Published:Updated:

நீட் ஆள்மாறாட்ட வழக்கு- இர்ஃபானுக்கு ஒருநாள் போலீஸ் காவல்; 4 பேருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரை விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குத் தேனி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

Theni CBCID Office
Theni CBCID Office

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக இதுவரை பத்துப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரை விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குத் தேனி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு- இர்ஃபானுக்கு ஒருநாள் போலீஸ் காவல்; 4 பேருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

தேடப்பட்டுவந்த இர்ஃபான், கடந்த அக்டோபர் 1-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக்டோபர் 9-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி ஆண்டிபட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் இர்ஃபான் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீட் விவகாரம்: `கதறி அழுத மருத்துவ மாணவி!' - பூட்டப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலத்தில் விசாரணை

வழக்கானது தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்வதால், அவர்களிடம் இர்ஃபான் ஒப்படைக்கப்பட்டு, தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை செய்த நீதிபதி, அக்டோபர் 14-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் இர்ஃபான் அடைக்கப்பட்டார்.

Irfan
Irfan

நீதிமன்றக் காவல் முடிந்து இன்று இர்ஃபான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி சார்பில் ஐந்து நாள்கள் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் இர்ஃபானை விசாரிக்க அனுமதி அளித்தார். இர்ஃபானின் தந்தையான போலி மருத்துவர் முகமது சஃபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரின் ஜாமீன் மனு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட ஆறு மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டியை விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

Theni Court
Theni Court

இந்நிலையில், ஜாமீன் மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டியை முழுமையாக விசாரித்து முடிக்கவில்லை என சி.பி.சி.ஐ.டி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதால், ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்.