Election bannerElection banner
Published:Updated:

`சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்ல இந்த 3 குணங்கள் அவசியம்'- `ஜெயிக்கலாம் வாங்க'!

சிவில் சர்வீஸ் தேர்வு!
சிவில் சர்வீஸ் தேர்வு!

இதுமாதிரியான மாணவர்கள்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற விஷயமெல்லாம் மிகையூட்டப்பட்டது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதுதான். தங்கள் கனவுகளுக்காக தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆனால், அனைவருக்குமே வழிகாட்டுதல்கள் சரியாக கிடைப்பதில்லை. சேவை மனப்பான்மை, படிக்கும் ஆர்வம், விடா முயற்சி இவை அனைத்தும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி நிறைய பேர் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் ஐ.ஏ.எஸ் கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நடத்த உள்ளன.

இந்த ஆலோசனை முகாமானது, மதுரையில் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் 2020, மார்ச் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஐ.ஏ.எஸ் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்குப் புதிய வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுக்கும். தேர்வுகளைப் புரிந்துகொள்ள உதவியாகவும் பல்வேறு ஆலோசனைகளை கொடுக்கும் வகையிலும் இருக்கும்.

`சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்ல இந்த 3 குணங்கள் அவசியம்'- `ஜெயிக்கலாம் வாங்க'!

ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் பற்றிய இந்தக் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன் ஆர்.ராம் கிருஷ்ணன் ஐ.ஆர்.எஸ். உதவி ஆணையர், ஜி.எஸ்.டி. மதுரை, ஸ்மார்ட் லீடர் நிறுவனத்தின் நிறுவனர் எம்.ஏ.சாதிக் அலி ஆகியோரும் கலந்துகொண்டு ஊக்க உரையையும் ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து பேசிய மதுரை ஜி.எஸ்.டி உதவி ஆணையர் ஆர். ராம் கிருஷ்ணன் ஐ.ஆர்.எஸ், ``சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் எழுத முடியும் என்ற அவநம்பிக்கை சமுதாயத்தில் உள்ளது. ஆங்கில வழிக் கல்வி பயின்றவங்க, நகரத்துல இருக்குறவங்க, டெல்லி பயிற்சி வகுப்பில் படிக்கிறவங்க.. இதுமாதிரியான மாணவர்கள்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற விஷயமெல்லாம் மிகையூட்டப்பட்டது.

ராம் கிருஷ்ணன் ஐ.ஆர்.எஸ்
ராம் கிருஷ்ணன் ஐ.ஆர்.எஸ்

எளிய பின்புலத்திலிருந்து வரும் எல்லாருமே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். அதற்கு நானே எடுத்துக்காட்டு! என்னுடைய அப்பா சாதாரண டிரைவர். அவருடைய பையன் எனக்கு இன்றைக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கு முக்கிய காரணம் சிவில் சர்வீஸ்தான். லஞ்சம், ரெகமன்டேஷன் எதுவும் இல்லாம உங்களுடைய தனித்திறமைக்கு மட்டுமே மதிப்பளித்து வாழ்க்கையில் முன்னேற நல்ல தளமாக இந்தத் தேர்வுகள் இருக்கும். போட்டித் தேர்வு முடிவுகள் வந்தப்போ வாழ்க்கையில் எல்லாமே மாறிடுச்சு" என்று பேசினார்.

இந்நிகழ்வு குறித்து பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர் ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம், ``சிவில் சர்வீஸ் தேர்வை பொறுத்தவரை ஆழ்ந்து படித்தல், பரவலாக படித்தல் இரண்டுமே தேவைப்படும். நுனிப்புல் மேய்ந்தது மாதிரி எழுதக்கூடிய தேர்வு இதுகிடையாது. ஒரு பாடத்தை ஆழமாக படித்தால் தான் எழுதமுடியும். அரைகுறையாக படித்தால் வெற்றிபெற முடியாது. இந்தத் தேர்வுக்கு ஆங்கிலம், தமிழ் என எந்த மீடிய கல்வி படித்தாலும் எழுதலாம். ஆங்கிலம் புரியவில்லை என்றால் தமிழ் புத்தகத்தைப் படித்து அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், தேர்வில் எப்படி பிரசண்ட் பண்ணுகிறோம் என்பதை பொறுத்துதான் நமது வெற்றி இருக்கிறது. இதை மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்
ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்

இந்த பொதுத் தேர்வுகளுக்கு எப்படி பிளான் செய்வது, எப்படி படிப்பது, என்னென்ன புத்தங்களை படிப்பது, எப்படி டைம் மேனேஜ் செய்வது, எப்படி படிக்கணும், கேள்விகளை எதிர்கொள்வதற்கு எப்படி நம்மை தயார் செய்துகொள்வது போன்று குறித்து இந்நிகழ்வில் பேசப்போகிறேன். மேலும், இந்த தேர்வைப் பொறுத்தவரை நிறைய படிக்க வேண்டி இருக்கும். சிஸ்டமேட்டிக்காக நேரத்தை நிர்வகித்து படித்து தேர்வில் வெற்றிபெறுவது எப்படி என்பதை இந்த நிகழ்வில் அறிந்துகொள்ளலாம்" என்றார்.

ஸ்மார்ட் லீடர் நிறுவனத்தின் நிறுவனர் எம்.ஏ.சாதிக் அலி இதுதொடர்பாக பேசியபோது, ``சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அடிப்படைகளை மாணவர்களுக்கு இந்த விழாவில் சொல்லவுள்ளேன். சிவில் சர்வீஸ் கனவோடு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இப்போது இருந்தே என்ன செய்ய வேண்டும், என்பது குறித்து முழுமையாக விளக்கவுள்ளேன். சிவில் சர்வீஸ் குறித்து மாணவர்களுக்குப் போதிய தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். சிலருக்கு இதில் ஆர்வம் இருந்தாலும், அவர்களுக்கு இந்தத் தேர்வுகளை எப்படி எழுவது என்று தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்தத் தேர்வில் இதுவரை வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் நகரப்பகுதிகளில் இருந்து வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக தான் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வு கிடைத்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டால் மாணவர்களுக்கு கூடுதல் தெளிவு ஏற்படும். எனவே, மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

சாதிக் அலி
சாதிக் அலி

இந்த நிகழ்வில் எங்கள் நிறுவனம் சார்பில் ஒரு தேர்வு நடத்தவுள்ளோம். அது எதற்கென்றால் பணம் இல்லாததால் பல மாணவர்களின் சிவில் சர்வீஸ் கனவு நனவாகாமலே போகிறது. இதைப் போக்க வருடா வருடம் எங்கள் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு டெஸ்ட் நடத்தி அதில் வெற்றிபெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கான படிப்புச் செலவு வசூலிப்பதில்லை. அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பவர்களுக்கு அதற்கேற்றார்போல் கட்டணங்கள் வசூலிக்கப்படும். மேலும், மாணவர்கள் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது போன்ற விளக்கவுரைகளை வழங்க இருக்கிறேன்" என்றார்.

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால்போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு