Published:Updated:

`கே.ஜி குழந்தைகளுக்கு இணைய கல்வி.. கொரோனா காலத்திலும் குறையாத வீட்டுப்பாடம்!’ -மதுரை எம்.பி காட்டம்

பள்ளிக் குழந்தைகள்
பள்ளிக் குழந்தைகள்

குழந்தைகள் எப்போதும் தம்மைச்சுற்றி நடப்பவனவற்றையெல்லாம் உற்றுநோக்கிக் கற்றுக்கொண்டே இருப்பார்கள். அதுதான் கல்வி - மதுரை எம்.பி காட்டம்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அரசு, தனியார் அலுவலகங்கள் உட்பட பெட்டிக்கடைகள் வரை மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் திறக்கப்படும் சூழலில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களைப் பெற வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு இணையதளத்தைப் பயன்படுத்தி பாடங்களை நடத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

இது கொடுமையானது என்றும் இதுபோன்று செயல்படுவோர் மீது பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவரிடம் பேசியபோது, ``உலகத்திலேயே பள்ளிக்கல்வியில் முதலிடத்தில் இருக்கும் நாடு பின்லாந்து. அங்கே தனியார் பள்ளிகளே கிடையாது. எந்த ஊருக்குக் குடும்பம் மாறிப்போனாலும் அந்த ஊர் அரசுப்பள்ளி ஒரே தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைவிட மிகமுக்கியமாக பள்ளிக்கல்வியில் நாங்கள் சிறந்து விளங்க முதன்மையான காரணம் மிகக்குறைந்த நேரமே குழந்தைகள் பள்ளியில் இருக்கிறார்கள் என்று அங்குள்ள கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

குழந்தைகள் குழந்தைகளாக வாழ நாம் நேரம் தர வேண்டும். குழந்தையை அவர்கள் ஆனந்தமாக அனுபவிக்க நாம் அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கூடமே ஓரிரு மணிநேரம்தான் என்பதால், அந்நாட்டில் வீட்டுப்பாடம் என்பது அறவே கிடையாது.

பள்ளிக் குழந்தைகள்
பள்ளிக் குழந்தைகள்

இந்தியாவில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது. மூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை வாரத்துக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம். நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு மணி நேரமும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரமும் வீட்டுப்பாடம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசின் பாடத்திட்டக்கொள்கை பரிந்துரைக்கிறது.

தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவுபோட்டும் கேளாத பள்ளியினரும் பெற்றோரும் ஏராளமாய் உள்ளனர். அவ்வளவு அக்கறையாம் பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

இவற்றையெல்லாம்விடக் கொடுமை இந்தக் கொரோனா நாள்களில் யு.கே.ஜி-யிலும் ஒன்றாம் வகுப்பிலும் பயிலும் குழந்தைகளுக்கு இணையத்தின் மூலம் பள்ளிகள் பாடம் நடத்துகின்றன. வீட்டுப்பாடம் கொடுக்கின்றன. பிள்ளைகள் ஜூமில் பாடம் கேட்கின்றனர். வாட்ஸ்அப்பில் பதில் அனுப்புகின்றனர்.

யு.கே.ஜி குழந்தைகளை `சீனியர் மோஸ்ட்’ என்று பள்ளிகள் கருதுகின்றன. எல்.கே.ஜி-யுடன் ஒப்பிட்டால் அவர்கள் சீனியர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஐந்து வயதைக்கூட கடக்காத குழந்தைகள் என்பதை மறந்துவிடுகிறார்கள். குழந்தைகள் எப்போதும் தம்மைச்சுற்றி நடப்பவனவற்றையெல்லாம் உற்றுநோக்கிக் கற்றுக்கொண்டே இருப்பார்கள். அதுதான் கல்வி.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

அவர்களாகக் கற்றுக்கொள்ளும் நிகழ்வுப்போக்கை அனுமதிக்காமல் குறுக்கீடு செய்யும் இடையூறுகளாகப் பள்ளிகள் ஆகிவிடக் கூடாது. கொரோனா நாள்களில் நடைபெறும் இந்தக் கொடுமையை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதைப்பற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்த உள்ளேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு