Published:Updated:

பெற்றோர்களும் இனி பள்ளியின் அங்கம்!

பள்ளி மேலாண்மைக் குழு
பிரீமியம் ஸ்டோரி
பள்ளி மேலாண்மைக் குழு

பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்து திறம்படச் செயல்படுத்துவதற்காக, மார்ச் 20-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் கூட்டம் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

பெற்றோர்களும் இனி பள்ளியின் அங்கம்!

பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்து திறம்படச் செயல்படுத்துவதற்காக, மார்ச் 20-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் கூட்டம் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

Published:Updated:
பள்ளி மேலாண்மைக் குழு
பிரீமியம் ஸ்டோரி
பள்ளி மேலாண்மைக் குழு

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பாக, பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு கருதப்படுகிறது.

பெற்றோர்களும் இனி பள்ளியின் அங்கம்!

இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லான, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’ 2009-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு இதற்கான சட்ட விதிகளைத் தமிழ்நாடு அரசு வகுத்தது. கல்வி உரிமைச் சட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த அடிப்படையாக இருப்பது, இச்சட்டத்தின் முக்கிய அங்கமான ‘பள்ளி மேலாண்மைக் குழு’ என்ற கட்டமைப்பு. பள்ளிகளின் வளர்ச்சிக்குச் சமூகப் பங்களிப்பைக் கொண்டுவருதல், பள்ளியின் செயல்பாட்டைக் கண்காணித்தல், குழந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதிசெய்தல் ஆகியவை இந்தக் கட்டமைப்பின் முதன்மைப் பணிகளாக வரையறுக்கப்பட்டன.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மிகச் சில பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டுவந்த பள்ளி மேலாண்மைக் குழு, அதன் முழுமையான நோக்கத்தை எட்டாமல் பெயரளவில் மட்டுமே இயங்கிவந்தது. இந்தப் பின்னணியில்தான், பள்ளி மேலாண்மைக் குழு இப்போது மறுகட்டமைப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

பெற்றோர்களும் இனி பள்ளியின் அங்கம்!

பள்ளி மேலாண்மைக் குழுவின் பின்னணி குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ்.

“ஒரு பள்ளியின் மேம்பாட்டுக்கான மேலாண்மை என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசாங்கம் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; அதன் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கான பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்பதும் பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் குழுவை மறுநிர்மாணம் செய்ய வேண்டும் என்ற நிலையில், 2011-க்குப் பிறகு அது சீராகச் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், 2019-ல் போடப்பட்ட அரசாணை, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இக்குழு மறுநிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது. அந்தச் சூழலில் கொரோனாப் பெருந்தொற்று பரவியதால், உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இப்போது நிலைமை ஓரளவு சீராகியிருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள் இப்போது தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன” என்றார்.

பெற்றோர்களும் இனி பள்ளியின் அங்கம்!

“மொத்தம் 20 உறுப்பினர்களைக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவில் பெற்றோர்கள் 15 பேர் இடம்பெறுவார்கள். தலைவர், துணைத் தலைவராக பெற்றோர் மட்டுமே தேர்வு செய்யப்படவேண்டும்; குழுவின் தலைவராக பெண்களுக்கும், துணைத் தலைவராகச் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், உறுப்பினர்களில் 50 சதவிகிதம் பெண்கள் இடம்பெறவேண்டும் என்பவை இக்குழு உருவாக்கத்தின் அடிப்படை விதிமுறைகள்.

மேலும், ஆசிரியர்கள் இரண்டு பேர் (தலைமை ஆசிரியர், ஓர் ஆசிரியர்), மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர், கல்வி ஆர்வலர் ஒருவர் என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் பள்ளி மேலாண்மைக் குழுவில் அங்கம் வகிப்பார்கள். இக்குழுவின் வழிகாட்டியாகத் தலைமை ஆசிரியர் செயல்பட வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யவேண்டும் என்பது சட்டத்தின் விதிமுறையாக உள்ளது” என்று இக்குழுவின் கட்டமைப்பை விளக்குகிறார் சுதன்.

“பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்து திறம்படச் செயல்படுத்துவதற்காக, மார்ச் 20-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் கூட்டம் நடத்த ஏற்பாடாகியுள்ளது. தமிழ்நாட்டின் 52 லட்சம் பெற்றோர்களிடம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். அதன்பிறகு ஒரு வாரத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, குழுவின் பணிகள் தொடங்கும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் சந்திக்கும் இக்குழுவின் செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்குச் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார்.

பெற்றோர்களும் இனி பள்ளியின் அங்கம்!

பள்ளி மேலாண்மைக் குழு அப்படியென்ன சாதிக்கும்?

திருப்பூர் இடுவம்பாளையத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்திருக்கிற மாற்றம் சிறு உதாரணம். முன்பு ஆயிரமாக இருந்த இந்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 3,096.

“இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்பவர்கள். ஆனால் பள்ளிமீது அவர்கள் காட்டுகிற அக்கறை ஆச்சர்யப்படவைக்கும். பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு மாதமும் 4வது வெள்ளிக்கிழமை கூடும். ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிச்சூழல் என எல்லா விஷயங்களையும் அதில் விவாதிப்பார்கள். பள்ளிக்கு என்னென்ன தேவை என்பதைப் பேசுவோம். ஒரு கூட்டத்தில் குடிநீர்க் குழாய்க்கான பைப்லைன் இருந்தால் உதவியாக இருக்கும் என்றோம். குழுவில் இருக்கும் இரண்டு உறுப்பினர்கள் நாங்களே செய்து தருகிறோம் என்று இரண்டு நாள்களில் முடித்துவிட்டார்கள். ஒரு உறுப்பினர், தான் வேலை செய்யும் கம்பெனியில் பேசி சிசிடிவி அமைத்துத் தந்தார். இன்னொருவர் டேபிள்கள், சேர்கள் வாங்கித்தந்தார். காலையில் மாணவர்கள் வரும் நேரத்திலும் மாலையில் பள்ளி விட்டுச் செல்லும் நேரத்திலும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளியின் வாசலில் நின்று கண்காணிப்பதோடு மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் ஈடுபடுவார்கள். பள்ளி என்பது ஆசிரியர்கள் கட்டுப்பாட்டில் இருக்குமிடம், அங்கே பெற்றோருக்கு இடமில்லை என்ற நிலை அரசுப் பள்ளிகளில் இல்லை. இது எல்லோருக்குமான பள்ளி. அதுதான் எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு அடிப்படை” என்கிறார் பள்ளியின் ஆசிரியை வசந்தகுமாரி.

சுதன்
சுதன்

புதுக்கோட்டை மாவட்டம், ரெங்கம்மாள் சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியும் பள்ளி மேலாண்மைக் குழுவால் ஆக்கபூர்வமான பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது.

“எங்கள் பள்ளியில் 89 மாணவர்கள் படிக்கிறார்கள். பாதிக்கும் மேல் ஊசி பாசி மணி விற்கும் மக்களின் குழந்தைகள். பல பெற்றோர் ஈயம் பூசும் தொழிலாளர்கள். பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்ட பிறகு, பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் சேர்த்துப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். எங்கள் மேலாண்மைக் குழுவின் தலைவி ரஞ்சிதா, ஊசி பாசி மணி விற்பவர். ஒரு மாற்றுத்திறனாளி மாணவனின் தாய்தான் துணைத்தலைவர். மாதம் ஒருமுறை குழுவின் கூட்டம் நடக்கும். அத்தனை அக்கறையாக பள்ளி பற்றிப் பேசுவார்கள். பிள்ளைகள் பற்றி விசாரிப்பார்கள். பள்ளி மேம்பாட்டுக்கான உதவிகளைப் பெற எல்லோரும் ஒருங்கிணைந்து செல்வோம். பெற்றோர்தான் நன்கொடையாளர்களிடம் பேசுவார்கள். பள்ளியின் சூழல் மாறியதால் இவ்வாண்டு 11 மாணவர்கள் கூடுதலாக இணைந்திருக்கிறார்கள்...” என்கிறார், பள்ளியின் தலைமையாசிரியை மகாலட்சுமி.

சோர்ந்துபோயிருக்கும் அரசுப்பள்ளிகளுக்கு இந்த முயற்சி மிகப்பெரிய தெம்பை அளிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism