Published:Updated:

`சமையலர், இரவுக் காவலர் பணியிடம்..! - விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய சேலம் கல்லூரி

ஶ்ரீ சாரதா கல்லுரி
ஶ்ரீ சாரதா கல்லுரி

3 ஆண்டுகளுக்கு முன்பே வார்டன் பணிக்குத் தலித் அல்லாதோர் விண்ணப்பிக்க வேண்டுமென விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.

`சமையலர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு பி.சி, எம்.பி.சி ஆட்கள் தேவை' என விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சேலம் சாரதா கல்லூரி நிர்வாகம்.

விளம்பரம்
விளம்பரம்

சேலம் ஐந்து ரோட்டிலிருந்து அஸ்தம்பட்டி செல்லும் வழியில் உள்ளது ஶ்ரீ சாரதா மகளிர் கலைக் கல்லூரி. இக்கல்லூரி 1961-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். தன்னாட்சி பெற்றக் கல்லூரியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கல்லூரி விடுதியில் சமையலர் பணிக்கு ஓ.சி, பி.சி, சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இரவுக் காவலர் பணிக்கு பி.சி, எம்.பி.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பிரவீன், ``ஶ்ரீ சாரதா மகளிர் கல்லூரியை ராமகிருஷ்ணா தபோவனம் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கல்லூரிக்குள் சாதி பாகுபாடு பார்த்து வருகிறார்கள். 3 ஆண்டுகளுக்கு முன்பே வார்டன் பணிக்குத் தலித் அல்லாதோர் விண்ணப்பிக்க வேண்டுமென விளம்பரம் கொடுத்திருந்தார்கள். அதைக் கண்டித்ததோடு அன்றைக்கு இருந்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரவீன்
பிரவீன்

கல்லூரி விடுதியில் உள்ள சமையலறையில் வெங்காயம், பூண்டு பயன்படுத்துவதில்லை என எழுதி ஒட்டி இருப்பதாக அங்கு பயின்ற சில மாணவிகள் எங்களிடம் கூறி இருக்கிறார்கள். உண்மையில் ஶ்ரீ சாரதா கல்லூரி யாருக்கானது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இக்கல்லூரியில் சமையலர் பணிக்கும் இரவு காவலர் பணிக்கும் சாதியைக் குறிப்பிட்டு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாதி ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து போராட்டம் நடத்துவதோடு இந்தக் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் கொடுக்க இருக்கிறோம்'' என்றார்.

கல்லூரி
கல்லூரி

விளம்பர சர்ச்சை குறித்து ஶ்ரீசாரதா கல்லூரி முதல்வர் உமாராணியிடம் கேட்டதற்கு, ``அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சமையலர் பணிக்கு ஓ.சி, பி.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், இரவுக் காவலர் பணிக்கு பி.சி, எம்.பி.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குமான இடங்கள் மட்டுமே தற்போது காலியாக இருக்கிறது. அதனால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் கொடுத்திருந்தோம். மற்றபடி சாதிபாகுபாடு பார்த்து விளம்பரம் கொடுக்கவில்லை'' என்றவரிடம், ``ஒதுக்கீட்டின்படி சமையலர் பணியில் எத்தனை எஸ்.சி, எஸ்.டி மக்கள் பணிபுரிகிறார்கள்?" என்றோம். இதற்குக் கல்லூரி முதல்வரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அடுத்த கட்டுரைக்கு