Published:Updated:

சாதிய அடையாளத்துடன் பள்ளிப் பெயர்கள்... சரிதானா புதுச்சேரி அரசே?

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

- கொந்தளிக்கும் மக்கள்

சாதிய அடையாளத்துடன் பள்ளிப் பெயர்கள்... சரிதானா புதுச்சேரி அரசே?

- கொந்தளிக்கும் மக்கள்

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி
பிஞ்சு மனதிலும் `சாதி’ எனும் கொடிய நஞ்சை ஆழமாக விதைத்து உரமேற்றுகின்றன சாதியக் கட்சிகள். ஒருசில ஆசிரியர்களும் பெற்றோர்களும்கூட அதற்கு உறுதுணையாக இருப்பதால், பள்ளி வளாகத்துக்குள்ளேயே சாதிக் குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள் மாணவர்கள். கசப்பான பல அனுபவங்களுக்குப் பின்னரும்கூட அவர்களின் கைகளில் கட்டப்பட்டிருக்கும் சாதிக் கயிறுகளை இன்னும் அகற்ற முடியவில்லை நம்மால். இப்படியான சூழலில், சமூக அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சாதிய அடையாளங்களுடன் அரசுப் பள்ளிகளுக்குச் சூட்டி அதிர்ச்சியளித்திருக்கிறது புதுச்சேரி அரசு!
சாதிய அடையாளத்துடன் பள்ளிப் பெயர்கள்... சரிதானா புதுச்சேரி அரசே?

மடுகரையில் இயங்கிவரும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெயரை ‘வெங்கடசுப்பா ரெட்டியார் (முன்னாள் முதல்வர் - புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கத்தின் தந்தை) பள்ளி’ என்றும், அதே ஊரிலிருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியின் பெயரை ‘சுப்புராய கவுண்டர் (முன்னாள் எம்.எல்.ஏ) பள்ளி’ என்றும், காரைக்கால் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெயரை ‘எம்.ஓ.ஹெச்.ஃபாரூக் மரைக்காயர் (முன்னாள் முதல்வர் - புதுச்சேரி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானின் தந்தை) பள்ளி’ என்றும், கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெயரை ‘அண்ணாமலை ரெட்டியார் (முன்னாள் எம்.எல்.ஏ) பள்ளி’ என்றும் மாற்றி அரசாணை வெளியிட்டிருக்கிறது புதுச்சேரி அரசின் கல்வித்துறை.

‘‘வேலைவாய்ப்புகள், புதிய தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட எந்தவோர் உருப்படியான மக்கள் நலத்திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையிலிருக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், தங்கள் கட்சிமீது பொதுமக்களுக்கு இருக்கும் அதிருப்தியைச் சமாளித்து, வாக்குகளை அறுவடை செய்வதற்காகவே இந்த மோசமான அரசியலைச் செய்திருக்கிறது’’ என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

சாதிய அடையாளத்துடன் பள்ளிப் பெயர்கள்... சரிதானா புதுச்சேரி அரசே?

‘பள்ளிகளின் பெயர்களிலிருக்கும் சாதிய அடையாளங்களை நீக்கும்படி’ சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் மடுகரைப் பகுதி மக்கள். ‘‘அரசுப் பள்ளிகளில் படிப்படியாகக் குறையும் மாணவர்களின் வருகை, கல்வித்தரம், இடிந்து விழும் நிலையில் இயங்கும் கட்டடங்கள் என எதிலும் அக்கறை செலுத்தாத அரசு, பெயர் மாற்றுவதில் மட்டும் ஆர்வம்காட்டுவது ஏன்?’’ என்று கேள்வி எழுப்புகின்றனர் புதுச்சேரி மக்கள்.

‘‘கடந்த காலங்களில் சிறந்த ஆளுமைகளாக விளங்கிய தலைவர்களின் பெயர்களைப் பள்ளிகளுக்குச் சூட்டுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாதியற்ற சமுதாயம் மலர வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் குரலெழுப்பும் இந்தச் சூழலில், வாக்கு அரசியலுக்காக அந்தத் தலைவர்களின் பெயர்களைச் சாதிய அடையாளத்துடன் பள்ளிகளுக்கு வைத் திருப்பதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். இதில் அக்கறை காட்டும் ஆட்சியாளர்கள், பரிதாப நிலையிலிருக்கும் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துக் கொஞ்சம்கூடக் கவலைப்படுவதில்லை. சமீபத்தில், ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக் கொன்றில், ‘சாதியில்லா சமுதாயத்தை நோக்கிப் பயணிக்கும்போது, ஏன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்த மனுவைத் தள்ளுபடி செய்திருப்பதையும் புதுச்சேரி அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்’’ என்றார் திராவிட விடுதலைக் கழகத்தின் புதுச்சேரித் தலைவர் லோகு அய்யப்பன்.

நாராயணசாமி - கமலக்கண்ணன் - ஜெயபிரகாஷ்
நாராயணசாமி - கமலக்கண்ணன் - ஜெயபிரகாஷ்

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஜெயபிரகாஷிடம் பேசியபோது, ‘‘பொதுவாகவே கிராமப்புறங்களில் இன்றளவும் சாதியப் பாகுபாடுகள் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றன; பிரச்னையாக இருக்கின்றன. இந்தச் சூழலில், மடுகரை கிராமத்தில் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் மக்கள் ஈடுபட்டார்கள். இதன் தொடர்ச்சியாக, மறுநாள் பக்கத்து கிராமமான சூரமங்கலத்தில் அம்பேத்கர் சிலையின்மீது மர்ம நபர்கள் சாணக்கரைசலை ஊற்றியிருக்கிறார்கள். அதன் காரணமாக, அங்கும் போராட்டம் நடந்தது. இந்தப் பதற்றமான சூழலுக்கு காங்கிரஸ் அரசுதான் முழுமுதற் காரணம். வாக்குக்காக இவர்கள் செய்யும் அரசியல், மாணவர்களின் மனதில் விஷத்தை விதைக்கிறது. பள்ளிகளின் பெயரிலிருக்கும் சாதி அடையாளத்தை நீக்காவிட்டால், அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து, தொடர் போராட்டத்தில் இறங்குவோம்’’ என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்க, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடுவைத் தொடர்புகொண்டபோது, ‘‘அமைச்சரவை முடிவுப்படியே பள்ளிப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக எங்களிடம் வரும் கோரிக்கைகளை, புகார்களை அரசுக்குத் தெரியப்படுத்துகிறோம்’’ என்றார்.

லோகு அய்யப்பன்
லோகு அய்யப்பன்

கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனைத் தொடர்பு கொண்டோம். ‘‘அமைச்சரவையின் முடிவுப்படி, மக்கள் சேவையில் பங்களித்த தலைவர்களின் பெயர்களைப் பள்ளிகளுக்கு வைத்திருக்கிறோம். இதற்கு முன்பும் இப்படிப் பல பள்ளிகளுக்குத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. வேறெந்தத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தாலும், அவர்களின் பெயர்களையும் வைக்கத் தயாராகவே இருக்கிறோம். வெங்கையா நாயுடுவை ‘வெங்கையா’ என்று மட்டும் குறிப்பிட முடியுமா? ஆவணங்களிலுள்ள பெயர்களைத்தானே வைக்க முடியும்’’ என்றார்.

எத்தனை காரணங்களை, சமாதானங்களைச் சொன்னாலும், ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று கற்பிக்கும் பள்ளிகளின் பெயர்கள், சாதிகளைத் தாங்கி நிற்பது சரியா... நியாயமா... அறமாகுமா?