Published:Updated:

விலையில்லா மிதிவண்டித் திட்டம் நிறுத்தப்படுகிறதா? - அரசுத் தரப்பு விளக்கம்!

வி.எஸ்.சரவணன்

விலையில்லா மிதிவண்டித் திட்டம் நிறுத்தப்படுகிறதா?

மிதிவண்டி
மிதிவண்டி

தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகம், காலணி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இலசமாகக் கொடுக்கப்படுகின்றன. இலவசம் எனும் சொல்லைத் தவிர்த்து 'விலையில்லா' திட்டம் எனச் சொல்லி வருகிறது. 2001 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது இந்தத் திட்டம். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் என இருந்ததை, பின் அனைவருக்கும் என மாற்றி அமைத்தார்கள். பேருந்து வசதிகள் அதிகம் இல்லாத மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்தத் திட்டம் இருந்தது. ஆனால், இந்தத் திட்டம் நிறுத்தப்பட இருப்பதாகச் செய்திகள் வந்தன.

மிதிவண்டி
மிதிவண்டி

2013 -14 ஆம் நிதி ஆண்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்க, 217 கோடி ரூபாயும், 2014 -15 ஆம் ஆண்டில் 218 கோடி ரூபாயும், 2015 -16 ஆம் ஆண்டில் 235 கோடி ரூபாயும், 2016 -17 ஆம் ஆண்டில் 250 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கிய நிலையில், 2017 - 18 ஆம் ஆண்டில் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பதை தணிக்கைத் துறையில் அறிக்கை வழியே தெரியவந்திருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டான 2018- 19 ஆண்டுக்கு நிதி ஒதுக்கியதற்கான குறிப்புகளும் இல்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியதாக இருப்பது முரணாக இருக்கிறதே என்று, கல்வி செயற்பாட்டாளர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தாமல் முடிக்கவிருக்கிறதோ என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

இந்தத் திட்டத்தால் கிடைக்கும் சைக்கிள் மாணவர்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது
மிதிவண்டி
மிதிவண்டி

அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் இது குறித்து கேட்டபோது, "பாடப் புத்தகங்களே உரிய நேரத்தில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் சில வகுப்புகளுக்கு மட்டும் கொடுக்காமல் இருப்பார்கள். அதை வாங்குவதே பெரும் போராட்டம்தான். அதேபோல லேப் டாப் வழங்குவதிலும் நிறைய பிரச்னைகள் வரும். விலையில்லா மிதிவண்டி சென்ற ஆண்டு எங்கள் பகுதியில் வழங்கப்படவில்லை. மற்ற இடத்தில் எப்படி என்று தெரியவில்லை. அந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டன. இன்னும் பல இடங்களில் வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தால் கிடைக்கும் சைக்கிள் மாணவர்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது. எங்கள் ஊரில் பள்ளி தொடங்கும் நேரத்துக்கு ஒரு பஸ் வரும். ஆனால், பெரும்பாலும் அது தாமதமாகவே வரும். அதனால், அதில் வரும் மாணவர்கள் முதல் வகுப்பை முழுமையாகக் கேட்க முடியாத நிலைதான் இருந்தது. சைக்கிள் கொடுத்ததும் சரியான நேரத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மாணவிகள் வருவதற்கு ஈஸியாக இருக்கிறது. அதனால், சைக்கிள்கள் வழங்குவதை நிறுத்தாமல் இருந்தால் நல்லது" என்று கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

"விலையில்லா மிதிவண்டித் திட்டம் நிறுத்தப்பட விருக்கிறதா?" என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அவர்களைத் தொடர்புகொண்டேன். "நிச்சயமாக இல்லை. இப்போதுதான் இது தொடர்பான அதிகாரிகளுடன் பேசினேன். போன வருஷம் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ இரண்டு வகுப்பு மாணவர்களுக்கும் கொடுத்தோம். அதற்கு முந்தைய வருஷம்தான் சில காரணங்களால் கொடுக்க வில்லை. இந்த வருஷம் அனைத்து சி.இ.ஓக்களுக்கு கடிதம் அனுப்பி, மாணவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறோம். அதனால் எந்தந் தடையும் இல்லை. நீங்கள் நியூஸ் பேப்பரில் பார்த்தாலே தெரியுமே! எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் எனப் பலரும் விலையில்லா மிதிவண்டிகள் கொடுக்கும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறதே! நிதி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பதும் சரியான தகவல் இல்லை. அதற்கு முந்தைய ஆண்டுக்கான விடுபடலுக்காக இருக்கலாம்." என்றார்.

மிதிவண்டி
மிதிவண்டி

"மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவதிலும் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே?" எனக் கேட்டேன். "2019 -20 கல்வி ஆண்டில், 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கிக்கொண்டிருக்கிறோம். திருவள்ளூரில் இரண்டு பள்ளிகள் தவிர அனைத்துக்கும் கொடுத்துவிட்டோம். சென்ற ஆண்டு வழங்கப்படாத மாணவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயம் கொடுக்கப்படும்." என்றார்.