Published:Updated:

`கொரோனா நெருக்கடியால் 1 பில்லியன் மாணவர்கள் பாதிப்பு!’ - ஐ.நா தகவல்

மாணவர்கள் - கல்வி
மாணவர்கள் - கல்வி

``உலகில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களை வரையறுக்கும் தருணத்தில் உள்ளோம். அரசாங்கங்கள் இப்போது எடுக்கும் முடிவுகள் பல மில்லியன் கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மற்றும் நாடுகளின் வளர்ச்சி வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.”

உலக அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு என்பது அளவிட முடியாத ஒன்று. பொருளாதாரம் வீழ்ச்சி, வேலையின்மை உட்பட பல்வேறு பாதிப்புகளில் சிக்கி பல நாடுகளும் திணறி வருகின்றன. பாதிப்படைந்த முக்கியமான விஷயங்களில் மாணவர்களுக்கான கல்வியும் ஒன்று. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல நாடுகளிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாகச் சில கல்வி நிலையங்கள் கற்பிக்கத் தொடங்கினாலும் பெரும்பான்மையான மாணவர்களால் அதில் பங்குபெற முடியாத நிலையே உள்ளது. இந்த நிலையில் ஐ.நா சபையானது, கொரோனா வைரஸ் பாதிப்பால் கல்வித்துறை மிகப்பெரிய பாதிப்பு அடைந்துள்ளதாகவும் சுமார் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர்
ஐ.நா பொதுச்செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸ் கல்வி தொடர்பாக பேசுகையில், ``வரலாற்றில் கொரோனா வைரஸ் நெருக்கடியானது கல்விக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 160-க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். உலகளவில் குறைந்தது 40 மில்லியன் குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவக் கல்வியை இழந்துள்ளனர். இது ஒரு தலைமுறையின் பேரழிவு. இதனால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே, உலகம் கற்றல் தொடர்பான நெருக்கடியை எதிர்கொண்டது. சுமார் 250 மில்லியன் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்களில் கால் பகுதியினர் மட்டுமே அடிப்படைத் திறன்களுடன் உள்ளனர்” என்றார்.

கொரோனா: வறுமையை நோக்கி 120 மில்லியன் குழந்தைகள்; எதிர்காலம்? -யுனிசெஃப்

யுனெஸ்கோ மற்றும் அதன் நட்பு அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகளவில் ஆரம்பநிலை கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை படிக்கும் மாணவர்களில் கூடுதலாக சுமார் 23.8 மில்லியன் மாணவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான பொருளாதார நெருக்கடி காரணமாகத் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கின்றனர். ``உலகில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களை வரையறுக்கும் தருணத்தில் உள்ளோம். அரசாங்கங்கள் இப்போது எடுக்கும் முடிவுகள் பல மில்லியன் கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மற்றும் நாடுகளின் வளர்ச்சி வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஆன்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்தார். கொரோனா தொடர்பாக மூடப்பட்ட பிறகு சுமார் 100 நாடுகளில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள்
குழந்தைகள்

கல்வி சார்ந்து எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆன்டோனியோ கட்டர்ஸ் பேசும்போது, ``கொரோனா வைரஸ் பரவல் உள்ளூர் அளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மாணவர்களைப் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக வரவழைப்பது தொடர்பான நடவடிக்கைகளை முதன்மையாக எடுக்க வேண்டும். கல்விக்கான நிதியுதவிகளை அதிகரிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர், புலம் பெயர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட கல்வியை பாதியில் விடக்கூடிய வாய்ப்புள்ளவர்களைக் கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். கொரோனா தொடர்பான இந்த நெருக்கடி டிஜிட்டல் தொடர்பான கற்றல் மற்றும் உள்கட்டமைப்பு உட்பட கல்வி முறையை மாற்றியமைக்கவும் அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வியை வழங்கும் அமைப்பை உருவாக்கவும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான முதலீடுகளை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளார்.

குழந்தைகளின் கல்வி
குழந்தைகளின் கல்வி

யுனெஸ்கோவின் கல்வி உதவி இயக்குநர் ஸ்டெஃபானிய ஜியானினி (Stefania Giannini) பேசுகையில், ``நீண்டகாலம் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக, ஏழ்மையான குழந்தைகளிடம் இது அதிக பாதிப்புகளை உருவாக்கும். பள்ளிகள் என்பது கற்றுக் கொடுப்பதற்கான தளம் மட்டுமல்ல சமூக அளவிலான பாதுகாப்பை அளிப்பதற்கான இடமும்கூட. கொரோனா வைரஸ் நெருக்கடி என்பது டிஜிட்டல், சமூகம் மற்றும் பாலின அளவிலான ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது. பெண்கள், அகதிகள், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் என அனைவரும் தங்களது கல்வியைத் தொடர குறைந்த அளவிலான வாய்ப்புகளையே எதிர்கொள்கின்றனர்” என்றார். உலகளாவிய அமைப்புகள் குழந்தைகளின் கல்வி தொடர்பாக #SaveOurFuture என்ற பிரசாரத்தை தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கல்வி கொள்கை: `தனியார்மயமாக்கலுக்குதான் உதவும்!’ - சமூக ஆர்வலர்கள் கவலை
அடுத்த கட்டுரைக்கு