Published:Updated:

‘‘நீட் தேர்வு விலக்கு ஒன்றே பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு!’’

நீட் தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
நீட் தேர்வு

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு திட்டவட்டம்

‘‘நீட் தேர்வு விலக்கு ஒன்றே பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு!’’

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு திட்டவட்டம்

Published:Updated:
நீட் தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
நீட் தேர்வு

`நீட் தேர்வு வந்துவிட்டால், யாருமே ஏமாற்ற முடியாது’ என்றார்கள். `சரியான ஆட்களுக்கு மட்டுமே இனி மருத்துவ இடம்’ என்றார்கள். நீட் தேர்வு மையங்களில் அரசு காட்டிய கெடுபிடிகளும்கூட அப்படித்தான் இருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘‘நீட் தேர்வு விலக்கு ஒன்றே பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு!’’

‘தேர்வு எழுத, முழுக்கை ஆடை அணிந்து வரக் கூடாது; தலையைப் பின்னிக்கொண்டு வரக் கூடாது; கைகால், கழுத்து களில் அணிகலன்கள் கூடாது. உள்ளாடை வரை பரிசோதனை’ என தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு மனஉளைச்சலை உண்டாக்கி, எப்படியெல்லாம் நடத்தினார்கள்... சட்டைகள் கிழிக்கப்பட்டு, தலைமுடி கலைக்கப்பட்டு, அலங்கோலமாக தேர்வு எழுதச் சென்ற மாணவர்களின் நிலையை எல்லாம் மறக்க முடியுமா?

இவ்வளவு கெடுபிடிகள் காட்டிய நீட் தேர்வில்தான், ஏராளமான தகிடுதத்தங்கள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த விவகாரத்தில் தேனி மருத்துவ மாணவர் மற்றும் அவரின் தந்தை இருவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த அதே வேளையில், மேலும் நான்கு மாணவர்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் விசாரிக்கப்பட்டனர். அதில் இரண்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கைதுசெய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக் குழு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் நிகழ்ந்த ஆள்மாறாட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘‘மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதுதான் தமிழக அரசின் கடமையே தவிர, ஆள்மாறாட்டத்துக்கு எந்த வகையிலும் அரசு பொறுப்பேற்க முடியாது. தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்’’ என்று புகார்களை சாமர்த்தியமாக மத்திய அரசின் பக்கம் திருப்பிவிடுகிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் விஜயபாஸ்கர் சொன்னதையே வார்த்தை மாறாமல் காப்பி பேஸ்ட் செய்கிறார்.

தமிழக அரசுடன் இணைந்து பயிற்சி அளித்த `ஸ்பீடு’ கோச்சிங் நிறுவனத் தரப்போ, ‘‘சென்ற ஆண்டுக்கான நீட் தேர்வுப் பயிற்சியை, தமிழக அரசே ஒருங்கிணைத்து வழங்கியது. கோச்சிங் வழங்கியதற்கான செலவுகளை அரசு தர மறுத்தத்தால், நாங்கள் பயிற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டோம்’’ என்றார்கள்.

‘‘நீட் தேர்வு விலக்கு ஒன்றே பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு!’’

கடந்த ஆண்டு அரசே பயிற்சி அளித்த 19,355 மாணவர்களில், ஒருவருக்குக்கூட மருத்துவச் சீட்டு கிடைக்கவில்லை. மருத்துவச் சீட்டுகளுக்காக ஒருபுறம் ஆள்மாறாட்டம், பித்தலாட்டங்கள் என்றால், மறுபுறம் கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் தேர்வு முறை, வணிகமயமாகும் பயிற்சி, தோல்விகளால் தற்கொலை, ஆள்மாறாட்டம் என விளைவுகள் நீண்டுகொண்டே போகின்றன.

நீட் தேர்வின் அடிப்படைச் சிக்கல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இதுபற்றிப் பேசினோம்.

‘‘தமிழக அரசு நடத்திய பல்வேறு தேர்வுகள், எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் நடந்திருக்கின்றன. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில்கூட பறக்கும் படையினர் அலர்ட்டாக இருந்து, தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபடுபவர்களை கையும்களவுமாகப் பிடித்துவருகிறார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்திலும் ஒரே அளவிலான மதிப்பெண் பெற்றால்தான், மருத்துவக் கல்வி கட்-ஆஃப்-க்கு மாணவர்கள் தகுதி பெறுவார்கள். மேலும், மருத்துவக் கல்வியும் சுகாதாரத் துறையும் ஒன்றோடு ஒன்று பிணைந்ததாகவும், ஒவ்வொரு மாநில அரசின் சுகாதாரக் கொள்கையுடன் தொடர்புடையதாகவும் இருந்தது. இதன் அடிப்படையில்தான் மாநிலவாரியான மருத்துவக் கல்வியும் இருந்தது.

இதன் நீட்சியாக, குக்கிராமங்களிலும் மருத்துவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற முடிந்தது. இதுதானே மருத்துவருக்கான தகுதி. இப்படித்தானே எதிர்கால மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இத்தனை ஆண்டுகளில் நாம் நடத்திய தேர்வுகளில், நீட் தகுதித்தேர்வுபோல் ‘காதில் இருக்கும் கம்மலைக் கழட்டு... ஜடையைக் கழட்டு... சட்டையைக் கிழி’ என்று மாணவர்களைக் கொடுமைப்படுத்தியதே இல்லை’’ என்றவர், ‘நீட்’டில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களையும் பட்டியலிட்டார்.

‘‘நீட் தேர்வு விலக்கு ஒன்றே பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு!’’

‘‘நீட் தேர்வைப் பொறுத்தவரை, கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண் 720 என இருந்தாலும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வருடாவருடம் மாறிக்கொண்டே இருக்கிறது. நீட் தேர்வுக்கான பயிற்சியில் என்ன நடக்கிறது தெரியுமா? இயற்பியல் பாடத்தைப் பெயரளவுக்குப் படித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, முழுக்க வேதியியலையும் உயிரியலையும் படிக்கவே வற்புறுத்துகிறார்கள். நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. எந்த மாதிரியான கேள்விகள் நீட் தேர்வில் இடம்பெறும், அதற்கு எப்படி பதிலளித்தால் தகுதி பெறலாம் என்பதுதான் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறதே தவிர, பாடங்கள் குறித்த தெளிவுள்ளவர்கள் தேர்ச்சி பெறும்படி இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மருத்துவத் துறைக்குத் தகுதியானவர்களை இப்படித்தான் தேர்ந்தெடுப்பதா?

எதிர்கால மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற பொறுப்புணர்வோடு அணுகாமல், தேர்வுகளை நடத்துபவர்கள் மாணவர்களை வெறும் நுகர்வோராக அணுகும்போது, பெற்றோர்களும் இதுபோன்று தவறிழைக்க உந்தப்படுகிறார்கள். இதற்கு இருக்கும் ஒரே தீர்வு, மேலே குறிப்பிட்டவற்றை மனதில்கொண்டு, நீட் தேர்விலிருந்து தமிழகம் ஏன் விலக்கு கேட்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி, சட்ட மசோதா ஒன்றை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு மத்திய அரசின் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்’’ என்று கோபம் கொப்பளிக்கப் பேசினார்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது என அறிய, மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கான கமிட்டியின் செயலாளர் டாக்டர் செல்வராஜனைத் தொடர்புகொண்டோம்.

‘‘இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது இதுவே முதல் முறை. போலீஸ் விசாரணை நடைபெறுவதால் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்து எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், மாணவர்கள் ஆள்மாறாட்டம், இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்’’ என்றார்.

`நீட்’, அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சாகி வருகிறது. இதில் சிக்கிக்கொள்ளும் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பயோமெட்ரிக் முறைதான் பதிலா? கண்ணெதிரே ஆள்மாறாட்டமே நடக்கும் போது, பயோமெட்ரிக் முறை இந்த முறைகேடு களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிடுமா?

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக பாளையங்கோட்டையில் நடந்த பிரசாரத்தில், ‘மருத்துவக் கல்வி மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை அ.தி.மு.க தொடர்ந்து எதிர்க்கும்’ என்றார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவரின் மரணம், ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் மருத்துவக் கனவுகளையும் கவ்விச் சென்றுவிட்டது என்பது, மறுக்க முடியாத உண்மை.