Published:Updated:

`பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே என்பது தவறாகவே முடியும்!' - மனநல மருத்துவர்

முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிப்போம் என்பது ஆலோசனை அளவில்கூட ஏன் நிகழக் கூடாது என்பது பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சில நேரங்களில் `இந்தப் பிரச்னைக்கு இதுதான் தீர்வு’ என்று நினைத்து ஒன்றை ஆலோசித்துக்கொண்டிருப்போம். ஆனால், அது இன்னமும் பிரச்னையைத் தீவிரப்படுத்திவிடலாம் அல்லது நம்மை இன்னும் பின்னோக்கி இழுத்துவிடலாம். இப்படித்தான் ஒரு சம்பவம் சில நாள்களாக நடந்துகொண்டிருக்கிறது. பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுவது தொடர்பான புகார்கள் நாலாபுறமும் எழ ஆரம்பித்ததும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``பெண் குழந்தைகள் படிக்கிற பள்ளிக்கூடங்களில் இனி முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிப்போம்" என்று அறிவித்ததாக முதலில் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து, `இது மிகவும் பிற்போக்குத்தனம்’, `இது தீர்வே கிடையாது’, `கடுமையான சட்டம் இயற்றி தவறு செய்பவர்களைத் தடுத்து நிறுத்துவதை விட்டுவிட்டு...’ என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். உடனடியாக, ``பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிப்பது தொடர்பான செய்தி உண்மைக்குப் புறம்பானது. ஆசிரியர்களால் மாணவிகள் சந்திக்கிற பாலியல் தொல்லைகளைக் களைந்தெறிய என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக வந்துள்ள பரிந்துரைகள் குறித்து தற்போது ஆலோசித்து வருகிறோம்" என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அறிவிப்பு, பரிந்துரை, ஆலோசனை என எதுவாக இருந்தாலும் பள்ளி முதல் கல்லூரி வரை பெண்கள் மட்டுமே படிக்கிற கல்விக்கூடங்களிலும் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருக்கும் கல்விக்கூடங்களிலும் பயில்கிற மாணவிகள் உளவியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டி வரும். அவை என்னென்ன, முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிப்போம் என்பது ஆலோசனை அளவில்கூட ஏன் நிகழக் கூடாது என்பது பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

``ஆண், பெண், மூன்றாம் பாலினம் என எல்லோரும் சேர்ந்ததுதான் சமூகம். இவர்கள், அவரவர் உருவ அமைப்புடனும் இயல்புடனும் வாழ்வார்கள். இதுதான் இயற்கை. இதில் பெண் என்றால் இந்த உருவ அமைப்பில்தான் இருப்பார் என்கிற இயல்பான உணர்வுடன்தான் ஆண் இருக்க வேண்டும்; இயங்க வேண்டும். பெண் மட்டுமே ஆசிரியராக இருப்பார் என்று பெண்களை மட்டும் தனித்தியங்கப் பரிந்துரைத்தாலோ, ஆலோசித்தாலோ, அது நம் அடிப்படை சமூகக் கட்டமைப்பை பாதிப்பதோடு, `ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பான்’ என்கிற பிற்போக்கான மனப்பான்மையின் எதிரொலியாகவும் ஆகி விடலாம்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே, சொந்த உறவுகளாலும் மிகவும் நெருக்கமானவர்களாலும்தான் பெண் குழந்தைகள் அதிகம் பாலியல் தொல்லைகளையும் துன்புறுத்தல்களையும், சில சம்பவங்களில் மரணத்தையும் சந்திக்கிறார்கள். அதனால், `குடும்ப அமைப்பே கூடாதோ’ என்று ஆலோசிக்க முடியாதல்லவா?

Students
Students
AP Photo/Altaf Qadri

ஆண் குழந்தைகளுக்கு தோழி, பெண் ஆசிரியர், ஆன்ட்டி என்று எப்படி பெண் உறவுகள் இருக்கின்றனவோ, அதேபோல பெண் குழந்தைகளுக்கும் நண்பன், ஆண் ஆசிரியர், அங்கிள் என்று ஆண் உறவுகள் அவசியம். அப்போதுதான் எந்த உறவுடன் எந்த எல்லை வரை பழகலாம் என்பது அவர்களுக்குத் தெரிய வரும். தவிர, ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகினால்தான், ஓர் இனத்தை இன்னோர் இனம் புரிந்துகொள்ளும்; மரியாதையாகவும் நடத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை தருகிறார்கள் என்று மாணவர்களை ஆண், பெண் என்று பிரித்து வைத்தால், எதிர்ப்பாலின ஈர்ப்பு இயல்பைவிட அதிகரிக்கலாம் அல்லது தாங்கள் கேள்விப்படுகிற சில நெகட்டிவ் செய்திகளின் அடிப்படையில் `எதிர்ப்பாலினமே மோசம்’ என்று நம்ப ஆரம்பித்துவிடலாம்.

Student
Student
AP / Mahesh Kumar A

பெண்கள் மட்டுமே படிக்கிற கல்விக்கூடங்களில் படித்து, பெண் ஆசிரியர்களாலேயே போதிக்கப்பட்டு, ஒருவேளை வீட்டிலும் ஒற்றைப்பெற்றோரால் ஒரு பெண் குழந்தை வளர்க்கப்படுகிறது என்றால், அந்தப்பெண் வேலைக்குச் செல்லும்போது ஆண்களுடன் சேர்ந்து வேலைசெய்யத் தயங்கலாம்; பயப்படலாம். இது திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்தால், `நீ பாதி நான் பாதி’ என்கிற இல்லற வாழ்க்கையே பாதிக்கப்படும். இந்த பயமும் தயக்கமும் இருபாலார் பயில்கிற கல்விக்கூடங்களில் படித்து வளர்கிற பெண்களிடம் மிக மிகக் குறைந்த சதவிகிதத்திலேயே காணப்படுகிறது என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

கோபமாக இருக்கிற நோயாளியிடம் மருத்துவர்கள் எப்படிப் பேச வேண்டும்; பொதுமக்கள் கோபமாக இருக்கும்போது பப்ளிக் சர்வீஸில் இருப்பவர்கள் தங்களுடைய ஈகோ எழாமல் எப்படிப் பேச வேண்டுமென்கிற விதிகள் இங்கு பேப்பரில் மட்டுமே இருக்கின்றன. இதேபோல, ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவு எப்படியிருக்க வேண்டும்; அந்த உறவின் எல்லை என்ன ஆகியவை ஆசிரியர் பயிற்சியின்போதே கற்பிக்கப்படுகின்றன. அதை அவர்கள் பின்பற்றியிருந்தாலே இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்காது.

Representational Image
Representational Image
PSBB பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு... ட்விட்டரில் குவியும் மாணவர்களின் புகார் பட்டியல்!

இந்த நேரத்தில் இந்தச் சமூகத்துக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். `கையைத் தொட்டார். டபுள் மீனிங் ஜோக் சொன்னார். அவ்ளோதானே. இத பெருசு பண்ணாம அப்படியே விடு’ என்று பெண் குழந்தைகளுக்கு அறிவுறுத்தாதீர்கள். அவையும் பாலியல் தொல்லைகள்தான். சினிமாவில் கதாநாயகன், நாயகியை விரட்டி விரட்டிக் காதலிப்பது பாலியல் தொல்லையும் பாலியல் துன்புறுத்தலும்தான். டபுள் மீனிங் ஜோக்கும் பாலியல் தொல்லைதான். இவற்றையெல்லாம் வீட்டு ஹாலில் வைத்து ரசிக்க ஆரம்பித்துவிட்டதால், அபூர்வமாகச் சில பெண் குழந்தைகள் புகார் சொன்னாலும் அவர்களையும் `பெருசு பண்ணாத’ என்று அடக்கி விடுகிறோம்.

எதிர்ப்பாலின ஈர்ப்பு இயல்பானதுதான். அதையும்தாண்டி எதிர்ப்பாலினத்தாரை மரியாதையாகத்தான் நடத்த வேண்டும் என்பதைப் பள்ளிக்கூடம், கல்லூரி, பணிபுரியும் இடங்கள் என்று எல்லா இடங்களிலும் கடுமையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பாலியல் குற்றங்கள் குறையும். இதற்கு, முதல்படியாக பாதிக்கப்பட்ட பெண்களைப் பேச விட வேண்டும்.

#MeToo
#MeToo
IRS அலுவலர் பூ.கொ.சரவணன் மேல் குவியும் #MeToo புகார்கள்... பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வது என்ன?

உலகமே ஆணும் பெண்ணும் சமம் என்று இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு சில ஆசிரியர்களைக் காரணம் காட்டி `பெண்கள் பள்ளிக்கூடத்தில் முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்கள் நியமனம்’ என்று முடிவெடுத்தால், பெண்களுக்கு உலகை எதிர்கொள்கிற தைரியம் குறைந்துவிடும். வாழ்க்கை என்பது எப்போதும் பாதுகாப்பு அரணுக்குள் இருப்பதல்ல. அது நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான். அந்தக் கெட்டதில் ஒன்று பாலியல் குற்றங்கள். தவறு செய்பவர்களைத் தடுக்க வேண்டும்; பாதுகாப்பாக இருக்க பெண்களுக்குச் சொல்லித் தர வேண்டும். ஆணும் பெண்ணும் சரிசமமாக வாழ வேண்டுமென்றால், அவர்கள் ஒன்றாகப் படிக்க வேண்டும்; விளையாட வேண்டும்; ஆசிரியர்களில் ஆணும் இருக்க வேண்டும்’’ என்கிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா அழுத்தம் திருத்தமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு