Published:Updated:

கொரோனா விளைவு... கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்..! இனி ஆன்லைன் + ஆஃப்லைன்தான்...

E D U C A T I O N

பிரீமியம் ஸ்டோரி

கொரோனாவால் மாறிவரும் பல துறைகளில் கல்வியும் ஒன்று. பன்னிர‌ண்டாம் வ‌குப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டாம் என்பது தொடங்கி, பொறியியல் படிக்கும் மாணவர்களும் புத்தகத்தைப் பார்த்து பதில் எழுதும் ‘ஓப்பன் புக் டெஸ்ட்’ எனப் பல மாற்றங்கள் நம் கண்ணெதிரே அரங்கேறியிருக்கிறது.

எஸ்.ராமச்சந்திரன் 
தொழில்நுட்ப 
ஆலோசகர், 
Infosys 
Knowledge 
Institute
எஸ்.ராமச்சந்திரன் தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

கோவாவில் உள்ள ஐ.ஐ.டி சமீபத்தில் மாணவர்களுக்கு அளித்த வினாத்தாள் சுவார‌ஸ்யமாக இருந்தது. அதில் மாணவர்கள் அவர்களே கேள்விகளை முதலில் கேட்டு அதன் பின் அந்தக் கேள்விகளுக்கு பதிலும் எழுத‌ வேண்டும். சுலபமான கேள்வி கேட்டால், மதிப்பெண் குறைவாக வழ‌ங்கப்படும் என்பதுதான் ஒரே கண்டிஷன். ஆழமான கேள்விகள் கேட்க அடிப்படை ஞானம் வேண்டுமே! அதற்கு புத்தகத்தைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமே!

புத்தகத்தை வைத்து பரிட்சை எழுதுவதைவிட இந்த வ‌ழி ஒரு படி மேலே. ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய இந்தக் காலத்தில் இது போன்ற நவீன உத்திகள் பொருத்த மானதாக இருக்கும். நேரடிப் பயிற்சி, இணையதளம் மூலம் ஆன்லைனில் படிப்பு என இரண்டும் கலந்த ஒரு கலப்பு வழிதான் (hybrid) இனி எல்லோரும் பின்பற்றும் வழிமுறை யாக இருக்கும்.

நவீன யுகத்தின் எம்.பி.ஏ...

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் டெபோரா ஸ்பார், ஒரு நல்ல கேள்வி யைக் கேட்டார்... “நாம் 80 வயது வரை வாழப்போகிறோம் என்று வைத்துக்கொண்டால், அந்த வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்துக் கல்வியையும் 20 வயதி லேயே எப்படிக் கற்க முடியும்?”

எம்.பி.ஏ படிப்பை ஹார்வர்டு போன்ற முன்னோடிப் பல்கலைக் கழ‌கங்கள் ஒன்று அல்லது இரண்டு வருடப் படிப்பாக இல்லாமல் ஆயுள் காலம் வரை படிக்கும்படியாக (life-long learning) எப்படி மாற்றலாம் என்று முயற்சி மேற்கொண்டுள்ளன. எதிர்காலத்தில் எம்.பி.ஏ படிக்க விரும்பும் மாணவர்கள் ஒரு பெரிய பல்கலைக்கழ‌கத்துக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம். முதலில் சில மாதங்கள் பல்கலைக்கழ‌கத்தில் தங்கிப் படித்து விட்டு, அதன்பின்னர் பல ஆண்டு களுக்கு, வருடத்துக்கு ஒரு சில நாள்களோ, ஒரு வாரமோ சென்று காலத்துக்கேற்ற‌ புதுத் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.

தொழில்துறைக்குத் தேவையான திறன்களை மட்டும் சிறு சிறு பகுதி களாகக் கற்கலாம். தொழில்நுட்பம் மற்றும் தகவலை ஆய்வு செய்து அதில் ஒளிந்திருக்கும் நுண்ணறிவை வெளியே கொண்டுவரும் அனலிடிக்ஸ் என்னும் துறை இன்று அனைத்துப் பாடங்களிலும் சேர்க்கப்படுகிறது.

கொரோனா விளைவு... கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்..! இனி ஆன்லைன் + ஆஃப்லைன்தான்...

கல்லூரிகளில் ஆன்லைன் + ஆப்லைன்...

கல்வியாளர் ப்ரையான் அலெக் ஸான்டர், கொரோனா தொற்று தொடங்கிய‌ காலத்தில், இனி கல்லூரிகளில் நேருக்கு நேராகவும் ஆன்லைனிலும் மாறி மாறி வகுப்புகள் நடக்கும் என்று கணித்தார். அப்படி ஓர் ஏற்பாட்டை ‘toggle term’ என்று பெயரும் வைத்தார். இப்போது எந்தக் கல்லூரிகள் இதைக் கடைப்பிடிக் கின்றன என்று கவனித்துவருகிறார்.

நோக்கத்துடன், ஈடுபாட்டுடன் கற்கும் கல்வி...

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய திறன் ஒரு நோக்கத்துடன், ஈடுபாட்டுடன் கற்கும் கல்வியே (Intentional learning) என்று உலகப் பொருளாதார மன்றம் (WEF - World Economic Forum) கூறுகிற‌து. நோக்கத்துடன் கற்கும் கல்வி என்றால் என்ன? நம் வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வோர் அனுபவத்தையும் ஏதாவது ஒன்றை கற்கப் பயன்படுத்துவதே இந்த வழி கல்வி. கல்வி கற்பதை ஒரு தனி வேலையாகப் பார்க்காமல் அனைத்திலும் ஒன்று சேர்ப்பதே இது. இந்தப் பண்பு உள்ளவர்கள் எப்போதும் ஆர்வத்துடனும் வளர்ச்சி மனப்பான்மை யுடனும் இருப்பார்கள் என்கிறது அந்த நிறுவனம். ஆர்வம்தான் படிப்பின் தொடக்கம். அது நம்மை குழந்தைப் பருவத்துக்கே கொண்டு சென்றுவிடும். ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் புதியவற்றை முயற்சி செய்யவும் தயங்காமல் கேள்விகள் கேட்கவும் நாம் பழகிக்கொள்ளலாம்.

எதிர்காலத்தில் வேலை எப்படி இருக்கும்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் எதிர்காலத்தில் வேலை எப்படி இருக்கும் என்று ஓர் ஆராய்ச்சி நடத்தியது. அதில் கண்டறியப்பட்ட விஷயங்கள் அறிக்கைகளாக வெளியிடப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மிகப் பெரிய தாக்கங்கள் இரண்டு. அவை, புதிய வகை வேலைகள் மற்றும் இன்று செய்யும் வேலையை மேலும் சிறப்பாக, வேகமாக செய்வதே. காலத்துக்கேற்ற புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளாத வர்கள்தாம் வேலை போய்விடுமோ என்று பயப்படுவார்கள். காலத்துக்கேற்ற புதிய திறன்களை வளர்ப்பவர்கள் எல்லாக் காலத்திலும் தவிர்க்க முடியாத வர்களாகவே இருப்பார்கள்.

அந்த ஆய்வின்படி, ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள் சராசரியாக தங்கள் நேரத்தில் 5% புதிய திறன்களைக் கற்கவும் புதுமையானவற்றைக் கண்டு பிடிக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்தது. ஒரு வாரத்தில் 40 மணி நேரம் அலுவலக வேலைக்கு என்று வைத்துக்கொண்டால், 2 மணி நேரம் கற்கவும் 2 மணி நேரம் யோசிக்கவும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நிபுணர்களின் கருத்தின்படி, இதைவிட இரண்டு மடங்கு நேரத்தைப் படிக்கவும் யோசிக்கவும் செலவிட வேண்டும்.

லிங்க்ட் இன் நிறுவனம் வெளியிட்ட பணியிடத்தில் படிப்பு தொடர்பான அறிக்கை (LinkedIn Workplace Learning report) 2019-ல் வெளி யானது. ஒரு வாரத்தில் ஐந்து மணி நேரம் ஒதுக்கி புதியவற்றைக் கற்றுக்கொள்பவர்கள் தங்கள் பாதையில் எங்கே செல்ல வேண்டும் என்பதில் அதிக தெளிவாக இருக்கிறார்கள்; அவர்கள் அதிக மன அழுத்தம் இல்லாமல் தங்கள் இலக்கை நோக்கிப் பயணிப்பார்கள் என அதில் சொல்லப்பட்டிருந்தது.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 3எம் நிறுவனம் நீண்ட காலமாக த‌ங்கள் ஊழியர்கள் 15% நேரத்தைப் புதிய யோச‌னைகளுக்கு ஒதுக்கும்படி ஊக்குவித்து வருகின்றனர். இது 3எம்மில் ஒரு கலாசாரமாகவே இணைந்துவிட்டது. கூகுள் நிறுவனம் ஆரம்ப காலத்தில் தனது ஊழியர்களிடமிருந்து புதிய யோசனைகளை வரவேற்க வாரத்தில் ஒரு நாள் அல்லது 20% நேரம் ஒதுக்க ஊக்குவித்தது.

இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியிடம் இதுபற்றிக் கேட்டபோது, “திற‌ன் களில் மிக முக்கியனமானது புதிய தொழில்நுட்பங்களை வேகமாகக் கற்று, தேர்ச்சி பெற்று வெற்றி வாகை சூடுவதே” என்று கூறினார்.

கொரோனாவுக்குப் பிந்தைய காலங்களில் கல்வித்துறை எப்படி மாறுகிறது, நமது திறனை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் எப்படி மாறுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். இந்த மாற்றம் உருவாகக் காரண மாக இருக்கும் கொரோனாவுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். கொரோனா என்பது ஒரு சிறந்த ‘இடையூறாக’ (disruption) அமைந்துவிட்டது. அது வராமல் இருந்திருந்தால், எல்லாவற்றையும் நாம் பழையபடி பார்த்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு