அலசல்
Published:Updated:

தேசிய கல்விக் கொள்கை 2020 - வரவேற்பும் எதிர்ப்பும்!

தேசிய கல்விக் கொள்கை 2020
பிரீமியம் ஸ்டோரி
News
தேசிய கல்விக் கொள்கை 2020

பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகிய அமைப்புகள் கலைக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக ‘இந்திய உயர் கல்வி ஆணையம்’ என்கிற ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் எதிர்காலச் சந்ததியினரின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிற ‘தேசிய கல்விக் கொள்கை 2020’-ஐ மையமாகவைத்து தேசிய அளவில் விவாதங்கள் சுழன்றடிக்கின்றன.

‘இஸ்ரோ’வின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கிய புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு, எதிர்ப்பு எனக் கருத்துகள் எழுந்தன. பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜூலை 26-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தற்போது தேசியக் கல்விக் கொள்கை இறுதி வடிவம் பெற்றுள்ளது.

பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை, 3-5 வயது குழந்தைகளுக்கு முன் தொடக்கக் கல்வி கொண்டுவரப்படுகிறது. 5-ம் வகுப்புவரை தாய்மொழி வழிக்கல்வி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தொழிற்கல்வியைக் கற்க வேண்டும் என்பது கட்டாயம். பாடப் புத்தகங்களைப் படித்து எழுதப்படும் தேர்வுக்கான மதிப்பெண்களுடன், ஒவ்வொரு மாணவரின் தொழில் திறமைகள் அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும். `மாணவர்களின் புத்தகச்சுமை குறைக்கப்படும்’ என்பது இதில் ஆறுதல் அளிக்கும் அம்சம். 10, ப்ளஸ் 2 என்ற முறைக்கு பதிலாக, 9-ம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்புவரை செமஸ்டர் முறை கொண்டுவரப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர்கள் வீதம் எட்டு செமஸ்டர்கள் கொண்டுவரப்படுகின்றன.

தேசிய கல்விக் கொள்கை 2020 - வரவேற்பும் எதிர்ப்பும்!

உயர் கல்வியிலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ) ஆகிய அமைப்புகள் கலைக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக ‘இந்திய உயர் கல்வி ஆணையம்’ என்கிற ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. பி.ஏ., பி,எஸ்சி., பி.காம் போன்ற மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு இனி கிடையாது. இவற்றுக்கு பதிலாக நான்காண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு கொண்டு வரப்படுகிறது.

இதில், ‘வெளியேறும் வாய்ப்பு’ (Exit Option) உண்டு. இதன் மூலமாகப் பாதியிலேயே மாணவர்களால் வெளியேற முடியும். ஒரு மாணவர் ஓராண்டு படித்து முடித்துவிட்டு வெளியேறலாம். அதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப் படும். இரண்டாண்டுகள் முடித்துவிட்டு வெளியேறினால், டிப்ளோமா பட்டம் தரப்படும். மூன்றாண்டுகள் முடித்துவிட்டால் இளங்கலைப் பட்டத்துடன் வெளியேறலாம். நான்காம் ஆண்டு சில ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நான்கு ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிஹெச்.டி எனப்படும் ஆய்வுப் பட்டத்தை மேற்கொள்ளத் தகுதிபெற்றவர்களாகிவிடுவர்.

எம்.பில் படிப்பு ரத்து செய்யப்படுகிறது. ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக, ‘தேசிய ஆராய்ச்சி மையம்’ ஏற்படுத்தப்படவிருக்கிறது. பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களைத் திறக்க இனி அனுமதி வழங்கப்படும்.

தற்போது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை. எனவே, இந்த தேசிய கல்விக் கொள்கைப்படி பள்ளிக்கல்வியில் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்பது தெரியவில்லை.

ஆனால், உயர்கல்வியைப் பொறுத்தவரை, வரும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில், இந்தக் கல்வியாண்டின் தொடக்கம் என்று கொண்டுவரப்பட்டு, தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர்கல்வி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பழனிசாமி - மோடி - ஸ்டாலின்
பழனிசாமி - மோடி - ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான வழக்கறிஞர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘வரைவு அறிக்கையை வெளியிட்டு, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைப் பெற்று, இந்த தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

புதுமையான கண்டுபிடிப்புகள், அவற்றுக்கான ஆய்வுகள் என ஒவ்வொரு மாணவரும் விரும்பக்கூடிய வகையில் கல்வி கற்பதற்கான வாசலை இந்த கல்விக் கொள்கை திறந்துள்ளது. 5-ம் வகுப்புவரை தாய்மொழிவழிக் கல்வி வரவேற்கத்தக்கது. இது 8-ம் வகுப்புக்கும், அதைத் தாண்டிய வகுப்புகளுக்கும் நீட்டிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என அடுத்தடுத்து பொதுத் தேர்வுகளைச் சந்திக்கும் தமிழக மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்தத் துயரம் இனி கிடையாது.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செமஸ்டர் கொண்டுவரப்படுவதால், பள்ளி இறுதி வகுப்புகளை மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் படிக்க முடியும். சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நம் ஜி.டி.பி-யில் கல்விக்காக ஆறு சதவிகிதம் நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் கிராமப்புறப் பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு பலப்படுத்தப்படும். `இடைநிற்றல் மாணவர்கள் சுமார் இரண்டு கோடிப் பேரை, இந்த கல்விக் கொள்கையானது, மீண்டும் கல்விக்குள் கொண்டுவந்து சேர்க்கும்’ என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆராய்ச்சிக்கென்று தனியாக ஓர் அமைப்பு தேசிய அளவில் ஏற்படுத்தப்படுகிறது. இது இந்திய மண்ணில் நிறைய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும்” என்றார் பெருமையுடன்.

புதிய தேசிய கல்விக் கொள்கை, எதிர்க் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.

அருணன் - வானதி சீனிவாசன்
அருணன் - வானதி சீனிவாசன்

‘‘பா.ஜ.க-வினர், ‘தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்’ என்று பெருமையாகச் சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. தாய்மொழிவழிக் கல்வி பற்றிச் சொல்லப்படும் இடத்தில், ‘சாத்தியமான இடங்களில்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு என்ன அர்த்தம்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தாய்மொழிவழிக் கல்விக்கு வாய்ப்பு இல்லை.

‘மும்மொழித் திட்டம் தொடரும்’ என்று சொல்லப்படுகிறது. ‘மாணவர்கள் படிக்கக்கூடிய மூன்று மொழிகளில், குறைந்தபட்சம் இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகப் பள்ளியில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது என்றால், அந்த மூன்று மொழிகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்றுகூட இருக்கலாம். அந்த வகையில், பழைய மும்மொழித் திட்டத்தைவிட இது மோசமானது. பழைய மும்மொழித் திட்டத்தில் இந்தியைப் புகுத்தினார்கள். இதில், இந்தியுடன் சேர்த்து சம்ஸ்கிருதத்தையும் புகுத்தப்போகிறார்கள்.

இந்தக் கொள்கை ஆவணத்தில், `பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் அனைத்து மட்டங்களிலும் சம்ஸ்கிருதம் சொல்லித்தரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா பள்ளிகளிலும் சம்ஸ்கிருத ஆசிரியர்களை நியமித்து, சம்ஸ்கிருதத்தைத் திணிக்கப் போகிறார்கள். இது தமிழுக்கு ஆபத்து. எனவே, இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மிகவும் அபத்தம். ‘பொதுத்தேர்வு என்றாலும், எந்தவொரு மாணவரும் ஃபெயில் ஆக்கப்பட மாட்டார்’ என்கிறார்கள். ஆனால், குறைந்த மதிப்பெண் பெறும் பிள்ளைகளின் மனநிலை பற்றி இவர்கள் யோசிக்கவில்லை. இது குழந்தைகளிடம் மன அழுத்தத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். இடைநிற்றலுக்கும் வழிவகுக்கும். `ஒவ்வொரு மாணவரும் மண்பாண்டங்கள், தச்சு வேலை போன்ற தொழில்களைக் கற்க வேண்டும்’ என்கிற திட்டமானது, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைப் போன்றது. இது மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கும். மருத்துவக் கல்வியில் சேர நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருப்பதுபோல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வருகிறார்கள். இது கிராமப்புற, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளைக் கல்லூரிக்குள்ளேயே நுழையவிடாமல் செய்துவிடும்’’ என்றார்.

‘`புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது; தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது’’ என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவிகிதம். அதற்கு அடுத்தபடியாக கேரளா இருக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கை வட மாநிலங்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மிகவும் குறைவு. தமிழ்நாட்டின் சிறப்புகளை தேசிய கல்விக் கொள்கை பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகக் கல்வியாளர்கள் பலர் எச்சரிக்கும் நிலையில், மும்மொழிக் கொள்கை தவிர மற்ற அம்சங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.