர், ‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவம் படித்துவருவது எனக்குத் தெரியும். அதற்கான மொத்த ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. எனக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டும். கொடுக்கவில்லை என்றால், ஊடகங்களுக்கு அனைத்து ஆவணங்களையும் அனுப்பிவிடுவேன்’ என்று மிரட்டுகிறான். அனைவரும் பதறிப்போய், தங்கள் ஏஜென்ட்டைத் தொடர்புகொள்கிறார்கள். முடியவில்லை! அந்த நேரம், உதித் சூர்யா பற்றிய விவரங்கள் ஊடகங்கள்மூலம் கசிய, நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. மீண்டும் தொலைபேசியில் அழைத்த அந்த நபர், ‘உதித் சூர்யாவைப் பற்றிய தகவல்களை நான்தான் ஊடகங்களுக்குச் சொன்னேன். அவன் உங்களில் ஒருவன் என்பதும் எனக்குத் தெரியும். பணம் கேட்டேன், கொடுக்கவில்லை. அதனால்தான் காட்டிக்கொடுத்துவிட்டேன். உடனே பணத்தைத் தயார்செய்யுங்கள்… இல்லையென்றால், அடுத்து நீங்கள்தான்!’ என்று மிரட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளான்.

நீட் மோசடி - அலறவைக்கும் ஆல்இண்டியா நெட்வொர்க்... அமுக்கப்பார்க்கிறதா அரசு?

அச்சத்தில் உறைந்த பிரவீனின் தந்தை சரவணன், தன் வழக்கறிஞரிடம் விவரத்தைத் தெரிவிக்கிறார். அவரின் உதவியோடு சென்னை மாநகர காவல்துறையின் உதவியை நாடுகிறார்கள். அவர்களிடமிருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு தகவல் போகிறது. சென்னை விரைந்த சி.பி.சி.ஐ.டி தனிப்படை, மூன்று மாணவர்கள், அவர்களின் தந்தைகளிடம் விசாரணை செய்கிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானதும், அனைவரையும் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரணையைத் தொடங்கியது. ராகுல், அவரின் தந்தை டேவிஸ், பிரவீன், அவரின் தந்தை சரவணன் ஆகியோர் தேனி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அபிராமியின் புகைப்படத்தில் சிறு சந்தேகம் இருப்பதால், தடயவியல் துறைக்கு அனுப்பியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதனால், விசாரணையை முழுமையாக முடிக்காமல் தற்காலிகமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். மீண்டும் அவர்களிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே கல்லூரி மாணவர்கள்!

தற்போது கைதான அனைவரும் சென்னை, பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி, இந்தக் கல்லூரியை இந்திய மருத்துவ கவுன்சில் மூடிவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடுத்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவர்களுக்கான மாற்றுக் கல்லூரியையும் அரசு ஏற்பாடு செய்யவில்லை.

நீட் மோசடி - அலறவைக்கும் ஆல்இண்டியா நெட்வொர்க்... அமுக்கப்பார்க்கிறதா அரசு?

பாதிக்கப்பட்ட மாணவர்கள், நீட் தேர்வு எழுதினர். சிலர் வெற்றிபெற்றனர்; பலர் தோல்வியடைந்தனர். அப்போதுதான் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் நண்பர் மருத்துவர் சஃபி மூலமாக ரஷீத் என்கிற ஒரு ஏஜென்ட், இந்த மாணவர்களின் பெற்றோருக்கு அறிமுகமாகிறார். அவர்களிடம், ‘நீங்கள் பணமும் சான்றிதழ்களும் மட்டும் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள்போலவே ஒருவரைத் தேர்வுசெய்து, நீட் தேர்வு எழுதவைத்து அதிக மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்த்துவிடுகிறேன். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் எனக்கு நல்ல பழக்கம். இதனால் எந்தப் பிரச்னையும் வராது. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். இதேபோல் ஆள்மாறாட்டம் செய்து கடந்த ஆண்டு பல மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டிருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அவரை நம்பி 20 லட்சத்துக்கும் அதிகமான தொகையைத் தருகின்றனர். மாணவர்களை தன் செல்போனில் படம் எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட ஏஜென்ட் ரஷீத், அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடிக்கிறார். சஃபியும் தன் மகன் இர்ஃபானை, ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், பிரவீன் மற்றும் ராகுல் இருவரும் ஏஜென்ட் ரஷீத் மீது நம்பிக்கை இல்லாமல், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து ஆவடியில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றில் படித்து தேர்வையும் எழுதியுள்ளனர். அதாவது ஒரே பெயர், முகவரியில் உண்மையான நபரும், போலியான நபரும் வெவ்வேறு இடங்களில் தேர்வு எழுதியிருக் கின்றனர். மதிப்பெண் குறைவாகப் பெற்றுவிடவே, போலியான நபர் எடுத்த அதிக மதிப்பெண் சான்றிதழை வைத்து கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

ஒரு மாதம் கல்லூரிப் படிப்பு முடிந்த நிலையில்தான், போனில் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. உதித் சூர்யா ஆள் மாறாட்ட மோசடியும் வெளியே வந்துள்ளது. அதனால், ஏஜென்ட் ரஷீதுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது திட்ட வட்டமாகத் தெரிகிறது. அதனால், ரஷீதையும் போனில் மிரட்டிய மர்மநபரையும் எப்படியாவது தூக்க வேண்டுமென்று சி.பி.சி.ஐ.டி தனிப்படையினர், கடந்த 10 நாள்களாக தீவிர தேடுதல் வேட்டையில் இருக்கின்றனர். இப்போது வரை எந்தத் தகவலும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ‘‘கைதான அனைவரும் ஒரே கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள். கல்லூரி மூடப்பட்டதும், என்ன செய்வது எனத் தெரியாமல் தவறான நபரின் வழிகாட்டுதலில் இப்படிச் செய்திருக்கிறார்கள். இதில் இருவர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நீட் மோசடி - அலறவைக்கும் ஆல்இண்டியா நெட்வொர்க்... அமுக்கப்பார்க்கிறதா அரசு?

எளிதில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட முடியாது. நீட் தேர்வு முடித்து, கலந்தாய்வு, கல்லூரி ஆவணங்கள் சரிபார்ப்பு என அனைத்தையும் முடிக்க வேண்டும். இதையெல்லாம் அவர்கள் எப்படிக் கடந்து வந்தார்கள் என, தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். அந்த ஏஜென்ட், போனில் மிரட்டிய நபர் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகிறோம். மிரட்டல் நபர், உயர் தொழில்நுட்பத்தின் உதவியோடு போன் மற்றும் மெயில் செய்திருக்கிறார். எனவேதான் பிடிப்பதற்குத் தாமதமாகிறது. விரைவில் இருவரும் கைதுசெய்யப்படுவார்கள்” என்றார்.

டெல்லி லாபி!

வெங்கடேசனுக்கு நீட் ஏஜென்ட்டை அறிமுகப் படுத்திய சஃபியிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி-யான ஹார்ட்வின் ஜெகதீஸ்குமாரிடம் கேட்டோம். ‘‘நீட் ஏஜென்ட்டை தனக்கு அறிமுகப்படுத்தியதாக ஒருவரைப்பற்றி சஃபி கூறினார். அவர் பெயர் வேதாச்சலம் என்றும், அவர்மூலம்தான், ரஷீத் என்கிற ஏஜென்ட் தனக்கு அறிமுகம் ஆனார் என்றும் கூறுகிறார். வேதாச்சலம் பற்றி தகவல் திரட்டி, கைதுசெய்ய முயன்று வருகிறோம். வேதாச்சலம் கைது செய்யப்பட்டால், நீட் ஏஜென்ட் பற்றிய முடிச்சுகள் அவிழும்’’ என்றார்.

இந்த விவகாரத்தில் ரஷீத், மிரட்டல் நபர், வேதாச்சலம் என சி.பி.சி.ஐ.டி-க்கு புதுப்புதுத் தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. நீட் மோசடி பேர்வழிகளுக்குள் ஒரு ஆல் இண்டியா நெட்வொர்க் இருப்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பவர்ஃபுல் லாபிதான் இதன் பின்னணியில் செயல்படுவதாக போலீஸாரும் சந்தேகிக்கின்றனர். மோசடியில் ஈடுபடுகிறது ஒரு கும்பல்; அதை மோப்பம் பிடித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்களை மிரட்டுகிறது இன்னொரு கும்பல். இவை இரண்டும் ஒரே கும்பலா என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்திருக்கிறது.

சென்னை அண்ணாநகரைச் சுற்றிலும் உள்ள கோச்சிங் சென்டர்களில் ஒருசிலவற்றின் மீது, சி.பி.சி.ஐ.டி-யின் கழுகுப்பார்வை விழுந்திருக்கிறது. குறிப்பாக, அண்ணாநகரில் பச்சையை நினைவுபடுத்தும் ஒரு சென்டரில்தான் தற்போது பிடிபட்ட அனைத்து மாணவர்களும் நீட் கோச்சிங் கிளாஸ் சென்றிருக்கிறார்கள். இங்கு கோச்சிங் சென்டர் நடத்துகிறவர்களுக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோச்சிங் சென்டர் நடத்துகிறவர் களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றும் அலசி ஆராய்கிறது சி.பி.சி.ஐ.டி.

நீட் மோசடி - அலறவைக்கும் ஆல்இண்டியா நெட்வொர்க்... அமுக்கப்பார்க்கிறதா அரசு?

இதற்கிடையில் இந்த புரோக்கர்கள் தொடர்பாக இன்னொரு தகவலும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு ஆள்களைத் தேர்வுசெய்யும் வேலையை, கேரளத்தைச் சேர்ந்தவர்களே செய்துள்ளனர். நீட் தேர்வு கோச்சிங்கில் கேரளா முதல் இடம் வகிக்கிறது. அதனால் அங்கு இதுபோன்று வாடகைக்கு தேர்வு எழுதுபவர்கள் மிக எளிதாகக் கிடைக்கிறார்கள். பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயார்செய்த மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் எனப் பலரைத் தேர்வுசெய்து ஒரு மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் கட்டணம் பேசி எழுதவைத்துள்ளனர். கேரளாவில் உள்ள இந்தக் கும்பலுக்கு ராஜஸ்தானில் உள்ள ஒரு கும்பலுடன் தொடர்பு இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி பிடித்திருக்கக்கூடிய ஜோசப் என்பவர், கேரளத்தைச் சேர்ந்தவர். இந்த நீட் விவகாரத்தை, சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஜி.பி-யான ஜாபர் சேட் நேரடியாகக் கண்காணித்தார். திருப்பதிக்குச் சென்று, உதித் சூர்யா குடும்பத்தினரை சுற்றிவளைத்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். அப்போது இரு தவறுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டன. ஒன்று, மனுவில் உள்ள புகைப்படத்தை எவரும் சரிப்பார்ப்பதோ அல்லது அதைப்பற்றிய விரிவான விசாரணையோ மேற்கொள்வதில்லை. மற்றொன்று, உதித் சூர்யா விஷயத்தில் சீனாவில் படித்ததை மறைத்து நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்பில் இங்கு சேர்ந்திருக்கிறார். இது இந்தியச் சட்டப்படி தவறு.

தமிழ்நாட்டில் நீட்மோசடி நடைபெற்றதுபோல் வடமாநிலங்களிலும் நடைபெற்றுள்ளன. முந்தைய நீட் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை கணிசமான தொகைக்குப் பேசி, தேர்வு மையங்களில் தேர்வு எழுதவைப்பது பல்வேறு மாநிலங்களில் நடந்துவருகிறது. குறிப்பாக, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் மூலம் வினாத்தாள் வெளியே கொண்டுவரப்பட்டு, உரிய பதில்களைத் தயாரித்து, அடுத்த அரை மணி நேரத்தில் தேர்வு அறையில் கொடுக்கப்பட்டுவிடுகிறது. இதுபோன்று பல மையங்களில் தேர்வுகள் நடைபெற்று பல லட்சம் ரூபாய் விளையாடியுள்ளது. அதனால்தான், தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் வடமாநிலத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வுசெய்கிறார்கள்.

ஏன் சி.பி.ஐ-க்குப் போகவில்லை?

இந்த மோசடியில் பல மாநிலங்களைச் சேர்ந்த கிரிமினல்களும் கைகோத்திருக்கும் நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடப்பாடி அரசு ஏன் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நீட் தேர்வு நடத்துவது தொடர்பான பூர்வாங்க வேலைகளை மத்திய அரசின் சுகாதாரத் துறை செய்துவருவதால், மத்திய அரசாவது தானாக முன்வந்து சி.பி.ஐ விசாரணைக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று சீனியர் டாக்டர்கள் பலரும் கருத்து சொல்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மத்திய ஊழல் கண்காணிப்பு அதிகாரி ஒருவர், ‘‘இந்த நீட் மோசடி நெட்வொர்க், இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இந்த லாபி மிகவும் பலம் வாய்ந்தது என்பதால்தான் மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டுகொள்வதில்லை. இந்த விவகாரத்தால் தமிழக சுகாதாரத் துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஏற்கெனவே குட்கா விவகாரம் சி.பி.ஐ-யில் கிடப்பில் கிடக்கிறது. அதேபோல், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை’’ என்றார்.

அமைச்சரின் டெல்லி விஜயம்!

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை, தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சில நாள்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து கோரிக்கை மனுவை அளித்ததாக அப்போது செய்தி வெளியானது. அப்போது நீட் தேர்வு மோசடி பற்றியும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள் டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்கள்.

என்ன நடக்கப்போகிறது என, காத்திருந்து பார்ப்போம்!

‘‘தைரியமாகச் சொல்லுங்க!’’

சி.பி.சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி-யான விஜயகுமாரிடம் பேசியபோது, ‘‘தமிழகத்து மாணவர்கள் உத்தரப்பிரதேசத்தில் போய் ஏன் தேர்வு எழுதும் மையத்தைக் கேட்டு வாங்க வேண்டும்... ஆள்மாறாட்டம் செய்யத்தானே? ரஷீத் என்பதுதான் புரோக்கராகச் செயல்பட்டவனின் உண்மையான பெயரா என்றும், அவன் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்றும் விசாரித்துவருகிறோம். இந்த மோசடி தொடர்பாக எந்த ஒரு தகவல் தெரிந்தாலும், தாராளமாக எங்களுக்குத் தெரிவிக்கலாம். பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். மக்கள் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட கும்பலை ஒட்டுமொத்தமாகக் கைதுசெய்வோம்’’ என்றார்.

தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநர் (பொறுப்பு) நாராயணபாவுவிடம் கேட்டதற்கு, ‘‘நான் பணியில் சேர்ந்ததே ஆகஸ்ட் முதல் தேதிதான். அப்போது அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து வகுப்புகளில் மாணவர்கள் சேர ஆரம்பித்துவிட்டனர். விவகாரம் போலீஸ் விசாரணையில் இருப்பதால், வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism