Published:Updated:

`அன்பின் வழியில் ஊக்கப்படுத்தினால் எதையும் செய்வார்கள்!'- மாணவியை கௌரவப்படுத்திய தலைமை ஆசிரியர்

தலைமை ஆசிரியரான மாணவி மதுமிதா
தலைமை ஆசிரியரான மாணவி மதுமிதா

மாணவர்களை அன்பின் வழியில் ஊக்கப்படுத்தும்போது, அவர்கள் எதையும் செய்யத் துணிந்துவிடுவார்கள். அவர்களின் ஆசைகளை ஒரு தலைமை ஆசிரியராக நிறைவேற்ற வேண்டும் என்பதே என் முழு எண்ணம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த `நெசல்’ கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மதுமிதா என்கின்ற மாணவி `ஒருநாள் தலைமை ஆசிரியராக’ பொறுப்பேற்று பணியாற்றினார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசனிடம் பேசினோம். ``எனது பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 154 மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் 2 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

எங்களுடைய பள்ளி மாணவ மாணவியர்களிடையே படிக்கும் நோக்கத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி, அரையாண்டுத் தேர்வில் 10-ம் வகுப்பு மாணவர்களில் யார் முதல் மதிப்பெண் எடுக்கிறார்களோ அவர்கள் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றலாம். அந்த நாள் முழுவதும் பள்ளி அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று பிரேயரில் கூறினேன்.

`அன்பின் வழியில் ஊக்கப்படுத்தினால் எதையும் செய்வார்கள்!'- மாணவியை கௌரவப்படுத்திய தலைமை ஆசிரியர்

அதன்படி, அரையாண்டுத் தேர்வில் மதுமிதா என்ற மாணவி அதிக மதிப்பெண்கள் எடுத்தார். அவரின் இந்த முயற்சிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியில் அமர்த்தினேன். 28-ம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மதுமிதா தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இதன்மூலம் பல மாணவர்கள் நாமும் அதிக மதிப்பெண் எடுத்தால் இதுபோன்று ஆகலாம் என்ற எண்ணம் தோன்றும்” என்றார்.

மேலும் அவர், ``மாணவர்களை அன்பின் வழியில் ஊக்கப்படுத்தும்போது, அவர்கள் எதையும் செய்யத் துணிந்துவிடுவார்கள். அவர்களின் ஆசைகளை ஓர் ஆசிரியராக நிறைவேற்ற வேண்டும் என்பதே என் முழு எண்ணம். ஆசிரியர் அமரும் நாற்காலியில் மாணவர்கள் அமர்வதற்கு எவ்வளவு ஆசைப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதோடு எனக்கு என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். அதேபோன்று மாணவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்கின்றனர்” என்றார்.

`அன்பின் வழியில் ஊக்கப்படுத்தினால் எதையும் செய்வார்கள்!'- மாணவியை கௌரவப்படுத்திய தலைமை ஆசிரியர்

தலைமை ஆசிரியராக ஒருநாள் முழுவதும் பணியாற்றிய மாணவி மதுமிதாவிடம் பேசினோம். ``என் அப்பா, அம்மா நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். எங்களது வீட்டில் 3 பெண் பிள்ளைகள். நான் 2-வது பிள்ளை. நான் காலாண்டுத் தேர்வில் 380 மதிப்பெண்கள் எடுத்தேன். அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று படித்தேன். அதற்கு ஏற்றாற்போல் தலைமை ஆசிரியரும் எங்களை நன்றாகப் படிக்கும்படி ஊக்கப்படுத்தினார்.

ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பள்ளியில் உள்ள சக ஆசிரியர்கள் நான் வரும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். அது எனக்கு ஏதோ ஒருவிதமான மகிழ்ச்சியைத் தந்தது. நான் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இதே பள்ளிக்கு ஆசிரியராக வருவேன்” என்றார் மகிழ்ச்சியோடு.

அடுத்த கட்டுரைக்கு