Published:Updated:

நிஜ கல்வி வள்ளல்... துளசி அய்யா எனும் மாமனிதர்!

இங்கு உயர் கல்வி கற்றவர்கள் உலகின் பல நாடுகளில் பல துறைகளில் வல்லுநர்களாகத் திகழ்கிறார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். இவர்கள் இப்போதும்கூட இக்கல்லூரியை மானசீகமாக நேசிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்விச் சேவை ஆற்றி வரும் தஞ்சை பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியின் செயலாளர் துளசி அய்யா வாண்டையாரின் மறைவுச் செய்தி இப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருகாலத்தில், கல்விப் பணியில் ஈடுபட்டவர்கள், அதை ஒரு சேவையாகவே நினைத்து தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். ஆனால் காலப்போக்கில், கல்வி என்பது ஒரு வியாபாரமாகவே மாறிப்போனது. கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்களுக்குத் தாங்களே கல்வி வள்ளல், கல்வி காவலர் பட்டம் சூட்டி மகிழ்கிறார்கள்.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

உண்மையில், கல்விச் சேவை என்றால் என்ன? இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர், பூண்டி ஸ்ரீபுஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையார். 1956-ம் ஆண்டு இவருடைய பெரியப்பா வீரையா வாண்டையாரால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. துளசி அய்யா வாண்டையார் இதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, இக்கல்லூரியைத் திறம்பட நடத்தி, விரிவுபடுத்தினார்.

ஒருகாலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. குறிப்பாக விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரிக்குச் செல்வது என்பது மிகவும் அரிது. அந்தக் காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில அரசு கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அதிலும்கூட மிகவும் குறைவான இடங்கள் மட்டுமே இருந்தன. அக்கல்லூரிகளில் பெரும்பாலும் உயர்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய நிலை இருந்தது. இதனால் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதென்பது கானல் நீராகவே இருந்தது.

இந்நிலையில், இந்த மாணவர்களின் கல்வி சரணாலயமாகவே பூண்டி புஷ்பம் கல்லூரி திகழத் தொடங்கியது. மிகவும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கியது. இப்போதுவரை அதே நிலை தொடர்கிறது. மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்கள் கட்டணமே இல்லாமலும் இங்கு பயில்கிறார்கள். இதனால் இக்கல்லூரியை `தர்மக் கல்லூரி' எனச் செல்லமாகப் பெயர் சூட்டியும் இப்பகுதி மக்கள் அழைப்பதுண்டு.

அதே நேரம், கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிக்க மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியது. தங்கள் வீட்டுப்பிள்ளைகள் இக்கல்லூரியில் படிப்பதையே மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள் இப்பகுதி மக்கள். இக்கல்லூரியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் ஒன்றையும் உருவாக்கியுள்ளர் துளசி அய்யா வாண்டையார். வேறு எங்குமே கிடைக்காத, மிகவும் தொன்மையான, அரிய நூல்களை இங்கு சேகரித்து வைத்துள்ளார்.

பூண்டி புஷ்பம் கல்லூரி
பூண்டி புஷ்பம் கல்லூரி

இங்கு உயர் கல்வி கற்றவர்கள் உலகின் பல நாடுகளில் பல துறைகளில் வல்லுநர்களாகத் திகழ்கிறார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். இவர்கள் இப்போதும்கூட இக்கல்லூரியை மானசீகமாக நேசிக்கிறார்கள். காரணம்... துளசி அய்யா வாண்டையாரின் கல்வி அறம். இன்று வரையிலுமே இக்கல்லூரியில் நன்கொடை பெறுவதென்பதே கிடையாது. கட்டணமும் மிகக் குறைவு. கட்டணமே செலுத்த முடியாத நிலையில் உள்ள ஏழை மாணவர்களுக்கும்கூட இங்கு கல்வி புகட்டினார் கல்வி வள்ளல் துளசி அய்யா வாண்டையார்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகள் இங்கிருந்துதான் சிறக்கடிக்கத் தொடங்கினார்கள். கல்லூரி என்பது பணம் உற்பத்தி செய்யும் இடமல்ல, பட்டதாரிகளை உயிர்ப்பிக்கும் கருவறை. இதை நிஜத்தில் நிகழ்த்திக்காட்டினார் துளசி அய்யா வாண்டையார்.

மாமனிதருக்கு அஞ்சலிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு