Published:Updated:

`நடுத்தரக் குடும்ப மாணவர்கள்... கல்வி கட்டணக் குறைப்பு!' - முன்மாதிரியான ஆத்தூர் தனியார் பள்ளி

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் ( எம். விஜயகுமார் )

கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் விதத்தில் தனியார் பள்ளியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

''எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய எங்களுடைய நிர்வாக இயக்குநர்கள் கலந்து ஆலோசித்து 2020-21 கல்வியாண்டுக்கான கட்டணக் குறைப்பு செய்ய முடிவெடுத்தார்கள்.''

விழா..
விழா..

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பிறப்பித்த ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சாமானியர்களும், நடுத்தர மக்களும் உதவி பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவ இரக்கமுள்ள பலரும் முன் வந்திருப்பது கொரோனா துயரத்திலும் சமூகத்தின் மீது நம்பிக்கையும் பற்றுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் பலரும் பலவிதத்தில் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சேலம் ஆத்தூரில் உள்ள மலர் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2020-21 கல்வியாண்டுக்கான சிறப்பு வகுப்புக் கட்டணம் மற்றும் வாகனக் கட்டணத்தை பள்ளி நிர்வாகம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

பள்ளி
பள்ளி

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த புதுப்பேட்டையில் மலர் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாகவும் பெயர் பெற்றுள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் மாணவ, மாணவிகளின் குடும்ப வருமான இழப்பில் பங்கெடுத்து சிறப்பு வகுப்புக் கட்டணத்தையும், வாகன கட்டணத்தையும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி மலர் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் நித்யாதேவி, ``கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அதையடுத்து எங்கள் பள்ளியின் நிர்வாக இயக்குநர்களான நிரேஷ்குமார், சதீஷ்குமார், யோகேஷ், மணி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாணவ, மாணவியையும் தொடர்புகொண்டு வீட்டில் பாதுகாப்பாகவும் தனித்திருக்கச் சொல்லியும் வலியுறுத்தி இருக்கிறோம்.

நித்யா தேவி
நித்யா தேவி

ஆத்தூர் வட்டாரத்திலேயே எங்கள் பள்ளி முன்மாதிரியானது. எங்க பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது, ஒரு விதத்தில் உதவி செய்ய எங்களுடைய நிர்வாக இயக்குநர்கள் கலந்து ஆலோசித்து 2020-21 கல்வியாண்டுக்கான கட்டணக் குறைப்பு செய்ய முடிவெடுத்தார்கள். அதையடுத்து பள்ளியின் சிறப்பு வகுப்பு கட்டணத்தையும், வாகன கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்திருக்கிறார்கள்.

இதனால் ஒரு வருடத்துக்கு மாணவர்களிடம் யோகா, சிலம்பம், கராத்தே, ஓவியம், நடனம், ஸ்போக்கன் இங்கிலீஷ், இசை போன்ற சிறப்பு வகுப்பு கட்டணமாக சுமார் 2,000 முதல் 3,000 வரையும் வாகன கட்டணம் தொலைவுக்கு ஏற்றவாறு 3,000 முதல் 5,000 வரை வசூலிக்கப்படும். இந்த இரண்டு கட்டணங்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதால் ஒரு மாணவர் வருடத்துக்கு 5,000 முதல் 8,000 வரை பயனடைவார்கள். இந்தச் சலுகை 2020 புதிய மாணவ, மாணவியர் சேர்க்கைக்கும் பொருந்தும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு