கொரோனா ஊரடங்கு காரணமாக 2020, மார்ச் மாத இறுதியிலிருந்து பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. இந்தநிலையில், “பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களின் சுமை அதிகரித்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவிகிதப் பாடங்கள் குறைக்கப்படும்’’ என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜூலை 7-ம் தேதி அறிவித்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதொடர்ந்து ஜூலை 8-ம் தேதி, நீக்கப்பட்ட பாடங்களின் தலைப்புகளை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டது. அதில்தான் ‘உள்நோக்கத்துடன் சில பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன’ என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடப்பிரிவுகளும், 11-ம் வகுப்பில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடப்பிரிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க தங்கள் கொள்கைகளைக் கல்வித்திட்டத்தில் திணிக்கவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
“மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதுதான் எங்கள் நோக்கம்; இதில் அரசியலைக் கலக்காதீர்கள்’’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் விளக்கமளித்தார். ஆனால், இதில் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம்சாட்டும் கல்வியாளர்கள், “பாடப்பிரிவு நீக்கத்தால் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் மதிப்பெண்களை இழக்க வேண்டி வரும்” என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போட்டித் தேர்வில் பாதிப்பு!
இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, “போட்டித் தேர்வுகளுக்கு பாதிப்பில்லாத வகையில் பாடப்பிரிவுகளை நீக்கியதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் சொல்கிறது.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை பெரிதாகப் பிரச்னை இல்லை. ஆனால், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாற்றம் கண்டிப்பாகப் போட்டித் தேர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தவிர, அறிவியல் பாடத்தில் நீக்கப்பட்டுள்ள சில பகுதிகளால் மருத்துவம், பொறியியல் படிக்கும்போது மாணவர்கள் சிரமப்படுவார்கள். இந்தக் குறையைப் போக்க நீக்கப்பட்ட பாடங்களில் ஆன்லைன் அசைன்மென்ட், நோட்ஸ் கொடுத்து சிறிய தேர்வை வைக்கலாம். அதேபோல கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டிருப்பதில் அரசியல் இருக்கிறது. `கல்வியில் அரசியலைக் கலக்க வேண்டாம்’ என்பதே எங்களைப் போன்ற கல்வியாளர்களின் வேண்டுகோள்” என்றார்.
“பாடத்திட்டங்களைக் குறைப்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அது மீறப்பட்டிருக்கிறது. பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு இந்தப் பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படாமல் போகலாம். ஆனால், போட்டித் தேர்வுகளுக்கு இந்தப் பாடங்கள் முக்கியம். அதனால், மாணவர்கள் நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளையும் படித்து வைத்துக்கொள்வது நல்லது’’ என்றார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
திருக்குறளைக் காணோம்!
இது ஒருபுறமிருக்க... 9 மற்றும் 10-ம் வகுப்புகளின் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் திருக்குறள், பெரியார் சிந்தனைகள், எல்லைப் போராட்ட வரலாறுகள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இது குறித்துப் பேசியவர்கள், “பிரதமர் மோடி எல்லையில் திருக்குறளை வாசித்த சில நாள்களில் பாடத்தில் திருக்குறளை நீக்கியிருக்கிறார்கள். திருக்குறள், சிலப்பதிகாரமே இல்லாத ஒரு தமிழ்ப்பாடத்தை இந்த ஆண்டுதான் பார்க்கிறோம். `அறிவியல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் தமிழ்ப் பாடத்துக்குச் சம்பந்தமே இல்லாத பிரிவுகளெல்லாம் இருக்கும்போது, மிக முக்கியமான தலைவர்கள் மற்றும் போராட்டங்கள் குறித்துக் கற்பிக்கும் பாடப்பிரிவுகளையும் நீக்கியிருப்பது உள்நோக்கம் கொண்டது” என்கிறார்கள்.

“பாடங்களைக் குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைச் சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக்கொண்டு, அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங் களை நீக்கியிருப்பது தவறானது. நம் தலைவர்கள் குறித்தும் பண்பாடு குறித்தும் மாணவர்கள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் மத்திய பா.ஜ.க அரசு முனைப்பாக உள்ளது. தவிர, மத்தியில் ஆளும் அரசுக்கென்று அஜண்டா ஒன்று உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதைப் புகுத்தி வருகி றார்கள்’’ என்றார் தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் கல்வி அமைச்சரும் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரு மான வைகைச் செல்வனிடம் பேசினோம். “உள்நோக்கத்துடன் பாடப்பிரிவுகள் நீக்கப்படவில்லை. தவிர, `இது தற்காலிகமானது’ என்று மத்திய அமைச்சரே சொல்லிவிட்டார். அதேசமயம் பெரியாரின் சிந்தனைகள், எல்லைப் போராட்ட வரலாறுகள், ராஜராஜ சோழனின் வரலாற்றுப் பாடம் ஆகியவை புறக்கணிக்கப்படக் கூடாது. மத்திய அரசு இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.
பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவரான வானதி சீனிவாசனிடம் பேசினோம். “ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற பாடங்கள் மட்டும் நீக்கப்பட வில்லை; தேசியவாதம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகிய பாடப்பிரிவுகளும்தான் நீக்கப் பட்டுள்ளன. எந்தப் பாடப்பிரிவை நீக்கலாம் என்பதை முடிவு செய்தது கல்வியாளர்கள்தான். மாணவர்கள் பாதிக்கப்படாத அளவுக்குப் பாடங்களை நீக்கம் செய்வதில் துறைரீதியான அனுபவம் பெற்றவர்கள் அவர்கள். இன்னொன்று... தமிழில் மட்டும் பாடங்களைக் குறைக்கவில்லை, இந்தியிலும்தான் நீக்கியிருக்கிறார்கள். அதனால், இந்த விஷயத்தில் உள்நோக்கம் கற்பிப்பதைக் கைவிட வேண்டும்’’ என்றார்.
நீக்கப்பட்ட பாடங்கள்
சமூக அறிவியல்
10-ம் வகுப்பு
ஜனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், மதம், சாதி, பிரபலமான போராட்டங்கள், ஜனநாயகத்துக்கான சவால்கள்.
11-ம் வகுப்பு
கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகங்களின் வளர்ச்சி.
12-ம் வகுப்பு
பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் மாறும் இயல்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை.
தமிழ்
9-ம் வகுப்பு
இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு
பெரியாரின் சிந்தனைகள்
சீவக சிந்தாமணி
10-ம் வகுப்பு
திருக்குறள்
சிலப்பதிகாரம்
எல்லைப் போராட்ட வரலாறு
ராஜராஜ சோழன் மெய்கீர்த்தி
அறிவியல் மற்றும் இயற்பியல்
12-ம் வகுப்பு
நியூட்டனின் இயக்கவிதி (Laws of Motion)
ஒளியியல் (Optics)
தொடர்பியல் அமைப்புகள் மற்றும் மின்னணுச் சாதனங்கள்
(Communication System and Electronic Devices)
கணிதம்
முப்பரிமாண வடிவயியல் (3D Geometry)
தொடர்ச்சி மற்றும் வகைமை (Continuity and Dfferentiability)
ஈருறுப்புத் தேற்றம் (Binomial Theorem)
வேதியியல்
சுற்றுச்சூழல் வேதியியல் (Environmental Chemistry)
பலபடி (Polymers)
வேதியியலிலுள்ள தனிமங்களைத் தனிமைப்படுத்துவதற்கான பொதுவான கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் (General principles and processes of isolation of elements in chemistry)
உயிரியல்
மனித உடலியல் மற்றும் இனப்பெருக்கம்
(Human Physiology and Reproduction).