Published:Updated:

‘‘இது மத்திய பல்கலைக்கழகமா, தனியார் பல்கலைக்கழகமா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள்
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள்

தகிக்கும் புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள்

பிரீமியம் ஸ்டோரி
‘கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்துவருகிறது. டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் 80 நாள்கள் நடந்த தொடர் போராட்டத்தைப்போலவே இந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்படுவதால் புதுச்சேரி தகிக்கிறது.
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள்
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள்

புதுச்சேரி காலாப்பட்டில் சுமார் 780 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவருகிறது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம். இங்கு 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாகப் பயில்கின்றனர். தொலை தூரக்கல்வி மற்றும் உறுப்புக் கல்லூரிகள் மூலம் சுமார் 60,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். 2019-ம் ஆண்டு திடீரென கல்விக் கட்டணத்தை உயர்த்தியது பல்கலைக்கழக நிர்வாகம். ‘அந்தக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ என்றும், ‘அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்றும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், பிப்ரவரி 28-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்து பரபரப்பு கூட்டியிருக்கின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாணவர் பேரவையின் தலைவர் பரிட்சே யாதவ், ‘‘ஏழை எளிய மாணவர்களுக்காகத்தான் பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேவை அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்பட வேண்டும். அதைவிடுத்து, கல்விக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தினால் ஏழை எளிய மாணவர்களின் உயர்க்கல்விக் கனவு மொத்தமும் தகர்ந்துவிடும். புதுச்சேரி கிராமப்புற மாணவர்களுக்காக 25 ஆண்டுகளாக இலவசப் பேருந்து இயக்கப்பட்டுவந்தது. கடந்த ஆண்டு முதல் அதற்கும் 8,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டனர். இது மத்திய பல்கலைக்கழகமா, தனியார் பல்கலைக்கழகமா என்ற சந்தேகம் எழுகிறது. உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார் ஆவேசத்துடன்.

புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள்
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள்

புதுச்சேரி மாணவர், இளைஞர் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், ‘‘கல்விக் கட்டணம், 200 சதவிகிதம் வரை உயர்த்தப் பட்டிருக்கிறது. காரணம் கேட்டால், `கடந்த பத்து ஆண்டுகளாக கல்விக் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை’ என்கின்றனர். அது அப்பட்டமான பொய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2012-2013 கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. துணை வேந்தரும் பல்கலைக்கழக அதிகாரிகளும் வாரத்தில் இரண்டு நாள் டெல்லிக்கோ வெளிநாடுகளுக்கோ சுற்றுப்பயணம் செல் கின்றனர். தங்கள் பயன்பாட்டுக்காக ஒரே நாளில் ஆறு சொகுசு கார்களை வாங்கியிருக்கின்றனர். இதற்கெல்லாம் அவர்களது சொந்த பணத்திலா செலவு செய்கின்றனர்? நிதி நெருக்கடி என்று மாணவர்களை நசுக்கும் நிர்வாகம், இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது?’’ என்றார் சீற்றத்துடன்.

வந்தனா
வந்தனா

நூலக அறிவியல் பிரிவின் முதலாம் ஆண்டு மாணவி வந்தனாவிடம் பேசியபோது... ‘‘புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. 2011-ம் ஆண்டு காரைக் காலில் தொடங்கப்பட்ட தேசிய தொழில்நுட்பக் கழகத்திலும் (NIT) புதுச்சேரி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், புதுவைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது இருந்த 18 பாடப்பிரிவுகளில் மட்டும்தான் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மற்ற பிரிவுகளில் இடஒதுக்கீடு வழங்குவதில்லை. அனைத்துப் பிரிவுகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிறோம். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது’’ என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெற பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சித்ராவிடம் பேசினோம். ‘‘இதுதொடர்பாக நான் வெளியிட்டிருக்கும் அறிக்கையை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். அதில் அனைத்து கேள்வி களுக்கும் பதில் இருக்கிறது. அதேபோல், அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியாது’’ என்றார்.

பரிட்சே யாதவ், ஆனந்த்
பரிட்சே யாதவ், ஆனந்த்

அவர் அனுப்பிவைத்த அறிக்கையில், ‘புதுவைப் பல்கலைக்கழகத்தில் அதிகரித்துவரும் செலவினங் களைச் சமாளிக்கவே கல்விக் கட்டணம் உயர்த்தப் பட்டது. கடந்த பத்து மாதங்கள் எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்த மாணவர் பேரவை, தற்போது பிரச்னையை கையில் எடுத்திருக் கிறது. முதுநிலைப் படிப்புகளைத் தொடரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு உதவித்தொகைத் திட்டங்கள் மூலம் 100 சதவிகிதக் கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறுகின்றனர். பல்வேறு உதவித் திட்டங்களை பல்கலைக்கழகம் செய்துவருவதால், இந்தக் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. இடஒதுக்கீடு சட்டப்படி எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியும். அதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு