Published:Updated:

விடியல்: “எங்க விருப்பத்தை விடு, உனக்குப் பிடிச்சதை படி!”

 மணி.கணேசன் -  மேதாசங்கர் -  அமுதா
பிரீமியம் ஸ்டோரி
News
மணி.கணேசன் - மேதாசங்கர் - அமுதா

‘நீட்’ தேர்வுக்கு நடுவே ஒரு பாசப் போராட்டம்

‘’இவன் என்னதான் எங்களோட பையனா இருந்தாலும், இவன் வேறோர் உயிர். ஒவ்வோர் உயிருக்கும் சில விருப்பு வெறுப்புகள், ஆசாபாசங்கள், எதிர்கால லட்சியங்கள் இருக்கும். எங்களோட நிறைவேறாத ஆசைகளை பையன் மேல திணிக்கிறது நியாயம் இல்லைனு மனதார உணர்ந்தோம். ‘புள்ள டாக்டர் ஆகணும்’ என்ற எங்க கனவை கலைச்சுட்டு, ‘உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்ப்பா’னு சொல்லிட்டோம்’’ - மகன் மீதான தங்கள் எதிர்பார்ப்புகளைவிட, அவனுக்கு அறிவு சுதந்திரம் வழங்குவதே முக்கியம் என்றுணர்ந்த அமுதா - மணி.கணேசன் தம்பதியின் வார்த்தைகள் இவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`இது எங்களோட கனவு... நீ கண்டிப்பா நிறைவேத்திடு...’ என்று பல குடும்பங்களில் பிள்ளைகள் மீது கனவுத் திணிப்பு நடக்கிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆசைப்படுவதும், வழிகாட்டுவதும் தவறா எனக் கேட்கலாம். ஆசைப்படலாம், வழிகாட்டவும் செய்யலாம். ஆனால், அதுவே நிர்பந்தமாக மாறும்போது, பிரச்னையாக உருவெடுக்கிறது. பிள்ளைகளின் கனவுகள் மீது, பெற்றோர்கள் தங்களது கனவுக் கோட்டையைக் கட்டினால் ஆட்டம் காணத்தானே செய்யும்?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த தம்பதி அமுதா - மணி.கணேசன். இவர்களின் ஒரே மகன் மேதாசங்கரை டாக்டராக்கிப் பார்ப்பதற்காகவே வாழ்ந்தவர்கள் இவர்கள். சிறு வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் மாணவரான மேதாசங்கர், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தார். பெற்றோரின் ஆசைக்கிணங்க, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். என்றாலும், மேதா சங்கருக்குள் இழையோடியதோ வேறொரு கனவு. அதைச் சொன்னபோது, ஒட்டுமொத்தக் குடும்பமும் முதலில் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

விடியல்: “எங்க விருப்பத்தை விடு, உனக்குப் பிடிச்சதை படி!”

மேதாசங்கர் தான் படிக்க விரும்பிய படிப்புக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்த விவரங்களையும் தரவுகளையும் அடுக்கியுள்ளார். ஆனாலும், அவர் பெற்றோர் வேறொரு துறையை யோசித்துப் பார்க்கக்கூட தயாராக இல்லை.

‘‘நானும் என் கணவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். எங்க குடும்பங்கள்ல இதுவரை யாருமே டாக்டர் ஆனதில்ல. மேதாசங்கர் சின்ன வயசுலயிருந்தே நல்லா படிச்சதால, இவனை எப்படியும் டாக்டருக்குப் படிக்க வெச்சிடணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். அதுக்கு நிறைய பணம் தேவைப்படலாம் என்பதால, ஆரம்பத்துலயிருந்தே எங்க வாழ்க்கை முறையை சிக்கனமா அமைச்சிக்கிட்டோம். எங்க உறவினர்கள், குடும்ப நண்பர்கள், உடன் வேலைபார்க்கிற ஆசிரியர்கள்னு எல்லாருக்குமே, எங்க குடும்பத்தோட லட்சியம் பத்தி தெரியும்.

மேதாசங்கர் நீட் தேர்வுக்குத் தயாராகிட்டு வந்த நேரத்துல, திடீர்னு ஒரு நாள் தன் மனசுல வேற ஒரு விருப்பம் இருக்கிறதை எங்ககிட்ட சொன்னான். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்னு ஒரு படிப்பு இருக்கிறதாவும், அதுக்கு உலகம் முழுக்க நல்ல எதிர்காலம் இருக்குனும் சொன்னான். ‘நான் அதைப் படிக்கலாமா?’னு அவன் கேட்டப்போ, எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டுடுச்சு.

‘‘எம்.பி.பி.எஸ் மட்டும்தான் படிப்பா? இதைப் படிச்சாதான் பெருமைனா, உங்க விருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேத்துறேன். ஆனா, நான் சொல்ற படிப்பை படிச்சு முடிச்சதும் ஒரு லேப்டாப் மட்டும் போதும்... நிறைய சம்பாதிக்கலாம்’னு மேதாசங்கர் எங்களுக்கு எடுத்துச் சொன்னான். ஆனாலும், நாங்க ஒப்புக்கலை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவன் மனசை மாத்த முயற்சி பண்ணிட்டேதான் இருந்தேன். அவனும், ‘நான் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகிடறேன்’னு சொல்லிட்டு படிக்க ஆரம்பிச்சுட்டான். அப்போதான் நாங்க யோசிக்க ஆரம்பிச்சோம்.

‘மகனுக்குனு ஒரு எதிர்காலத் திட்டம் இருக்கு. அதுல பயணிச்சாதான் அவனோட வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும். அதை நாம சிதைச்சிடக் கூடாது’னு முடிவெடுத்தோம். மேலும், ‘ப்ளஸ் டூ முடிச்ச வயசுல பசங்களுக்கு சரியான முடிவெடுத்து தங்களோட படிப்பைத் தேர்ந்தெடுத்து, எதிர்காலத்தை தீர்மானிக்க முடியுமா?’னு நிறைய பேர் நினைப்போம். சொல்லப்போனா, பெற்றோர்களைவிட, இன்றைய தலைமுறை மாணவர்களாலதான் தங்களுக்கு ஏற்ற, நல்ல எதிர்காலம் உள்ள படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும். காரணம், அந்தளவுக்கு அவங்க டெக்னாலஜி உதவியோடு படிப்பு முதல் உலக விஷயங்கள்வரை தெரிஞ்சு வளர்றாங்க. நான் ப்ளஸ் டூ முடிச்சப்போ, சுயமா எதிர்காலத்தை தீர்மானிக்கும் அறிவோ மனதிடமோ எனக்கு இல்லை. பெரியவங்க சொன்னாதான் நல்லது, கெட்டது தெரிஞ்சது. ஆனா, இப்போ இருக்குற பசங்க அப்படியில்ல. அவங்களை சுதந்திரமா முடிவெடுக்கவிடணும்’’ - இன்றைய மாணவர்களின் உலகம் பரந்து விரிந்திருப்பதை ஆசிரியை, அம்மா என்ற இரண்டு அனுபவங் களின் அடிப்படையிலிருந்தும் பகிர்ந்தார் அமுதா.

மணி.கணேசன், ‘‘ ‘நீட்’ தேர்வுக்கான அட்மிட் கார்டு எல்லாம்கூட ரெடி பண்ணிட்டோம். எங்க ஆசைக்காக, மேதாசங்கரும் முழு மூச்சா தயாராகியிருந்தான். ‘எதுக்கும் ஒரு அட்டம்ப்ட் பண்ணட்டுமே...’னுகூட நாங்க நினைக்கல. மேலும், ‘நீட்’ தேர்வு நடைமுறைகளையெல்லாம் பார்க்கப் பார்க்க, எனக்கும் அதில் உடன்பாடில்லாம போனது. ‘எம்.பி.பி.எஸ் வேண்டாம்டா...’னு நாங்க சொன்னதும், பையனுக்கு அவ்ளோ ஆச்சர்யம், ஆனந்தம்’’ என்றார்.

மேதாசங்கர் நம்மிடம், ‘‘எங்கப்பா, அம்மா என் மேல முழு நம்பிக்கை வெச்சு என் முடிவுக்கு சம்மதிச்சிருக்காங்க. அவங்களுக்கு விருப்பமான கோர்ஸ்ல என்னை சேர்த்துவிட்டு மார்க் குறைஞ்சா, ‘நீங்கதானே சேர்த்துவிட்டீங்க...’னு சொல்லலாம். இது நான் தேர்ந்தெடுக்கிற கோர்ஸ் என்பதால, இதை நல்லா முடிச்சு எதிர்காலத்தை சிறப்பா அமைச்சுக்கிற பொறுப்பு இப்போதிருந்தே எனக்கு வந்துடுச்சு. சொல்லப்போனா, எதிர்காலத்துல எதுக்கு வாய்ப்பு இருக்கும்னு தேடுறதைவிட, எது எதிர்காலமாவே இருக்கப்போகுதுனு தேடினேன். இதை எங்க அப்பா, அம்மாவுக்குப் புரியவெச்சப்போ, என் மேல முழு நம்பிக்கை வெச்சு, தங்களோட கனவுகளை எனக்காக விட்டுக்கொடுத்துட்டாங்க. தேங்க்ஸ்ம்மா... தேங்க்ஸ்ப்பா!’’

- பெற்றோரை கட்டிக்கொள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீனதயாளன் - மன்னார்குடி

விடியல்: “எங்க விருப்பத்தை விடு, உனக்குப் பிடிச்சதை படி!”

‘‘நான் கேட்டரிங் டெக்னாலஜி படிக்க விரும்பினேன். ஆனா வீட்டுல, டிப்ளோமா ஜெனரல் மெஷின்ஸ்ல சேர்த்து விட்டாங்க. ஏழ்மையான நிலையிலும் என்னைப் படிக்கவைக்க நெனச்ச அம்மா, அண்ணனின் ஆசைக்காக நானும் படிச்சாலும், மனசு அதுல ஒன்றல. படிப்பை முடிச்சிட்டு திருச்சியில ஒரு கம்பெனியில வேலைக்கும் சேர்ந்தேன். எனக்கு அது சரியா வரலை. டிப்ளோமோ மரைன் இன்ஜினீயரிங் படிச்சா நல்ல வேலை கிடைக்கும்னு, காசு செலவழிச்சு சென்னையில படிக்க வெச்சார் அண்ணன். அதுக்கு ஏத்த வேலை எனக்குக் கிடைக்கலை. சொந்த ஊருக்குத் திரும்பி, இப்போ ஒரு பாரம்பர்ய உணவகத்துல மேலாளரா வேலைபார்த்துக்கிட்டு இருக்கேன். இது எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு. என் விருப்பத்துக்கு மாறா தடம் மாறி படிச்சதால, கிட்டத்தட்ட 15 வருஷம் விரயமாயிடுச்சு. ப்ளஸ் டூ முடிச்சதுமே கேட்டரிங் டெக்னாலஜியில் சேர்ந்திருந்தால், வெளிநாட்டு வேலை, சொந்தத் தொழில்னு இந்நேரம் செட்டிலாகியிருப்பேன். பெற்றோர் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!”

ராதாகிருஷ்ணன்-   மனநல மருத்துவர், தஞ்சாவூர்

விடியல்: “எங்க விருப்பத்தை விடு, உனக்குப் பிடிச்சதை படி!”

‘‘ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் தனித்திறன், ஆர்வத்தை உணர்ந்து, அதற்கேற்ப அவர்கள் உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதை உறுதிப் படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். சமூக நிர்பந்தத்தாலும் ஈகோவாலயும் தங்களின் ஆசைகளை பிள்ளைகள் மேல் பெற்றோர் வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாது. விருப்பம் இல்லாத படிப்பை படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாததுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகலாம். தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட துறையில் தன்னை வெற்றிகரமாக வெளிப்படுத்த முடியாமல் முடங்கிப்போவார்கள். ‘அதுக்காக 17 வயசுல பசங்க எடுக்கிற முடிவு சரியா இருக்குமா?’ என்ற கேள்வி பெற்றோருக்கு இருக்கலாம். அதற்குத் தீர்வு... உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் நட்போடு பேசுவது, கலந்தாலோசிப்பது. அப்போது அவர்களின் அறிவின் ஆழமும் தேடலும் எந்தளவுக்கு இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியவரும். அதேபோல, அவர்களின் உயர்கல்வித் தேர்வு குறித்த சாதக, பாதகங்களையும் அவர்களோடு விவாதித்து ஒத்த கருத்தோடு முடிவெடுக்கலாம். பிள்ளைகளின் பார்வையிலிருந்து அவர்களின் விருப்பத்துக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப மேற்படிப்பை முடிவு செய்ய வேண்டும்.”