உலகமயமாக்கல் சூழல் புவியின் தொலைதூர எல்லைகளையும் அருகில் கொண்டுவந்தது போல, மாணவ, மாணவிகளுக்கான பன்னாட்டுக் கல்விக்கான வாய்ப்புகளையும் பல்வேறு கதவுகள் வழியாகத் திறந்து வைத்துள்ளது. ஆங்கிலம் பேசக்கூடிய, ஆங்கில அடிப்படைக் கல்வி, ஆங்கில மொழி வழி நாடுகளுக்கு மட்டுமே இந்திய மாணவ, மாணவிகள் உயர்கல்விக்காகவும் ஆராய்ச்சிகளுக்காகவும் சென்ற காலம் மாறி, உலகின் எம்மொழி பேசும் நாடுகளுக்கும் பறந்துசெல்லத் தொடங்கிவிட்டனர்.

உதாரணமாக, 2015-2016-ல் அமெரிக்காவிற்குச் சென்ற இந்திய மாணவர்கள் தோராயமாக 1,75,000. அதேகாலகட்டத்தில், ஐரோப்பியாவின் 32 நாடுகளுக்கும் தோராயமாக 55,000 என எண்ணிக்கை இருந்துவந்தது.
2016-2021 புள்ளிவிவரத்தின்படி, அந்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 22 லட்சம் இந்திய மாணவர்கள் தோராயமாக 83 நாடுகளுக்குக் கல்வி கற்பதற்காகப் பறந்துசென்றுள்ளனர். (Times of India, May 2021), அதில் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மட்டும் 25%, ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜாராத் ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டும் 56% மாணவர்கள் அயல்நாடுகளுக்குக் கல்வி கற்கச் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கல்விக்காக மட்டுமன்றி, அறிவியல்/தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி வாய்ப்புகள், வேலை, பேராசிரியர், விஞ்ஞானி போன்றவற்றுக்காகவும் இந்தியர்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். என்னுடைய நேரடி அனுபவமும் சொல்லலாம். நார்வே நாட்டிற்கு முனைவர் பட்ட ஆய்விற்காக நான் பயணித்த காலமான 2008-ல் நார்வேயில் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்கல்வி, ஆராய்ச்சிப் பணிகளில், பொறியியல் நிறுவனங்களில் இருந்ததைவிட 2022-ல் பன்மடங்கு பல்கிப்பெருகியிருப்பதை என்னால் நேரடியாகக் காண முடிகிறது.
அதேபோல, நான் முதுமுனைவர் ஆராய்ச்சிக்காகச் சீனா சென்ற காலகட்டத்தில்தான், அயல்நாட்டு மாணவ மாணவிகளுக்கான ஆராய்ச்சிப்பணிக்கான ஊக்கத்தொகை மற்றும் ஊதியத்தினை சீன நாடு அதிகரித்திருந்தது. என்னுடைய இரண்டு ஆண்டு வாழ்க்கையில் என்னுடைய ஒரே பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை தோராயமாக 300% அதிகரித்து இருந்ததைக் காண முடிந்தது.

முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்பிற்கும் சீனா, ஜப்பான், தென்கொரிய நாடுகள் அயல்நாட்டினருக்கான வாய்ப்புகளையும் ஊக்கத்தொகையையும் அதிகரித்துள்ளனர். அதனால், இந்த நாடுகளில், ஏனைய நாடுகளைக் காட்டிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பல்கிப்பெருகிவருகிறது. கொரோனாப் பேரிடர் காலத்தில்கூட, அதாவது 2021-ல், சீன நாட்டில் மட்டும் தோராயமாக 29,000 இந்திய மாணவ, மாணவிகள் கல்விகற்றுவருவதைச் சில புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன (Times of India, May 2021).
அதேபோன்று, ஜூலை 2021 புள்ளிவிவரத்தின்படி, ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்கல்விக்காகச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,60,000 என உயர்ந்திருக்கிறது (Deccan Herald, May 2021). அதிலும், பொதுவாக அதிக எண்ணிக்கையைப் பெற்று வந்த இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளைக் கடந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜார்ஜியா, நெதர்லாந்து, இத்தாலி என இந்திய மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கும் நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேவருகிறது.
மிகச்சமீபத்தில், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு அடிப்படையாக மூன்று காரணங்களை என்னால் அடுக்க முடியும்.
அதிக அளவிலான ஆங்கில வழிப் பட்டயப்படிப்புகள் ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலுமான பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. வளர்ந்து வரும் தொழில்துறைகள், நிறுவனங்கள், சேவைத்துறைகளை கணக்கில் கொண்டு, அதிகப்படியான, அயல்நாட்டு இளம் பொறியியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் இந்நாடுகளுக்குத் தேவைப்படுகின்றனர். Organization for economic co-operation and development வெளியிட்ட Future of Education and Skills: Education 2030 மற்றும் Globalization and Education என்ற ஆய்வு அறிக்கைகள் உயர்கல்வி மற்றும் வேலையிடங்களில் பல்கலாச்சார, பல்மொழிபேசும், பன்னாட்டு மனிதர்களின் கலவைச் சங்கமம் இனித் தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஐரோப்பிய நாடுகள் மீதான நாட்டத்திற்கான இன்னொரு முக்கியக் காரணம், உலகின் அமைதியான, பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் ஐரோப்பியக் கண்டத்தில் அதிகம். உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள், அதனால் எளிதாகும் வேலைவாய்ப்புகள் இங்கு அதிகம். 33 நாடுகளின் கல்வித்தரத்தையும் ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தும் போலாங்னோ கோட்பாடு (Bologno Process) நடைமுறையில் உள்ளதால், எந்தவொரு ஐரோப்பிய நாடுகளில் பெறப்படும் பட்டமும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் ஒரே தரத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்பது கூடுதல் பலம்.
மூன்றாவது முக்கியக் காரணம், அதிக அளவிலான ஊக்கத்தொகை வாய்ப்புகளை அனைத்து ஐரோப்பிய நாடுகளும், அதன் பல்கலைக்கழகங்களும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டு வடிவத்தின் வழியாகவும் இந்திய மாணவ மாணவிகளுக்கெனச் சிறப்பாகக் கிடைக்கும் ஊக்கத்தொகைகளும் இங்கு உண்டு.
இப்படியான, ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி படிக்கும் நம்மூர் மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தாலும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தான பல தகவல்கள் நம்மூரின் பலத்தரப்பட்ட மாணவர்களுக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை.

இனி வரக்கூடிய தொடர் கட்டுரைகளில், ஐரோப்பிய நாடுகளின் உயர்கல்விக்கான நாடுவாரியான வாய்ப்புகள், அந்நாடுகளின் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குரிய தயார்ப்படுத்துதல், ஊக்கத்தொகைகளைப் பெறுவதில் நாம் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை வரிசைப்படுத்தவுள்ளேன்.
இதில் கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்வி பயில விரும்புவர்களுக்கு ஏற்ற தகவல்களே உள்ளன. சமீப வருடங்களில் இந்திய ஒன்றியத்தில் இருந்து மருத்துவக் கல்விக்காக அயல்நாடு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை பெரும்வீச்சில் அதிகரித்து உள்ளன. அதிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்கூட ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களே மருத்துவம் பயின்றுவருகின்றனர். மருத்துக் கல்விக்கான நுழைவு நடைமுறையும் கல்விச்செலவு குறித்த தகவல்களும் மாறுபட்டவை என்பதால், கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்வி சார்ந்த தகவல்கள் மட்டுமே இங்கே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்விக்கான நுழைவு விதிகள் சிற்சில நாட்டு உதாரணங்களோடு, பிறகு தனியே பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில் வாழும்பொழுது கல்விக்கட்டணம் தவிர்த்து வாழ்க்கைச் செலவுதான் பெரும்பாலும் நம்முடைய செலவாக இருக்கும். அதுவும் வாரத்திற்கு 20 மணி நேரம் சட்டரீதியாக பகுதி நேர வேலைக்கான வாய்ப்புள்ளதால் பெரும்பான்மைச் செலவினங்களைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்புண்டு.
பெரும்பாலுமான ஐரோப்பிய நாடுகள், பெரும்பாலுமான பல்கலைக்கழகங்கள் அவரவர் நாட்டு மொழியில் இளநிலைக் கல்வி பயில்பவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறது. அல்லது, இளநிலை மற்றும் முதுநிலைக் கல்வியைத் தங்கள் நாட்டில் வதிவிட உரிமையோடு (resident permit) – (குறுகிய கால/ மாணவ நுழைவிசைவு அல்ல – not on travel or student Visa) வாழ்பவர்களுக்கு முழு இலவசக் கல்வியை வழங்குகிறது.

ஜெர்மனியிலும் நார்வேயிலும் உலகெங்கும் இருந்து முதுநிலை பட்டப்படிப்பில் (ஆங்கிலவழிப் பாடத்திட்டத்திற்கும்கூட) சேர்பவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, உலகெங்கும் பல்வேறு நாடுகளும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளும் (Erasmus Scholarships/Erasmus Mundus Scholarships) கல்வி, பயணம், வாழ்க்கைச்செலவிற்கென மொத்தமாக ஊக்கத்தொகை வழங்குகிறது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஒருங்கிணைந்த பகுதிகளின் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவ மாணவிகளுக்கெனவும், இந்தியா உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளின் (Commonwealth countries) மாணவ மாணவிகளுக்கெனவும் (GREAT Scholarships/ Chevening Scholarships), அறிவியல்/தொழில்நுட்பம் உயர்கல்வி பயில விரும்பும் பெண்களுக்கெனவும் தனிப்பட்ட முழு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது (British Council Scholarships for Women in STEM). இதில், இளநிலை, முதுநிலை வகுப்புகளும் உள்ளடக்கம். சில ஊக்கத்தொகைக்கு IELTS/TOEFL/Cambridge Test/GRE போன்ற ஆங்கிலத் தேர்வுகளில் தகுதிபெறுவது கட்டாயமாகின்றது.
ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலுமானவற்றில், திருமண பந்தம் சார்ந்து குடியேறி வாழ்பவர்களுக்குக் கல்வி இலவசமே! அல்லது, மிகக்குறைந்த கல்விக்கட்டணம் இருக்கும். உதாரணமாக, தமிழ்நாட்டில் இருந்து ஆணோ, பெண்ணோ வேலை நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும்பொழுது, அவர்களின் இணையருக்குக் கல்வி இலவசமாகக் கிடைக்கலாம்.