Published:Updated:

`7 அடி உயர வாழைத் தார்!' -அரசுப் பள்ளி பசுமைத் தோட்டத்தில் அசத்திய பேராவூரணி மாணவர்கள்

வாழைத் தார் அருகே மாணவர்கள்
வாழைத் தார் அருகே மாணவர்கள் ( ம.அரவிந்த் )

மாணவர்கள் மனதில் படிப்புடன் சேர்த்து மரக்கன்று நடும் பழக்கத்தையும் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கொண்டே பசுமைத் தோட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

பேராவூரணி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்கள் பசுமைத் தோட்டம் அமைத்திருந்தனர். மாணவர்கள் நட்ட ஆயிரங்கா ரஸ்தாளி ரக வாழை, வளர்ந்து 7 அடி உயர அளவிற்குத் தார் விட்டுள்ளதை மாணவர்கள் மட்டுமன்றி அனைவரும் ஆச்சர்யமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

பேராவூரணியில் ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூறு மாணவர்களுக்கு மேல் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் வளாகத்திலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 25 குழந்தைகள் மற்றும் அங்கன்வாடியில் 15 குழந்தைகளும் படித்து வருகின்றனர். இவையனைத்தும் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.

இப்பள்ளியின் தலைமையாசிர் பாலசந்தர், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் சுபாஷ் ஆகியோர் மாணவர்கள் மனதில் படிப்புடன் சேர்த்து மரக்கன்று நடும் பழக்கத்தையும் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கொண்டே பசுமைத் தோட்டத்தை உருவாக்கியுள்ளனர். இதில் தென்னங்கன்றுகள், மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, கீரை வகைகள் ஆகியவற்றைப் பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள். இதற்கு மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பசுமைத் தோட்டம்
பசுமைத் தோட்டம்

இந்தநிலையில் ஆசிரியர் சுபாஷ் மாணவர்களுடன் இணைந்து ஆயிரங்கா ரஸ்தாளி வாழை ரகத்தை ஊன்றினார். நன்கு வளர்ந்த அந்த வாழையில் 7 அடி உயரத்திற்கு வாழைத் தார் விட்டுள்ளது. அந்த வாழைத் தாரில் ஆயிரக்கணக்கான வாழைக்காய்கள் உள்ளன. இதை மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆச்சர்யமுடன் பார்த்துச் செல்வதுடன் அடேகங்கப்பா ஒரு ஆளின் உயரத்தை விட இந்த வாழைத் தார் உயரமாக உள்ளதே என ஆச்சர்யத்துடன் பார்த்துப் பேசிச் செல்கின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் சுபாஷிடம் பேசினோம். ``மாணவர்களுக்குப் பள்ளியில் படிப்புடன் சேர்த்து பசுமை குறித்தும் எடுத்துக் கூறி வருகிறோம். அத்துடன் மரக்கன்று ஊன்றும் பழக்கத்தையும் அவர்கள் மனதில் விதையாக விதைக்கிறோம். வெறும் சொல்லாக மட்டும் இல்லாமல் செயலாக மாற்ற வேண்டும் என்பதால், மாணவர்களைக் கொண்டே பள்ளியில் பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

வாழை
வாழை

எனக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் என்பதால், கேளரா மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படும் ஆயிரங்கா ரஸ்தாளி ரகத்தைக் கொண்டு வந்து ஊன்றி வைத்தோம். குளிர்ப் பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது இந்த ரகம். இது வெப்பமான பகுதி பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது என நினைத்தோம். ஆனால், மாணவர்கள் தங்கள் கண்ணாக நினைத்து அந்த வாழைக் கன்றுக்குத் தினமும் தண்ணீர் ஊற்றினார்கள். அதனால் வாழை நன்றாக வளர்ந்ததுடன் 7 அடி உயரத்திற்குத் தார் போட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு