Published:Updated:

வாழ்த்து.. சந்திப்பு.. உற்சாகம்.! - உறவுப் பாலம் கட்டும் ‘ஃபேஸ்புக்’ பேராசிரியர் #MyVikatan

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

``மோகன்ராஜ் சார் என்றாலே ஒரு மோட்டிவேட்டர். புன்னகை மன்னன். காலேஜ் லைப்பிலே எந்தப் பிரச்னைகள்னு அவர்கிட்டே போனாலும் எங்களுக்குத் தீர்வு சொன்ன மனிதர்''

இன்றைய காலகட்டத்தில் மாணவர்-ஆசிரியர் உறவு என்பது பெரும்பாலும் மாமியார்- மருமகள் உறவைப்போலவே முறைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு சிலர் மட்டும் விதிவிலக்காய் இருக்கலாம். ஆனால், பணி ஓய்வுக்குப் பிறகும் மாணவர்களுடன் மிகுந்த நெருக்கம் காட்டிவரும் பேராசிரியர்களும் அபூர்வமாய் ஆங்காங்கே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் பேராசிரியர் என்.மோகன்ராஜ். சிவகங்கையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் வணிக செயலாட்சி துறைத்தலைவராகவும் 8 ஆண்டுக்காலம் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். 1977-ல் பணியில் சேர்ந்து 2013-ம் ஆண்டில் ஓய்வுபெற்றவர். சுமார் 36 ஆண்டுக்காலம் கல்விப் பணியில் இருந்தவர்.

 மாணவர்-ஆசிரியர் ரியூனியன்
மாணவர்-ஆசிரியர் ரியூனியன்

இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் புரட்டினாலே தினமும் நாலு மாணவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள், இன்னும் ரெண்டு மாணவர்களுக்குத் திருமண வாழ்த்து.. சிலருக்குப் பாராட்டுப் பதிவுகள்.. அதுவும் அவர்களின் போட்டோவுடன் போட்டு மனிதர் அசத்திவருகிறார். இதை நாள் தவறாமல் செய்துவருகிறார். ஒவ்வொரு நாளும் தன்னிடம் படித்த மாணவர்களுக்கான ஏதாவது ஒரு வாழ்த்துச் செய்தி கட்டாயம் அவரோட முகநூலில் போஸ்ட்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது.

அத்துடன் கல்லூரியில் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை எந்த டிபார்ட்மென்ட்டில் படித்தவர் என்ற விவரமும் பதிவிடுகிறார். இதுமட்டுமில்லாமல் இப்போது எங்கே என்ன வேலை பார்த்துவருகிறார் என்ற கூடுதல் டீட்டெயிலும் கொடுத்து தன்னுடைய மாணவர்களை உற்சாகப்படுத்தி வருவது இவருடைய சிறப்பு. இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இன்றுவரை 4,876 பேர் நட்பில் உள்ளனர். அவர்களில் 95 சதவிகிதத்துக்குமேல் அவருடைய மாணவ, மாணவியர்தான்.

அதேபோல் தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு எங்கு நடைபெற்றாலும் அங்கு கலந்துகொள்ளத் தவறுவதில்லை. அதில் தனது பழைய நினைவுகளைப் பதிவு செய்வதையும் முன்னாள் மாணவர்களுடன் உரையாடி மகிழ்வதையும் தன்னுடைய வாழ்வின் மிகப்பெரும் விருப்பமாக செய்துவருகிறார். கிட்டத்தட்ட அந்தக் கல்லூரியில் படித்த மாணவர்களின் உறவுப்பாலமாய் இவர் விளங்கிவருகிறார். இவருடைய முகநூல் பதிவைப் பார்த்துதான் உடன் படித்த சக வகுப்பு நண்பர்களையே மீண்டும் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தது என்று சந்தோஷப்படுகிறார்கள் அவருடைய மாணவர்கள்.

சங்கீதா
சங்கீதா

அவருடைய மாணவியும் புதுக்கோட்டையில் வக்கீலாக பணிபுரிபவருமான சங்கீதா என்பவர், ``காலேஜ் லைஃப்ல நமக்கு நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் நிறையபேர் இருப்பாங்க. ஆனால், கால ஓட்டத்துலே எங்கெங்கேயோ சிதறிப்போயிடுறோம். அப்படி நான் தொலைச்ச என் ஃப்ரெண்ட்ஸ்களை மறுபடியும் மோகன்ராஜ் சாரோட ஃபேஸ்புக் போஸ்ட் மூலமாகத்தான் கண்டுபிடிச்சேன். இப்போ எங்க நட்பும் உறவும் பழையபடி தொடர்றதுக்கு முக்கிய காரணமே சாரோட ஃபேஸ்புக் பதிவுகள்தான். அவருக்கு நாங்க ஸ்டூடண்ட்ஸ் அப்படிங்கிறதை தாண்டி அவரோட சொந்தக் குழந்தைகள் மாதிரி எங்கள்மீது அவர் காட்டுற பாசம்தான் இதுக்கெல்லாம் முக்கியக் காரணம். கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆவுடையார்கோவில் பக்கம் உள்ள ஏம்பல் – ஏனங்கம் என்ற ஒரு சின்ன கிராமத்துலே எங்க பி.பி.ஏ.பேட்ச் நண்பர்கள் எல்லாம் மீட் பண்ணினோம். அந்தக் கிராமத்துக்கே நேர்ல வந்து ஒருநாள் முழுவதும் எங்ககூட தங்கியிருந்து பழைய நினைவுகளை எல்லாம் எங்களோட பகிர்ந்துக்கிட்டதை எப்போதுமே மறக்க முடியாது...” என்கிறார்.

``மோகன்ராஜ் சார் என்றாலே ஒரு மோட்டிவேட்டர். புன்னகை மன்னன். காலேஜ் லைப்பிலே எந்தப் பிரச்னைகள்னு அவர்கிட்டே போனாலும் எங்களுக்குத் தீர்வு சொன்ன மனிதர். அவரோட ஃபேஸ்புக்தான் எங்கள் நண்பர்களோட நட்புக்கும் உறவுக்கும் இப்போ பாலமா இருக்கு. ஒவ்வொரு நாளும் அவரோட ஃபேஸ்புக்கை பார்க்கிறதே அவரோட வாழ்த்துச் செய்தி யாருக்குனு பார்க்கிறதுக்குத்தான்.1980-ம் ஆண்டு காலகட்டத்துலே இருந்து அவருக்கிட்டே படிச்சவங்களை இன்னும் மறக்காமல் அவங்களோட நட்பையும் உறவையும் அவர் தொடருறது, வாழ்த்துச் சொல்றது இதெல்லாம் எங்களுக்கே பெரிய ஆச்சர்யம்" என்கிறார் 1996-99-ல் அவரின் பிபிஏ வகுப்பு மாணவரும் காரைக்குடியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவருமான ஜெய்கணேஷ்.

``உங்களிடம் படித்த மாணவர்களை சிறிதும் மறக்காமல் அவர்களுடன் தொடர்ந்து ஆழமான நட்பையும் உறவையும் இன்னும் தொடர என்ன காரணம்..?” என்று பேராசிரியர் மோகன்ராஜிடம் கேட்டேன். அதற்கு, `` மாணவன் என்பவன் ஒவ்வோர் ஆசிரியருக்கும் பிள்ளைகள் மாதிரி. அவனை செதுக்கிச் சிறந்த மனிதனாக்க வேண்டிய கடமை ஒவ்வோர் ஆசிரியருக்கும் இருக்கு. இதை ஆசிரியர்கள் முதலில் புரிஞ்சுக்கணும்.

என்னோட 35 ஆண்டுக்கால கல்விப் பயணத்துலே எந்த மாணவனையும் நான் தண்டிச்சதே இல்லை. மாணவர்களிடம் நான் பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு மட்டும்தான். மாணவன் அதுவும் காலேஜ் லைப்பில தவறு பண்ணத்தான் செய்வான். அவனை லாவகமாய், அன்பாய் நம்ம பக்கம் திசை திருப்பி நல்வழிப்படுத்துறதுலேதான் ஒரு ஆசிரியரின் வெற்றியே அடங்கி இருக்கு. மாணவனை ஒருபோதும் மக்கு என்று ஆசிரியர்கள் மட்டமாக நினைக்கக் கூடாது. அவன் கற்றுக்கொள்ள வந்தவன். அவனிடம் உள்ள காம்ப்ளக்ஸைக் கண்டுபிடிச்சுப் போக்கணும். ஏழை, பணக்காரன், சாதி, நிறம், உடை என ஏகப்பட்ட பிரச்னைகளும் சிக்கல்களும் ஏற்றத்தாழ்வுகளும் தாழ்வு மனப்பான்மையும் இந்த வயசுலே மாணவனுக்கு அதிகமாவே இருக்கும். ஒவ்வொரு மாணவனுக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அந்த பெர்சனல் பிராப்ளம்ஸைக் கண்டுபிடிச்சு தீர்வு சொல்லணும். அதைதான் நான் செஞ்சேன். அவனுக்கு நல்ல வழிகாட்டியாய் இருந்திருக்கேன்.

ஜெய்கணேஷ்
ஜெய்கணேஷ்

மாணவர்கள் அவங்களோட பலதரப்பட்ட சொந்த விஷயங்களைக்கூட என்கிட்டே ஷேர் பண்ணி இருக்காங்க. அவங்க குடும்பத்துலே நடக்கிற எல்லா நிகழ்வுகளுக்கும் என்னை அழைச்சிருக்காங்க. நானும் மேக்ஸிமம் கலந்திருக்கேன். அப்போதுதான் அந்த ரிலேசன்ஷிப் ரொம்ப நெருக்கம் ஆச்சு. அது இன்னைக்கு வரைக்கும் தொடருது. அவங்க வீட்டில ஒருத்தராத்தான் என்னைப் பார்க்கிறாங்க. அப்படிப்பட்ட உணர்வுள்ள என் பிள்ளைகளுக்கு நான் வாழ்த்துச் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்? அதைத்தான் ஃபேஸ்புக் மூலம் நான் தினமும் செஞ்சிட்டு வர்றேன்.

ஒரு பேட்ச்சிலே இருந்து வெளியே வர்ற மாணவர்களில் பலபேரு சொந்த பிசினஸ், ஜாப்னு நல்ல நிலைக்குப் போயிடுறாங்க. சில பேரு கஷ்டமான சூழலில் இருக்காங்க. அப்படி சிரமப்பட்ட நண்பர்களுக்கு சக நண்பர்கள் உதவவும், வேலை கொடுக்கவும் இந்த நண்பர்கள் சந்திப்புதான் பெரும் உதவியா இருந்திருக்கு. அதுக்கு என்னோட ஃபேஸ்புக் பதிவும் ஒரு முக்கியக் காரணம். இதனால்தான் அவங்க மீண்டும் ரீயூனியன் ஆகமுடிஞ்சது. அந்த வகையில் நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.

சோசியல் மீடியாவை ஆக்கபூர்வமான பணிக்கு பயன்படுத்துறது நம்ம கையிலேதான் இருக்கு. அதைத்தான் நான் செஞ்சிக்கிட்டு இருக்கேன்.
மோகன்ராஜ்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பை மலேசியாவிலே ரெண்டுமுறை நடத்தி இருக்காங்க. தமிழ்நாட்டிலேயும் பல இடங்களில் எங்க மாணவர்கள் நடத்துறாங்க. நான் எல்லாச் சந்திப்புக்கும் கட்டாயம் போயிடுவேன். மாணவர்களோட நான் வைச்சிருக்கிற நட்பும் உரையாடலும்தான் என்னை இந்த 65 வயதுலேயும் இன்னும் இளமையாகவும் உற்சாகமாவும் பீல் பண்ண வைக்குது.

மாணவர்களுடன் ஆசிரியர்கள் எப்போதுமே ஒரு இன்ட்டிமேஸியை கிரியேட் செய்யணும். மாணவர்களோட தனிப்பட்ட பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்டு முடிஞ்ச அளவுக்கு தீர்வு கொடுக்கணும். மாணவனை குறைச்சு மதிப்பிடவே கூடாது. அவனை அன்பால் வளைக்கணும். அந்த வயசுலே நாமும் அப்படித்தான் இருந்திருப்போம். செய்யுற தவற்றை அவன் உணர்ற மாதிரி நாம புரிய வைச்சாலே போதும். அவன் எந்தத் தப்பும் மறுபடியும் செய்யமாட்டான்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

மாணவர் நலனுக்கு ஆசிரியர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கணும். ஆனால், இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே பார்க்கிறாங்க. மாணவனின் வளர்ச்சிதான் ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி. ஒவ்வோர் ஆசிரியரின் வளர்ச்சி. இந்தச் சமூகத்தின் வளர்ச்சி. இதைப் புரிந்துகொண்டால் ஆசிரியர்–மாணவர் நட்பு என்றுமே மகிழ்ச்சியாய் இருக்கும். ..” இப்படி உற்சாகமாய் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் மோகன்ராஜின் குரல் திடீரென உடைந்து போகிறது..

“ சமீப காலமாய் நிறைய வாகன விபத்துகளிலும் திடீர் உடல் நலக்குறைப்பாட்டினாலும் என் மாணவச் செல்வங்கள் சிலரை இழந்து வருவது எனக்குப் பெரும்வேதனை அளிக்கிறது. இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியறதில்லை. அந்த துயரத்தை அடக்கமுடியாத கண்ணீருடன்தான் முகநூலில் பதிவு செய்கிறேன்.

“ என்னை எடுத்துப்போட எனக்கு என் மாணவச் செல்வங்கள் வேண்டும். இறைவா.. இனிமேலாவது என் மாணவர்களை எடுத்துக்கொள்ளாதே.! வேண்டுமானால் என்னை எடுத்துக் கொள்..!” – பேராசிரியர் மோகன்ராஜ் தன்னுடைய மாணவர் ஒருவரின் அகால மரணத்துக்கான அஞ்சலி பதிவு இது. இந்த ஒற்றை முகநூல் பதிவு அஞ்சலியில் உள்ளடங்கி இருக்கிறது அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையேயான ஒட்டுமொத்த உறவும்.. அன்பும்..!

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல