Published:Updated:

`பெற்றோரின் ஊக்கம்; ஓய்வுபெறும் நாளிலும் ரூ.50,000 நிதி!' - நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியை

ஆசிரியை  ராஜசுலோச்சனா
ஆசிரியை ராஜசுலோச்சனா

டாக்டர், இன்ஜினீயர், வக்கீல் என என்னிடம் படித்த மாணவர்கள் பலரும் தற்போது நல்ல நிலையில் இருக்காங்க. இன்னும் பலரை உருவாக்கணும்னுதான் எனக்கு ஆசை. அதுக்குல்லயும் ஒய்வு வந்திருச்சு. ஆனாலும், தொடர்ந்து என்னால் முடிஞ்ச உதவிகளை மாணவர்களுக்குச் செய்யணும்."

திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ராஜசுலோச்சனா. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். பள்ளி சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர்கள் மீது அதீத அன்பு காட்டியதாலோ என்னவோ கனத்த இதயத்தோடு மாணவர்கள் பள்ளியைவிட்டு அனுப்பி வைத்ததாகக் கூறுகின்றனர். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அப்போது, மாணவர்கள் பள்ளியில் கூடுதல் நேரங்கள் செலவிடுவார்கள். அந்தச் சமயத்தில் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் மாலையில் டீ, பிஸ்கட், பயறு வகைகள் உள்ளிட்ட சிற்றுண்டியைத் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுக்கிறார்.

ஆசிரியை  ராஜசுலோச்சனா
ஆசிரியை ராஜசுலோச்சனா

படிக்க முடியவில்லை என்று கூறும் மாணவர்கள் மீது தனிக்கவனம் எடுத்துக் கொள்வது. மாணவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியைச் செய்வது என ஆசிரியையின் பணி ஏராளம் என்கின்றனர் பள்ளி சக ஆசிரியர்கள். இந்த நிலையில்தான், பள்ளியிலிருந்து ஓய்வு பெறும் நாளில், நம் பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய ராஜசுலோச்சனா, பள்ளியின் புரவலர் நிதியாகத் தன் சொந்தப்பணம் ரூ.50,000-த்தைப் பள்ளி தலைமையாசிரியர் முருகையனிடம் கொடுத்து அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தார்.

1974-லேயே கீழடியைக் 'கண்டுபிடித்த' பள்ளி ஆசிரியர்! - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வியப்புப் பகிர்வு

இதுபற்றி ஆசிரியர் ராஜசுலோச்சனா கூறும்போது, ``அப்படி நான் ஒன்றும் பெரிய சாதனை எல்லாம் செய்துவிடவில்லை. ஒரு ஆசிரியையாக என் மாணவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்துள்ளேன். புதுக்கோட்டை பக்கத்துல வெட்டன்விடுதிதான் எனக்குச் சொந்த ஊரு. எல்லாரையும் போலவே ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் என்னை எங்க அம்மா, அப்பா படிக்க வச்சாங்க. பள்ளியில் மாணவர்கள் சிலர் சரியாகப் படிக்க மாட்டாங்க, அவர்களைத் தனியாக அழைத்துப் பேசினால், தன்னோட குடும்பச் சூழல் பத்தி ரொம்பவே சோகமாகச் சொல்வாங்க. அவங்க வீட்டுல ஒருத்தியா அதக்கேட்டுகிட்டு, அவங்க பெற்றோர்களையும் அழைத்து என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். மாணவர்கள், எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்னு சொல்லிட்டு படிப்பில கவனம் செலுத்திடுவாங்க. வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பதைப் போலத்தான் பள்ளியில் இருக்கும் நேரத்தையும் கடப்பேன். ஆரம்பத்தில் மாஞ்சன்விடுதி பள்ளியில் 17 வருடங்கள் பணி செய்தேன்.

ஆசிரியை  ராஜசுலோச்சனா
ஆசிரியை ராஜசுலோச்சனா

நான் போகும்போது அங்கு சமூக அறிவியலுக்கு ஆசிரியரே இல்லை. எனக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தது. முதல் வருடத்திலேயே சமூக அறிவியலில் சென்டம் ரிசல்ட் கொண்டு வந்தேன். தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டினர். அந்த ஊக்கம் இன்னும் நிறைய பணிகளைச் செய்யத் தூண்டியது. ஒவ்வொரு மாணவரிடமும் பல்வேறு திறமைகள் இருக்கும். கலை நிகழ்ச்சிகளில்தான் அவை தெரியும். அதனால், கலை நிகழ்ச்சிகளைப் பொறுப்பெடுத்து செய்தேன். பல சூழலில் தலைமையாசிரியர்களும் சக ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க. டாக்டர், இன்ஜினீயர், வக்கீல் என என்னிடம் படித்த மாணவர்கள் பலரும் தற்போது நல்ல நிலையில் இருக்காங்க. இன்னும் பலரை உருவாக்கணும்னுதான் எனக்கு ஆசை. அதுக்குல்லயும் ஓய்வு வந்திருச்சு. ஆனாலும், தொடர்ந்து என்னால் முடிஞ்ச உதவிகளை மாணவர்களுக்குச் செய்யணும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு