Published:Updated:

`நாடாளுமன்றம் முழுக்க சாமியார் மடம் ஆகிவிட்டது'- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

நாடாளுமன்றம் முழுக்க சாமியார் மடம் ஆகிவிட்டது. அதில் அதிகமான சாமியார்கள்தான் உள்ளனர் என்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

CM Narayanaswamy
CM Narayanaswamy

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் திருச்சியில் நடத்திய கல்வி உரிமை மாநாட்டில், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மேடையில் "அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறதா புதிய கல்விக் கொள்கை" என்ற தலைப்பில் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, “புதிய கல்விக் கொள்கை வரைவின் பகுதிகள் 18 மற்றும் 23 அரசியலமைப்பு சட்டத்தையும் அதன் முகப்பு உரையையும் நேரடியாக மீறுகிறது.

Stadium
Stadium

மேலும் “ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக்” எனப்படும் தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்படுமாம், ஆணையத்தில் சில முதல்வர் மட்டுமே இடம் பெறுவார். தற்போது இருக்கின்ற அமைப்பில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் இடம் பெற இயலும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநிலங்கள் உடையது.

அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 15 மற்றும் 16 சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசுகின்றது. ஆனால் இந்த வரைவு கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் குறித்துப் பேசாமல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் குறித்தே பேசுகிறது. மேலும் இட ஒதுக்கீடு குறித்து கூறவே இல்லை. பேசுகிற ஒரே இடம் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கட்டாயம் இல்லை என்று குறிப்பிடுகிறது. எந்த விதத்திலும் கல்வியை தர வேண்டிய கடமை அரசின் உடையது என்பதைக் குறிப்பிடவே இல்லை. மிகத் தெளிவாக மக்களுக்குக் கல்வி வழங்க வேண்டிய கடமையை அரசிடமிருந்து நீக்குகிறது.

Cultural programs
Cultural programs

கல்வியில் லாப நட்ட கணக்கு பார்க்க இயலாது லாபம் பார்த்து நடத்த இது வணிகம் அல்ல என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1927இல் மும்பையில் பேசினார். ஆகவே சமூக நீதிக்கு எதிராக கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இந்திய அரசியலமைப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்வி உரிமைகளுக்கு எதிராக இருக்கின்ற இந்த வரைவு முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்” என்றார்,

தொடர்ந்து பேசிய அருணன், “காஷ்மீருக்கு ஒரு ஆபத்து என்றாலும் கல்விக்கு ஒரு ஆபத்து என்றாலும் முதலில் துடித்தது தமிழ்நாடே. மாற்றுக் கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும் எனில் பொதுவான கல்வி, தரமான கல்வி, அருகாமை கல்வி என்ற ரீதியில் அமைய வேண்டும். ஆனால் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு தர முயல்வது மாற்றுக்கல்வி அல்ல மனுவாத கல்வி. கல்வி எல்லோருக்கும் பரவலாக்கப்பட வேண்டும். ஆனால் கல்வி அனைவருக்கும் கிடைக்க கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது வரைவு. இருக்கின்ற கல்வியையே பறிக்கும் வரைவாக இது இருக்கின்றது.

தேர்வுச் சுமை 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இருப்பது போலவே இனி 3 , 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என்கிறது இந்த இந்த வரைவு. தேர்வுகளின் அழுத்தம் அதிகரிக்குமானால் இடைநிற்றல் அதிகரிக்கும். அடுத்ததாக நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளால் பல மனிதர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இனி பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு.

CM Narayanaswamy and KN Nehru
CM Narayanaswamy and KN Nehru

அடுத்ததாக இந்த வரைவில் ஒரு இடத்தில் இந்தியாவில் மொத்தம் 40,000 கல்லூரிகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். அதில் 20 சதவீத கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி இல்லை. ஆகையினாலே இந்த கல்லூரிகளை பாதியாகக் குறைக்கப்படுமாம்.

இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து 20ஆயிரம் கல்லூரிகளாக சுருக்கப் போவதாக கஸ்தூரி ரங்கன் பேசியுள்ளார். மேலும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்து 1.7 கிலோ மீட்டர் அருகில் குடிநீர் கிடைக்க வேண்டும் என்கிற கொள்கைபடி, அந்த காலத்தில் அதிகமாக கல்லூரிகளைத் திறந்துவிட்டார்கள். குடிநீர் எப்படி எங்களுக்கு முக்கியமோ கல்வியும் அதேபோலவே எங்களுக்கு முக்கியம். அதைப்போலவே இட ஒதுக்கீடு குறித்து இந்த வரைவு அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை. 10ஆண்டுகளில் தலித்துகள் தாங்களாகவே முன்வந்து எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவித்துவிடுவார்கள்” என்று பேட்டியளித்துள்ளார். இவர்களின் நோக்கம், இட ஒதுக்கீட்டை அழிப்பதுதான்” என்றார்.

இறுதியாக நடைபெற்ற அரசியல் அமர்வில், த.மு.க.சவின் மாநில தலைவர் எம்.பி. சு.வெங்கடேசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, முத்தரசன், தி.மு.க அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர்.

மேடையில் பேசிய முத்தரசன், “1953-ல் ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம் எப்படி முற்றிலுமாக எதிர்த்து முறியடித்தது தமிழ்நாடு, அதுபோலவே இந்த தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ முறியடிப்போம். அப்போது ராஜாஜி வெளிப்படையாக எதிர்த்தார். இப்போது மோடி மவுனமாகக் காய் நகர்த்துகிறார்" என்றார்.

CM Narayanaswamy
CM Narayanaswamy

இவ்விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் நாம் சரளமாகப் பேசுவதைக் கண்டு வடமாநிலத்தவர்கள் வியந்து பார்க்கின்றனர். முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாமியார்கள் இப்போது, நாடாளுமன்றத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்றம் 90 சதவிகித காவி மயமாகிவிட்டது. இந்தி மொழியைக் கட்டாயம் திணிப்பதன் மூலம் தமிழ் மொழி மட்டுமின்றி, தமிழர்களையும் மூழ்கடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தி மொழியை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அவர்களுடன் பேசுவதற்காக நானும் கற்றுக் கொண்டேன். ஆனால் அதைத் திணிக்கக்கூடாது.

ஏற்கனவே மருத்துவக் கல்வியில் சேர, நீட் தேர்வு திணிக்கப்பட்டு மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் தங்கள் கனவு சிதைந்ததால் தற்கொலை செய்துள்ளனர். பாஜகவின் மும்மொழி கொள்கையை எதிர்த்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள பாஜக உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் நாங்கள் பாஜகவைக் கட்டுக்குள் வைத்துள்ளோம்” என்றார்.