Published:Updated:

`தமிழகத்திலிருந்து ஒரு மாணவர்கூட இல்லை!' - மத்திய அரசின் சிறப்பு திட்டத்தில் அதிர்ச்சி

மத்திய அரசின் இத்திட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இதனைக் கண்காணித்து, தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளது கல்வி மேம்பாட்டில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில் தேசிய அளவில் குஜராத் மாநிலத்திலிருந்து 43 பேர், மகாராஷ்டிராவிலிருந்து 2 பேர் என்று மொத்தம் வெறும் 45 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா என்று தென் இந்தியாவிலிலிருந்து ஒருவர்கூட பயன்பெறவில்லை. காலம் கடந்தும் காட்சிகள் மாறாத தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி நிலையை அம்பலப்படுத்தும் வகையில் பெற்ற RTI தகவல்கள் இங்கே...

ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வரும் சாக்கடை மற்றும் மலக்குப்பைகளை கைகளால் சுத்தம் செய்வது உள்ளிட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பணிக்கப்பட்ட தொழில்களை ஒழிக்க வேண்டும் என்ற முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் மற்றும் அவர்களின் குடும்பத்தை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்தி, அவர்கள் சந்திக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய வேண்டும் என்பதற்காக, 1997-ம் ஆண்டு தேசிய அளவில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் (Ministry of Social Justice and Empowerment) உருவாக்கப்பட்டது, National Safai Karmacharis Finance and Development Corporation (NSKFDC) என்ற கழகம்.

இந்தக் கழகம், தூய்மைப்பணியாளர்கள் சமூகப் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவேண்டும் என்பதற்காகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தேசிய அளவில் மேற்கொண்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்
பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு மாணவிகளுக்குப் பிரகதி உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி?

குறிப்பாக, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒரு பிரத்யேகத் திட்டம் செயல்படுகிறது. இந்தியாவில் உயர்கல்வி முடித்த தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகள், அயல் நாடுகளுக்குச் சென்று முதுகலைப் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான சிறப்புத் திட்டம் அது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2011-2012 நிதியாண்டு முதல் 23.09.2021 வரையில், இந்த 10 ஆண்டுக்காலத்தில், குஜராத் மாநிலத்திலிருந்து 43 மாணவர்கள், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 2 மாணவர்கள் என்று மொத்தம் 45 மாணவர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். இவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில், உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலைப்பட்டம் படித்துப் பயனடைந்துள்ளனர்.

ஆனால், இந்த மாணவர்களைத் தவிர்த்து கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்தியாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ஒருவர்கூட இத்திட்டத்தின் கீழ் பயன் பெறவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் திட்டத்தில் பயனடைந்த இந்த 45 மாணவர்களுக்காக ரூ. 5,76,39,000 மத்திய அரசு செலவு செய்துள்ளது. இதில் குஜராத் மாநில மாணவர்களுக்கு ரூ. 5,45,49,000 மற்றும் மகாராஷ்டிரா மாணவர்களுக்கு ரூ. 30,90,000 செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டறிந்த விவரங்கள்

S.கார்த்திக்
S.கார்த்திக்

சாக்கடை மற்றும் மலக்குப்பைகளை கைகளால் சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள், இந்தியா முழுவதும் சுமார் 65,000 பேர் இருக்கிறார்கள். இதில் தமிழகத்தில் சுமார் 4,000 பேர் ஈடுபட்டுள்ளனர். மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கியப் பெரு நகரங்களில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்நிலையில், மும்பையைத் தலைநகரமாகக் கொண்ட மகாராஷ்டிராவில், இத்திட்டத்தின் கீழ் 2 மாணவர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். மற்ற பெரும் தலைநகரங்கள் கொண்ட மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கொல்கத்தா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவர்கூட கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தில் பயன்பெறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்ற சிறந்த திட்டங்களைக் கொண்டுவருவதோடு அரசின் கடமை முடிவதில்லை. இத்திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு (Target group) சென்றடைந்து பயன்பெற்றார்களா என்பதை, ஒப்பீடு ஆய்வு செய்து முழுமையாகச் செயல்படுத்துவதில் அரசு தவிறிவிட்டது என்பதை இந்த ஆர்.டி.ஐ தகவல்கள் உணர்த்துகின்றன. மேலும், சமூகச் செயற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை, சமூக நீதிக்காகக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதாரத்துக்காக மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள நல்ல திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது.

தூய்மைப் பணியாளர்
தூய்மைப் பணியாளர்
பெண் குழந்தைகளுக்கான இந்திராகாந்தி உதவித்தொகை குறித்த தகவல்கள் கிடைக்குமா?| Doubt of Common Man

பரிந்துரை

மத்திய அரசின் இத்திட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இதனைக் கண்காணித்து, தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளது கல்வி மேம்பாட்டில் தனி கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைய நடடிவக்கை எடுக்க வேண்டும்.

- S.கார்த்திக்

download
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு