Published:Updated:

ஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் ஏழைக் குழந்தைகள்...

ஆன்லைன் வகுப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் வகுப்புகள்

வீணாய்ப்போனது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்!

ஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் ஏழைக் குழந்தைகள்...

வீணாய்ப்போனது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்!

Published:Updated:
ஆன்லைன் வகுப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் வகுப்புகள்
கொரோனா ஊரடங்கால் தனியார் பள்ளிகள் பலவும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன. இந்தச்சூழலில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பு உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், ஆன்லைன் வழியில் அவர்களுக்குக் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை ஏழைக் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் இலவசக் கல்வி வழங்க வேண்டும். புத்தகங்கள், சீருடை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். அதற்கான செலவுகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்க வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ் 5.57 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துவருகின்றனர். இந்த நிலையில்தான் ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடந்துவருகின்றன. பொதுவாக, அத்தியாவசியத் தேவைகளுக்கே அல்லல்படும் இந்த மாணவர்கள், ஆன்லைன் கல்விக்கான உபகரணங்களுக்கு எங்கே போவார்கள்... சில பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொள்ளாச்சியைச் சேர்ந்த டெய்லர் ஒருவரின் மகன் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படித்துவருகிறார். மாணவரின் தந்தையிடம் பேசினோம். “டெய்லர் கடையை திறந்து மூணு மாசம் ஆச்சு. கடைக்கும் வாடகை கட்ட முடியலை; வீட்டுக்கும் வாடகை கட்ட முடியலை. ரேஷன் அரிசியைவெச்சு சமாளிச்சுக்கிட்டு இருக்கோம். இதுல ஸ்மார்ட் போனுக்கு எங்கே போறது... அதுல இன்டர்நெட் கனெக்‌ஷனுக்கு வேற தனியா ரீ-சார்ஜ் பண்ணணும்னு சொல்றாங்க. எங்ககிட்ட ஸ்மார்ட்போன் இல்லை. அதனால சொந்தக்காரரோட மகன்கிட்ட இருக்கிற ஸ்மார்ட்போன்லதான் என் பையன் அப்பப்போ ஆன்லைன் கிளாஸ்ல கலந்துக்கிறான். அந்தத் தம்பிக்கும் அதே போன்லதான் கிளாஸ் எடுக்குறாங்க. அதனால, அவரை அடிக்கடி தொந்தரவு செய்யவும் சங்கடமா இருக்குதுங்க. அந்தத் தம்பிக்கு கிளாஸ் இல்லாதப்போதான் என் மகன் ஆன்லைன் கிளாஸ்ல கலந்துக்க முடியுது” என்று வருந்துகிறார்.

ஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் 
ஏழைக் குழந்தைகள்...

கோவை புறநகர்ப் பகுதியில் தள்ளுவண்டியில் பொரிகடலை வியாபாரம் நடத்திவரும் பெற்றோர், “என் மகன் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துலதான் ஒரு தனியார் ஸ்கூல்ல யூ.கே.ஜி படிக்கிறான். அந்த ஸ்கூல்ல எல்லாருக்கும் ஆன்லைன் கிளாஸ் எடுக்குறாங்க. ஊரடங்கு போட்டதிலிருந்தே என் தொழில் சுத்தமா நின்னுபோச்சு. எங்ககிட்ட சாதாரண பட்டன் போன்தான் இருக்கு. என் மகன் கூடப் படிக்கிற பசங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் நடக்குது. எங்களுக்கு எந்த அழைப்பும் வரலைங்க” என்றார்கள் வேதனையுடன். இவர்கள் எல்லாம் உதாரணங்களே. இப்படி ஆன்லைன் கல்வி கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் ஏராளம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு - தி.செ.கோபால்
பிரின்ஸ் கஜேந்திரபாபு - தி.செ.கோபால்

இது குறித்துப் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக, ஆன்லைன் கல்வியைக் கருத முடியாது. எனவே, ஆன்லைன் வகுப்பைத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படித்து வரும் மாணவர்களின் நிலை குறித்தும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தெளிவுபடுத்த வில்லை. அந்த மாணவர்களின் வீடுகளில் ஆன்லைன் கல்விக்கான வசதிகள் இருக்கின்றனவா, அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றனவா என்பதை யெல்லாம் தனியார் பள்ளிகளிடம் அரசு கேட்க வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தி.செ.கோபால், “ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களென்றால், ஆன்லைன் வகுப்புக்கு அங்கு இரண்டு ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும். ஏழைக் குடும்பங்களில் இது சாத்தியமில்லை. இதனால், பள்ளி இடைநிற்றலும் அதிகரிக்கும். ஏற்றத்தாழ்வுகளை அரசே உருவாக்குகிறது. ஒன்று, ஆன்லைன் கல்வியை நிறுத்துங்கள்; இல்லையென்றால் அனைவருக்கும் அது சென்று சேரும் வகையிலான வசதிகளை உருவாக்கிவிட்டு அமல்படுத்துங்கள்” என்றார்.

ஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் 
ஏழைக் குழந்தைகள்...

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் ஸ்ரீதர், “கிராமப்புறப் பகுதிகளில் 2019-20 கல்விக் கட்டணத்தையே 75 சதவிகிதம் பேர் முழுமையாகக் கட்டவில்லை. பெரும்பாலும் பெரிய குழுமங்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களில் தான் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர். அதற்காக அந்தப் பள்ளிகள் கட்டணத்தையும் வசூலித்துவிடுகின்றன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது உண்மைதான். அதே சமயம் மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பல நடுத்தர தனியார் பள்ளிகள் எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் ஆன்லைன் வகுப்புகளை எடுத்துவருகின்றன. எனவே, ஆன்லைன் கல்வியை மத்திய, மாநில அரசுகள் வரைமுறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்புசாமியைத் தொடர்புகொண்டோம். “ஆன்லைன் வகுப்பு தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஆன்லைன் கல்வியால் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும், எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்பு எடுக்கலாம் என்றெல்லாம் எழும்பூர் கண் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அவர்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். தீர்ப்பின் அடிப்படையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வரைமுறைகள் வகுக்கப்படும். ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களுக்குத் தொலைக்காட்சியில் அரசு சேனல்கள் மூலம் மாற்றுவழிகள் செயல்படுத்தப்படும்” என்றார்.

அழிக்கத் துடிக்கும் மத்திய அரசு!

ஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் 
ஏழைக் குழந்தைகள்...

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, மத்திய, மாநில அரசுகள் அதற்காக ஒதுக்கிய நிதி விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுப் பெற்றது விகடன் ஆர்.டி.ஐ குழு.

ஒவ்வொரு கல்வியாண்டும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகளை மாநில அரசுகள் முழுமையாக எட்டுவதே இல்லை. கடந்த 2013-14 கல்வியாண்டு முதல் 2019-20 கல்வியாண்டு வரையிலான ஏழு ஆண்டுகளில் சுமார் எட்டு லட்சம் மாணவர்களை இந்தச் சட்டத்தின்கீழ் சேர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 5,57,692 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 2020-21 கல்வியாண்டில் சுமார் 1,25,000 மாணவர்கள் சேர்க்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்ட இட ஒதுக்கீட்டை அழிக்கும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. கடந்த 2013-14 கல்வி ஆண்டு முதல் 2018-19 கல்வி ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் தமிழக அரசு தன் பங்குக்கு 368,49,63,000 ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், 250 கோடி ரூபாய் வழங்க வேண்டிய மத்திய அரசு வெறும் ரூ.27 கோடியே 88 லட்சம் மட்டுமே நிதி அளித்துள்ளது. கடந்த 2017-18 மற்றும் 2018-19 கல்வியாண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் ஒரு ரூபாய்கூட நிதி அளிக்கவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism